கீழடி ஆய்வில் வட்ட வடிவிலான சுவர், உடைந்த பானை கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் வட்ட வடிவிலான சுவர் மற்றும் உடைந்த பானை கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் தொல்லியல் துறையினர் பல கட்டங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக ஆராய்ச்சி செய்து அதில் 7,818 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பின்னர் மாநில அரசின் சார்பில் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில் 5,820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 5-வது கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோர் நிலங்களில் பல குழிகள் தோண்டி ஆராய்ச்சி நடைபெற்றது.

இதில் இரட்டை சுவர், சிறிய பானை, ஓடுகள், வட்ட பானைகள், உறை கிணறு, இரும்பு துண்டுகள், சிறிய சுவர், 3 அடுக்கு குட்டி சுவர் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போதகுரு என்பவரது நிலத்தில் நேற்று ஆராய்ச்சி நடைபெற்றபோது அந்த சுவர் வட்ட வடிவில் காணப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறும் போது முழு தகவல்கள் கிடைக்கும் என்றும் தெரிய வருகிறது.

மேலும் முருகேசன் என்பவரது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி செய்தபோது வட்ட வடிவில் சிறிய சுவர் காணப்பட்டது. இதன் அருகே குழிகள் தோண்டி ஆராய்ச்சி நடைபெற்றபோது உடைந்த நிலையில் பானை ஒன்று தென்பட்டது. உறைகிணற்றில் 6 அடி வரை சவடு மண்ணாகவும், அதற்கு கீழே தோண்டும் போது ஆற்று மணலும் வந்தது. இவ்வாறு வந்த ஆற்று மணலை அள்ளி அந்த பகுதியில் குவியலாக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here