விரைவில் கிளிநொச்சி அம்மாச்சி பூட்டப்படுமா?: பணியாளர்கள் மீது பொருளாதார சுமையை ஏற்றுகிறது விவசாய அமைச்சு!

வடக்கு விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் கிளிநொச்சி அம்மாச்சி உணவகம் தனது நோக்கத்தை மறந்து செயற்படுவது குறித்த தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதை நோக்கமாக கொண்ட அம்மாச்சி உணவகத்தின் அடிப்படை நோக்கத்தையே, விவசாய அமைச்சின் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தையும், இந்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அம்மாச்சி உணவகங்களின் நோக்கம்- பாரம்பரிய, சத்தான உணவுகளை விற்பனை செய்வது மட்டுமல்ல, வாழ்வாதார வசதியில்லாத பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ஊடாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்கள் வருமானமீட்டுவதுடன், அவர்களது குடும்பமும் சத்தான உணவை பெற்றுக்கொள்ள வழியேற்படுத்துவதே.

எனினும், அண்மைய சில மாதங்களில் வடக்கு விவசாய அமைச்சின் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால், கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் அதிக நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.

வடக்கில் எங்குமில்லாத அளவிற்கு கிளிநொச்சி அம்மாச்சி உணவக கட்டிடத்திற்கான மாத வாடகையை விவசாய அமைச்சு அதிகரித்துள்ளது. தற்போது 18,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி அம்மாச்சி உணவகம் அமைந்துள்ள காணி விவசாய திணைக்களத்திற்குரியது. விவசாய அமைச்சின் நிதியிலேயே அந்த கட்டிடம் கட்டப்பட்டது. பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்த விவசாய அமைச்சு எதற்காக தன்னுடைய கட்டிடத்தின் வாடகையை உயர்த்தியது?

அண்மைக்காலமாக அம்மாச்சி உணவகங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. விவசாய அமைச்சராக ஐங்கரநேசன் பதவியிலிருந்த சமயத்தில், ஒப்பீட்டளவில் அம்மாச்சி உணவகங்கள் சிறப்பாக இயங்கியிருந்தன. அம்மாச்சியின் கொள்கை திட்டங்களில் குழப்பமோ, குழறுபடியோ ஏற்படாத விதத்தில் அப்போதைய நிர்வாகம் இயங்கியிருந்தது. எனினும், தற்போது இதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளரின் பிரிவுஉபசார விழாவிற்கும் அம்மாச்சி உணவ பெண் பணியாளர்களிடம் அதிகாரிகள் பணம் வசூலிக்க முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

கிளிநொச்சி பிரதி விவசாய பணிப்பாளராக பதவிவகித்த உகநாதன், முல்லைத்தீவிற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார். அவரது பிரிவுஉபசார விழாவிற்கே அம்மாச்சி உணவக பணியாளர்களிடம் பணம் திரட்ட முயற்சிக்கப்படுகிறது.

அம்மாச்சி உணவக பணியாளர்கள் விவசாய அமைச்சின் கீழான அரச பணியாளர்கள் அல்ல. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட திட்டமே அம்மாச்சி உணவகம். இந்த பொறுப்பணர்வும், விளக்கமும் கிளிநொச்சி விவசாய திணைக்கள அதிகாரிகளிற்கு கிடையாதா?

அம்மாச்சி உணவகத்தில் பணியாற்றுபவர்களின் வருமானத்தை அதிகப்படுத்துவதை குறித்து விவசாய திணைக்களம் சிந்திப்பதே பொருத்தமானது. ஆனால், அந்த உணவகத்தை மூடுவதற்கு அதிகாரிகள் பிள்ளையார்சுழி போடுவதைப் போலவே தற்போதைய முடிவுகள் அமைந்துள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here