யாழ் முதல்வரின் வாகனத்தை மீள கையளிக்க ஆளுனர் அதிரடி உத்தரவு!


யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டின் உத்தியோகபூர்வ வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக ஒப்படைக்கும்படி வடக்கு ஆளுனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சருக்குரிய வாகனத்தையே ஆனல்ட் தற்போது பாவித்து வருகிறார். இது நிர்வாக ஒழுங்குமுறைமைக்கு மாறானது. இது, ஆளுனருக்கு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே, இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ் மாநகரசபை முதல்வர்களிற்குரிய உத்தியோகபூர்வமான வாகனம் இருந்தபோதும், அந்த வாகனம் தனக்கு வேண்டாம் என்றும், புதிய வாகனம் தருமாறும் யாழ் மாநகர முதல்வர் பதவியேற்றதிலிருந்து அதிகாரிகளை வற்புறுத்தி வந்தார்.

பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டு பயணங்கள், ஆறரை இலட்சம் ரூபாவில் அப்பிள் மடிக்கணினி என, பதவியிலிருந்து பெறக்கூடிய அதிகபட்ச சலுகைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டிய முதல்வர், வாகன விவகாரத்தையும் விட்டு வைக்கவில்லை. இது குறித்து உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் தொடக்கம், பிரதம செயலர் வரை தொடர்பு கொண்டு தொடர்ந்து நச்சரித்து வந்தார்.

தற்போதைய அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உத்தியோகப்பற்றற்ற பங்காளி என்பதால், அதிகாரிகளும் இதில் இணக்கமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

உள்ளூராட்சிமன்ற தலைவர்களில் யாழ் முதல்வரும், வலி வடக்கு தவிசாளரும் தமது கட்டுப்பாட்டில் இயங்கவில்லை, வரையறைக்கும் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்ற அதிருப்தி, வடக்கு நிர்வாக உயரதிகாரிகளிடம் உள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது. சுமந்திரனுக்கு நெருக்கமானவராக ஆனல்ட்டும், மாவை சேனாதிராசாவின் உதவியாளராக வலி வடக்கு தவிசாளர் சே.சுகிர்தனும் உள்ளனர்.

வடக்கு நிர்வாக உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட த.தே.கூ தலைவர்களிடம் மிக அண்மையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுமிருந்தனர். இரண்டு உள்ளூராட்சி தலைவர்களும் தமது எல்லைகளை கடந்து தனிப்பட்ட விவகாரங்களில் செலவிடுவது, அதிகாரிகளிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதுடன், விதிமுறை மீறல் என்பதயும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை, யாழ் முதல்வரின் வாகன நச்சரிப்பை தாங்க முடியாமல், வடக்கு முதல்வரின் உத்தியோகபூர்வ வாகனத்தை அதிகாரிகள் கையளித்திருந்தனர்.

அரச நிர்வாக ஒழுங்குமுறையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களிற்குரிய வாகனத்தை, அவர்கள் மாத்திரமே பாவிக்க முடியும். ஒழுங்குமுறையில், கீழ் நிலையிலுள்ளவர்களின் பாவனைக்கு அதை வழங்க முடியாது. சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான முதலமைச்சர்களின் பாவனைக்குரிய வாகனம், நிர்வாக ஒழுங்குமுறையை மீறி முதல்வரிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடக்கு ஆளுனர் சில தினங்களின் முன்னர் யாழ் மாநரசபை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ள உத்தரவில், வாகனத்தை திருத்தம் செய்து, உடனடியாக மீள கையளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here