ஹொங்கொங் விமானநிலையம் இன்று முதல் இயங்கும்!

போராட்டக்காரர்களால் மூடப்பட்ட ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் இன்று முதல் இயக்கப்படுகிறது.

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த வரைபுக்கு எதிரான போராட்டம் 10 வது வாரத்தை எட்டி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்த போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் பொலிசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய வீதியில் படையெடுத்தனர்.

இதனால் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பொலிசார் இரப்பர் குண்டுகளால் சுட்டு, போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அதே சமயம் போராட்டக்காரர்கள் பொலிசார் மீது கற்களை வீசி எறிந்தனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், பொலிசார் சிலர் போராட்டக்காரர்களை போல் வேடமணிந்து கூட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகின் பரபரப்பான விமான நிலையமான, ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டதால், விமான போக்குவரத்தை ஹொங்கொங் அரசு இரத்து செய்தது.

விமான நிலையத்தை தொடர்ந்து மூடுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததால், “இன்று முதல் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு விமானங்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது ” என்று ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here