விமான நிலையத்தில் திரண்ட ஹொங்கொங் போராட்டக்காரர்கள் – 3 நாட்கள் தங்கியிருந்து போராட முடிவு


சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹொங்கொங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தால் ஹொங்கொங் குலுங்கியது.

இதையடுத்து, கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த சட்ட வரைபு நிறுத்திவைக்கப்படுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை.

சட்ட வரைபை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த சட்ட வரைபை கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப்படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம் இராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளனர்.

இதனால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கைகோர்த்து உள்ளனர். கடந்த திங்கட்கிழமை நடந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் ஹொங்கொங்கின் இயல்பு வாழ்க்கையை முடக்கி ஸ்தம்பிக்க வைத்தது.

இதையடுத்து, ஹொங்கொங் போராட்டக்காரர்கள் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் மத்திய அரசாங்கத்தின் வலிமையை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், ஹொங்கொங் போராட்டம் குறித்து சர்வதேச பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போராட்டக் காரர்கள் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்று திரண்டு அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று காலை கருப்பு உடைகளை அணிந்து கைகளில் பதாகைகளுடன் பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் குவிந்தனர்.

போராட்டக்காரர்கள் 3 நாட்களுக்கு விமான நிலையத்தில் தங்கியிருந்து போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். அவர்கள் நிர்வாக தலைவர் கேரி லாம் மற்றும் பொலிசாரை கண்டித்து வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்ட பதாகைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர். மேலும் சமீபத்திய போராட்டங்களை விளக்கும் கலைப் படைப்புகளுடன் துண்டு பிரசுரங்களை வழங்குகிறார்கள்.

ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த அமைதியான போராட்டம் இதுவரை பயணிகளுக்கு அதிக இடையூறு விளைவிக்கவில்லை என்பதால் விமான நிலைய அதிகாரிகள் இந்த போராட்டத்தை சகித்துக்கொண்டிருக்கிறார்கள். அத்துடன் விமான நிலையத்தில் இதுவரை பொலிசாரும் குவிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here