கல்முனையை சாட்டாக வைத்து சிங்கள, முஸ்லிம் பிரதேசசெயலகங்களை உருவாக்க முயன்றார்கள்; தடுத்து நிறுத்தினோம்: சுமந்திரன்!


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விரைவில் தமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். கல்முனையை தரமுயர்த்துவதாக சாட்டாக வைத்து, ஓமந்தையில் சிங்கள பிரதேச செயலகமும், தோப்பூரில் முஸ்லிம் பிரதேச செயலகமும் உருவாக்க முயன்றபோதும், அதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களிற்கு அரசியல் பிரசார கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே, மேற்படி கருத்தை தெரிவித்தார்.

“தமிழ் பிரதேசசெயலகத்திலுள்ள எட்டு அல்லது ஒன்பது கிராமசேவகர் பிரிவில் கணிசமானளவு முஸ்லிம் மக்கள் குடியமர்ந்திருந்தனர். அது சம்பந்தமாக எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய வேண்டுமென கேட்கிறார்கள். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். அதை குறைத்து குறைத்து வந்து, ஒரு கிராமசேவகர் பிரிவில் மட்டும், ஒரு சிறு மாற்றத்தை செய்யுமாறு கேட்டார்கள். நிலத்தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக கேட்டார்கள். அதில் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு, இதற்கு இணங்கலாமென யோசித்துள்ளோம். ஏனென்றால் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஆனால் முதலில் அதற்கு இணங்கியவர்கள், இப்பொழுது பின்னடிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்லியுள்ளது, இந்த வாக்குறுதியை நீங்களாகவே மக்களிற்கு கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமில்லாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற காரணத்தினால், அதை நீங்கள் செய்ய தயங்கினால், முதலில் கல்முனை வடக்கை தரமுயர்த்துங்கள். எல்லைகளை குறித்து பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். முழுமையான இரண்டு பிரதேசசெயலகங்களை தரமுயர்த்துங்கள் என்றுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அது தரமுயரும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் போன்ற பல விடயங்கள் உள்ளன. வவுனியா வடக்கில் ஓமந்தையில் தனியான பிரதேசசெயலகம் ஒன்றை உருவாக்குங்கள் என நாங்கள் கேட்டோம். அதை பிரிக்க அவர்கள் வகுத்துக்கொண்ட வழியை பார்த்தால், முழுமையான ஒரு சிங்கள பிரதேசசெயலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அதை தடுத்து நிறுத்தியுள்ளோம். இரண்டை உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை, இதை செய்ய வேண்டாம் என தடுத்துள்ளோம்.

இதனுடன் சேர்த்து அமைச்சரவை பத்திரத்தில், மூதூரின் தோப்பூரில் இன்னொரு பிரதேசசெயலகத்தை உருவாக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதையும் தடுத்து நிறுத்தியிருக்கிறோம்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here