ஈ.பி.ஆர்.எல்.எவ் தம்மை விட வளர்ந்து விடுமாம்: கூட்டணி ஒப்பந்தத்தை தள்ளி வைத்த விக்னேஸ்வரன் தரப்பு!

முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் கூட்டணி உடன்படிக்கை இன்னும் கைச்சாத்தாகவில்லை. கூட்டணியை விரைவில் கைச்சாத்திடும்படி ஈ.பி.ஆர்.எல்.எவ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விக்னேஸ்வரன் தரப்பு அதற்கு “டிமிக்கி“ கொடுத்து வருகிறது.

விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி இந்தா உருவாகிறது, அந்தா உருவாகிறது என தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், நிலைமையென்னவோ கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி வருவதே உண்மையென தெரிகிறது.

விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் கூட்டு கிட்டத்தட்ட இல்லையென்றாகி விட்டது. இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் இதர சிறிய அமைப்புக்களுடன் விக்னேஸ்வரன் தரப்பு சேர்ந்தியங்கி வந்தாலும், ஒரு வருடத்திற்கும் மேலாக கூட்டணி அமைக்கப்படாமல் இழுபறியில் இருக்கிறது.

ஏன் இந்த இழுபறியென்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

“எமது தரப்பு இன்னும் உத்தியோகபூர்வ கட்சியாக பதிவாகவில்லை. எமக்கொரு சின்னம் இல்லை. எமது கூட்டணியிலுள்ளவர்களில் உத்தியோகபூர்வ கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ்தான். அந்த கட்சி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதில்லையென்பதை ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். இப்போது கூட்டணி அமைக்கப்படுவது, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை பலப்படுத்தி விடும் என தமிழ் மக்கள் கூட்டணியிலுள்ள சிலர் கருதுகிறார்கள். அதனால் இப்போதைக்கு கூட்டணி அமைக்கப்படும் சாத்தியமில்லை“ என்றார்.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பு தனது அரசியல்ரீதியான நெருக்கடியான காலகட்டத்தில் தற்போதுள்ளது. கரையேறக்கூடிய கூட்டணயொன்றுடன் பயணித்தால் மட்டுமே, கட்சி உயிர்தப்புமென்ற நெருக்கடிக்கு வந்து விட்டது. அதனால், விக்னேஸ்வரன் கூட்டணியை விரைவில் அமைத்து விட பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த வாரமும் விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து, விரைவில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், அவருக்கு சாதகமாக பதில் வழக்காமல் சமாளித்து அனுப்பியுள்ளார் விக்னேஸ்வரன்.

தம்முடனான கூட்டணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வராததற்கு பிரதான காரணம், சொந்த கட்சி நலனே என தமிழ் மக்கள் கூட்டணி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here