என் மனைவிக்கு உடல் பருமனாகிறது… செக்ஸ் ஆர்வம் குறைய அதுவும் காரணமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 8


எம்.புருசோத்தமன் (29)
வல்வெட்டித்துறை

டாக்டர் என் மனைவி திருமணத்தின் முன்னர் சாதாரண உடல்வாகுவுடன்தான் இருந்தார். திருமணமாகி சில மாதங்களிலேயே எடை கூடி வருகிறது. திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. எங்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. நான் மனைவியை வெறுக்கவில்லை. ஆனால் செக்ஸில் ஈடுபாடு குறைந்து வருவதாக உணர்கிறேன். குழந்தையின்மைக்கும், எனது செக்ஸ் ஆர்வக்குறைவிற்கும் மனைவியின் உடல் பருமன் காரணமாக இருக்கலாமா?

டாக்டர் ஞானப்பழம் : இருவரையும் ஆய்வு செய்யாமல் அதை கூற முடியாது. ஆனால் அதற்கும் வாய்ப்புண்டு. அதிக உடல் எடைகொண்ட ஆண்களின் விந்தணுக்களின் தரமும், அவர்களின் உடலுறவு நாட்டமும் குறைவாகவே இருக்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. உடல் பருமனால் உண்டாகும் கருத்தரித்தல் பிரச்னைக்கு ஆண், பெண் பாரபட்சம் இல்லை.

ஒரு கரு உருவாவதற்கு ஆரோக்கியமான கருமுட்டையும் விந்தணுவும் மிகவும் அவசியம். இவை தவிர கருவுறும் பெண்ணின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கரு உருவாகாமலிருக்க பொதுவாகச் சொல்லப்படும் காரணங்களான மனச்சோர்வு, நீரிழிவு நோய் ஆகியவற்றைத் தாண்டி, மிகப் பெரிய பங்குவகிக்கிறது உடல் எடை.

ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உட்பட சில ஹார்மோன்களால்தான் பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஹார்மோனும் சரியான விகிதத்தில் இருப்பதுதான், பெண்ணின் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம்.

அதிகமான உடல் எடைகொண்ட பெண்களின் கொழுப்புத் திசுக்களிலிருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இது, அடிவயிற்றில் கொழுப்பாகத் தங்கும். இது மாதவிடாய் சுழற்சியை பாதித்து, கருவுறுதலை தாமதப்படுத்தும். இதனால், ஹார்மோன்களின் சமநிலை தவறி, கருத்தரித்தலில் சிக்கல் ஏற்படலாம். மற்றொரு முக்கியமான விஷயம், இது இன்சுலின் சுரப்பையும் பாதிக்கும். இதனால், ஈஸ்ட்ரோஜென், ஆண்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களைப் பிணைக்கும் வேலையைச் செய்யும். இதனால், ‘செக்ஸ்-ஹார்மோன் பைண்டிங் குளோபுலின்’ என்ற புரதத்தின் அளவும் குறையும்.

மாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் இந்த ஹார்மோன்களின் சமநிலை பாதிப்பதால், கருமுட்டையே உருவாகாத நிலைகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிக உடல் எடைகொண்ட பெண்களுக்கு கருமுட்டைகள் உருவானாலும், அவற்றின் தரம் குறைவாக இருப்பதற்குச் சாத்தியங்கள் அதிகம். பிஎம்ஐ அளவு 29-க்கும் அதிகமாக உள்ள பெண்களுக்கு கருமுட்டை உருவானாலும், 12 மாதங்களுக்குள் அவர்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் நான்கு சதவிகிதம் குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பெண்களில், 5 – 10 சதவிகித அளவுக்காவது எடை குறைப்பவர்களுக்கே கருவுறுதலுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் பருமனுள்ள பெண்கள் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றாலும், பிரசவத்தின்போது அதிகமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஆண்களுக்கு ஏற்படும் கருத்தரித்தல் பிரச்னைகள்

ஹார்மோன் கோளாறு, உடலுறவில் நாட்டமின்மை, உறக்கமில்லாதது, நீரிழிவு நோய் உட்பட பல காரணங்களால் ஆண்களுக்குக் கருத்தரித்தல் குறைபாடுகள் ஏற்பட்டாலும், உடல் பருமனும் முக்கியப் பங்குவகிக்கிறது.

ஆய்வுகளின்படி, சராசரியைவிட 10 கிலோ எடை அதிகமுள்ள ஆண்களின் கருவுறுதலுக்கான வாய்ப்பு 10 சதவிகிதம் குறைகிறது. மேலும், செயற்கைக் கருவுறுதலில், பெண்களைப்போலவே அதிக எடையுள்ள ஆண்களின் குழந்தைகள் உயிருடன் பிறப்பதற்கே பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு விந்தணுவின் தரம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அமைப்பே மாறுவதும் ஒரு காரணம்.

என்ன செய்யலாம்?

உடலிலிருக்கும் ஏதோ ஒரு சிக்கலின் வெளிப்பாடுதான் பருமன். அது, ஹார்மோன் கோளாறாக இருக்கலாம்; அதிகக் கொழுப்புச்சத்தாக இருக்கலாம். எதுவெனக் கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். உடல் பருமன் உள்ளவர்கள், குறைந்தபட்சம் ஏழு சதவிகித அளவுக்காவது எடையைக் குறைத்தால்தான், கருத்தரித்தல் குறைபாட்டிலிருந்து தப்பிக்க முடியும். இதற்கு, வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிட உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

எடைக் குறைப்பு என்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை, ஆரோக்கியமான உடல் மற்றும் குழந்தைப்பேறு தொடர்பானதும்கூட என்ற புரிந்துணர்வு வரவேண்டியது அவசியம்.

எம்.புருசோத்தமன் (29)
வல்வெட்டித்துறை

கேள்வி: டாக்டர் எனக்கு 27 வயது. ஒரு வருடத்துக்கு முன்பாகத்தான் என் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. இப்போது, இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். ஆனால், ஒவ்வொரு முறை செக்ஸில் ஈடுபடும்போதும், என் மனைவி ‘அதிகமாக வலிக்கிறது’ என்கிறார். என்ன பிரச்னையாக இருக்கும்?

டாக்டர் ஞானப்பழம் :  முதலில் உங்கள் மனைவியை நல்ல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். முதல் குழந்தை பிறக்கும்போது, பெண்ணுறுப்புக்கும், ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதி கிழிந்துவிடும். இதைச் சரிசெய்ய, எபிசியோடமி (Episiotomy) சத்திரசிகிச்சை செய்து, கிழிந்த இடத்தைத் தைத்துவிடுவார்கள். சத்திரசிகிச்சை சரியாகச் செய்யவில்லையென்றாலும் வலி ஏற்படும். அப்படி இருந்தால் நல்ல மருத்துவரிடம் சென்று சத்திர சிகிச்சை செய்துகொள்வது நல்லது. கர்ப்பப்பை, யோனிக் குழாயில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் வலி ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று வலிக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

முந்தைய பகுதி: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 07

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here