கம்பெரலியாவால் மடக்கப்பட்ட எம்வர்கள்: எதைப்பற்றியும் வாய் திறக்கிறார்கள் இல்லை: விக்னேஸ்வரன்!


இன்று ஆட்சியில் உள்ளவர்கள் எமது உரிமைகள் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. சலுகைகளைத் தரத் தாம் ஆயத்தம் என்றே தம்மைக் காட்டி வருகின்றார்கள். எம்மவர்களும் காலத்திற்குக் காலம் புதிய வாக்குறுதிகளுடன் அரசியல் பயணத்தில் தொடர்கின்றார்களே தவிர மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்கின்றார்களா என்பது வலுவான சந்தேகத்தைத் தருகின்றது.

அராலி மேற்கு முத்தமிழ் கூட்டுறவு கடல் தொழிலாளர் கூட்டுற சங்கத்தின் 30வது வருட நினைவு விழாவில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது உரிமைகளை வலிந்து முன்மொழிவதற்கும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமது தமிழ் அரசியல்த் தலைமைகளுக்குக் கிட்டிய போதும் அவற்றை எல்லாம் தமது அதிமேதாவித் தனத்தால் தூக்கியெறிந்து நிபந்தனைகள் எதுவுமற்ற ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்கி அரசாங்கத்தின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதனை எம்மவர்கள் அரசாங்கத்தவர்களுக்கு சுட்டிக்காட்டத் தமது தவறுக்குப் பதிலீடாக, எம்மவரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் கம்பெரலிய திட்டத்தின் கீழ் நிதிகளை வழங்கி வீதிகள் புனரமைப்பதற்கும் மற்றும் சிறு சிறு அபிவிருத்தி வேலைகளுக்கு நிதியை பயன்படுத்துவதற்கும் வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எம்மவரும் அவற்றை சலுகை அரசியலின் பெறுபேறுகள் என்று நினைத்து மகிழ்ந்துள்ளார்கள்.

இவையெல்லாம் இந்த அரசின் பெருந் தன்மையால் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எனக் கூறப்படுகின்றது. எமது மக்களின் மேம்பாட்டிற்காக எம் மக்களிடமிருந்து பெற்ற வரிப் பணத்தில் ஒரு தொகையைப் பிரித்து வழங்கி விட்டு எம் மக்களுக்கு ஒருவரும் செய்யாத மிகப் பெரிய சேவையைத் தாம் வழங்கி விட்டதாக மார்தட்டுகின்றார்கள் அரசாங்கத்தினரும் அவர்களின் அடிவருடிகளும். இவைகள் எல்லாம் எமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரித்துக்கள். 30 ஆண்டு யுத்தத்தின் பயனாக ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்ய காலந் தாழ்த்தி எமக்குத் தரப்பட்டு வரப்படும் உதவிகளே இவை.

நாம் வட மாகாண சபையில் பதவியில் இருந்த போது எமது அவசர தேவைகளை ஈடுசெய்ய பன்னிரெண்டாயிரம் மில்லியன் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்ட போது இரண்டாயிரம் மில்லியனுக்குக் குறைந்த நிதியைத் தந்தார்கள். அவற்றை நாம் ஒரு சதம் மிச்சம் வைக்காமல் மக்கள் நன்மைக்குப் பாவித்தோம். எமக்குத் தரப்பட்ட நிதியின் பத்து மடங்கு நிதியை மத்திய அரசாங்க அமைச்சர்கள் தம் வசம் எம் சார்பில் வைத்திருந்து தாம் எமக்கு உதவி செய்து வருவதாகக் காட்ட முனைந்தார்கள்.

ஆனால் அவர்கள் கொடுத்த பணத்தை மாவட்ட செயலாளர்கள் முற்றாகச் செலவு செய்ய முடியாமல் மத்திக்குத் திருப்பி அனுப்பினார்கள். அதை வைத்து வடமாகாணத்தவர் பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டனர் என்று கூறி எமது மாகாண சபையே அதற்குப் பொறுப்பு என்று கூறி அரசியல் இலாபம் பெற்றார்கள். இன்றும் நாங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பியது எதற்காக என்று பத்திரிகைகள் பல எங்களிடம் கேள்விகள் கேட்கின்றனர். நாங்கள் எமது ஐந்து வருடகால பதவி இருப்பின் போது ஒரு தம்பிடி காசைக் கூட மத்திக்குத் திருப்பி அனுப்பவில்லை. எமது நிதி நிர்வாகம் அகில இலங்கையிலும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட திணைக்களங்களுக்குள் முதலிடம் பெற்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மக்கள் நாளாந்தம் படுகின்ற துன்பங்கள், அவர்களின் துயர வலிகள், தமது உறவுகளை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள், காலாதி காலமாக வசித்து வந்த தமது நிலங்களில் சிறு கொட்டில்களையாவது அமைத்துக் கொண்டு அவற்றில் சில காலம் வாழக் கிடைக்குமா என்ற ஏக்கம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் எந்த ஒரு அரசியல் பிரதிநிதியும் சிந்தித்ததாக எமக்குத் தெரியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதன் மூலம் எமது மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்ற நிலையிலேயே தனி வழி போக நான் எத்தனித்தேன்.

சிலர் கேட்கலாம் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் துயர் துடைப்பதற்காக அரசியற் பிரவேசம் அவசியந் தானா என்று. அவர்களுக்கு நான் கூறக் கூடிய பதில் எமது அரசியற் பிரவேசம் என்பது சுயநலத்திற்காக அல்ல. ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாமல் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம் என்பதை உணர்ந்துள்ளோம். எமது மக்களின் தேவைகளையும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களின் ஏக்கங்களையும் எமது அரசிற்கும் சர்வதேச அரசியற் பிரதிநிதிகளுக்கும் பல்வேறுபட்ட நாடுகளுக்கும் எடுத்துக் கூறுவதற்கும் அவர்களை இந்த விடயங்களில் தலையிட்டு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு கோருவதற்கும் மக்களின் அங்கீகாரம் அவசியமாகின்றது. அரசியல் அதிகாரம் பெற்றால்த்தான் மக்களின் அங்கீகாரமும் கிடைக்கின்றது.

2013ல் என்னை அமோக வெற்றியுற செய்ததின் பலனே எனக்கு அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை வைத்தே நாம் சர்வதேசத்திற்கு உண்மை நிலையை இடித்துக் கூறக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதனாலேயே ஐ.நா மனித உரிமைகள் சபையில் தீர்மானங்களை நிறைவேற்றாமல் ஏமாற்று வழிமுறைகளை அரசு முன்னெடுத்த போது ஐ.நா மனித உரிமைகள் சபை சற்று விழித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எம்மைக் காண வந்த இளவரசர் உசேன் போன்றோருக்கு நாம் எழுத்து மூலம் கொடுத்த தரவுகள் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையின் செய்திகளில் பிரதிபலித்தன. அது மட்டுமல்லாமல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையையும் உலகம் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் நாம் செய்தோம்.

அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டும் உரித்தான சொத்து அல்ல. அரசியலில் யார் வேண்டுமானாலும் நீதியின்பால், நேர்வழி நின்று, மக்கள் சேவை செய்ய முன்வரலாம். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இறுதி வரை மனதில் வைத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களே இன்று அரசியலுக்குத் தேவைப்படுகின்றார்கள். பணம், பொருள் என எதுவித எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் சேவைக்காக முழுமையாகத் தங்களை அர்ப்பணிக்கக் கூடிய இளைஞர் யுவதிகளை விரைந்து வந்து எம் எல்லோருடனும் சேருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

இளைஞர் யுவதிகள் அரசியல் ஞானம் நிரம்பப் பெற்றவர்கள். கொள்கை வழியில் உறுதியாக நின்று தமது கோரிக்கைகளைப் பலமாக அரசுக்கு எடுத்துக் கூறக் கூடியவர்கள். இள இரத்தம் புதிய புதிய சிந்தனைகளையும் அதற்கான செயல் வடிவங்களையும் எடுத்துத் தரவல்லன. அவர்களை களத்தில் இறக்கி விட்டு அவர்கள் ஏதேனும் காரணத்தினால் தடம் மாறுகின்ற போது அவர்களை மீண்டும் சரியான தடத்தில் நிறுத்தி வைத்து பயணத்தைத் தொடர்கின்ற செயற்பாட்டை முதியவர்களாகிய என்னைப்போன்றவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

மது கொள்கையுடன் ஒத்து செயற்படக் கூடியவர்கள் மற்றும் தங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உங்கள் மத்தியில் உள்ளவர்கள் அரசியற் களத்தில் எம்முடன் இணைந்துகொண்டு எமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு நிரந்தர ஒத்துழைப்புக்கள் வழங்க முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். அரசியற் பயணத்தை நாம் தொடர்ந்து ஒன்று சேர்ந்து முன்னெடுக்க உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் அன்பையும் வேண்டி நின்று எனது உரையை இந்தளவில் நிறைவு செய்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here