இந்தியாவின் திட்டத்தை நிராகரித்ததற்கு பிரபாகரனின் கல்யாண வாக்குறுதியும் காரணம்!! – இந்தியா கொடுத்த புரபோஷல் 04

 

பீஷ்மர்

அமெரிக்க பேராசிரியர் ஒருவரின் ஊடாக இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நடேசன் தொடர்பு கொண்டார் என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  புலிகளின் தகவலையடுத்து ப.சிதம்பரம் உடனடியாகவே புலிகளிற்கு தொடர்பாளர்கள் மூலம் ஒரு தகவல் அனுப்பினார். அது- “மக்கள் கொல்லப்படுகிறார்கள். புலிகளும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இந்த சமயத்தில் நாம் (இந்தியா) தலையிடுவதென்றால் சில விசயங்களில் தெளிவான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் (புலிகள்) தனிஈழக் கோரிக்கையை வைத்திருக்கும் வரை இந்தியாவால் உங்களிற்கு உதவ முடியாது. நீங்கள் தனிஈழ கோரிக்கையை கைவிட தயாரா?“ என்பதே.

இது நடந்தது 2009 ஜனவரி மத்தியில். அப்பொழுது கிளிநொச்சி முழுமையாக வீழ்ச்சிடைந்து விட்டது. தமது ராஜதந்திர நகரத்தை வைத்து புலிகளால் பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சியை இழந்த பின்னர் புலிகள் பேரம் பேச முடியாது, நமது ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும் என்ற தொனி ப.சிதம்பரம் அனுப்பிய தகவலில் தெரிந்தது. இது புலிகளிற்கு தெரியாதது அல்ல. ஆனாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. காரணம், இந்திய தகவல் புலிகளிற்கு கிடைத்த சமயத்தில் தர்மபுரத்தை இராணுவம் கைப்பற்றியிருந்தது.

ப.சிதம்பரத்தின் தகவல் பிரபாகரனிற்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த தகவல் கிடைத்ததை போலவே காட்டிக் கொள்ளவில்லை. இந்த வகையான சரணடைவு, கொள்கையில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கள் பிரபாகரனிற்கு பிடிப்பதில்லை. ஆயுதத்தை தூக்கிய பின்னர் தனது கொள்கையிலிருந்து பிரபாகரன் விலகியதில்லை. விட்டுக்கொடுத்ததுமில்லை. பிரபாகரனது திருமண சமயத்தில் புலிகளிற்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதுவரை, புலிகளிற்குள் யாரும் திருமணம் செய்யக்கூடாதென்ற இறுக்கமான விதி இருந்தது. உமாமகேஸ்வரன், ஊர்மிளாவுடன் நெருக்கமாக பழகினார் என்பதற்காகவே புலிகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார். இப்பிடியான நிலையில் பிரபாகரன் திருமணம் செய்வதை அமைப்பிற்குள் ஏற்பார்களா?

Image result for srilankan army capture kilinochi
கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை இராணுவம்

இல்லை. ஏற்கவில்லை. தளபதிகள், போராளிகளிற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அன்ரன் பாலசிங்கம்,பொன்னம்மான், விக்டர் ஆகியோர் பிரபாகரனின் திருமணத்தை ஆதரித்தார்கள். மாத்தையா, சந்தோசம், குமரப்பா  போன்ற ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள் இதை ஆதரிக்கவில்லை. அப்பொழுது தமிழகத்திலும், இலங்கையிலும் போராளிகள் முகாமைத்து தங்கியிருந்தனர். இரண்டு இடங்களிலுமுள்ளவர்களை சமரசப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இருந்த மூத்த போராளிகளுடன் முதலில் அன்ரன் பாலசிங்கம் பேசினார். பின்னர் ஒவ்வொரு முகாமாக பொன்னம்மான் சென்று, போராளிகளுடன் பேசினார். பிரபாகரன் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா ஒன்றை போராளிகள் மத்தியில் ஒளிபரப்பினார்கள். அந்த ஒலிநாடாவில் பிரபாகரனின் பேச்சு இப்படித்தான் முடிந்தது- “நான் திருமணம் செய்வதால், தமிழீழ கோரிக்கைக்கோ, இயக்கத்திற்கோ துரோகம் செய்யமாட்டேன். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிலிருந்தாவது நான் விலகினாலும், அமைப்பிலுள்ள யாராவது என்னை சுடலாம்“.

இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன தொடரில் இதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும், புதிய வாசகர்களிற்காக மீண்டும் குறிப்பிடுகிறேன்.

2007 இல் நடந்தது. சமாதான பேச்சுக்கள் குழம்பி மீண்டும் யுத்தம் ஆரம்பித்திருந்தது. புலிகளின் முக்கியஸ்தரான பாலகுமாரன் ஒரு கடிதம் பிரபாகரனிற்கு அனுப்பியிருந்தார். அதில் யுத்தத்தை நிறுத்தி சமாதான பேச்சு மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்திற்கு பிரபாகரன் பதிலளிக்கவில்லை. தான் அனுப்பிய கடிதம் பிரபாகரனிற்கு போய் சேர்ந்ததா, படித்தாரா இல்லையா என ஒன்றும் தெரியாமல் பாலகுமாரன் திண்டாடிக் கொண்டிருந்தார். பாலகுமாரன் புலிகளின் முக்கியஸ்தர் என்று அழைக்கப்பட்டாலும், முடிவெடுக்கும் வட்டத்திற்குள்ளோ, பிரபாகரனிற்கு நெருக்கமாகவோ இருக்கவில்லை. அதனால் எந்த தகவலையும் நினைத்த வேகத்தில் பிரபாகரனிடம் அவரால் சேர்ப்பிக்க முடியாது.

உண்மையில் அந்த கடிதம் பிரபாகரனிடம் உடனே சேர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதை படித்த பின்னர், வேண்டுமென்றே பாலகுமாரனுடனான தொடர்பை பிரபாகரன் துண்டித்திருந்தார். பாலகுமாரனுடன் தொலைதொடர்பு சாதனங்களில் பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருங்கிய வட்டத்திற்குள் பிரபாகரன் வைத்திருக்கவில்லை. எங்காவது நிகழ்வுகள், அரசியல்துறை சந்திப்புக்களிலேயே பேசிக்கொள்வார். அது யுத்த சமயம் என்பதாலோ என்னவோ, பாலகுமாரனும் பிரபாகரனும் நீண்டநாட்களாக நேரில் சந்தித்து கொள்ளவில்லை. இது பாலகுமாரனிற்கு சங்கடத்தை கொடுத்தது. வேண்டுமென்றேதான் பிரபாகரன் தன்னை சந்திப்பதை தவிர்க்கிறார் என நினைத்தார்.

Image result for
க.வே.பாலகுமாரன்

இந்த சம்பவங்கள் நடந்த சில மாதங்களின் பின்னர் வட்டக்கச்சியில் சாள்ஸ் அன்ரனி படையணியின் ஆண்டு நிறைவு விழா நடந்தது. புலிகளின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் கலந்து கொண்ட நிகழ்வில் பிரபாகரனும் கலந்து கொண்டார். பிரபாகரனிற்கு அருகில் உட்காரும் வாய்ப்பு பாலகுமாரனிற்கு கிடைக்கவில்லை. பாலகுமாரனை கண்டதை போல, பிரபாகரனும் காட்டிக்கொள்ளவில்லை.

நிகழ்வின் இறுதியில் பிரபாகரன் புறப்பட்டார். பாலகுமாரனை அவர் கணக்கெடுக்கவேயில்லை. பிரபாகரனிற்கு முன்னால் சென்ற பாலகுமாரன் “தம்பி… ஒரு கடிதம் அனுப்பியிருந்தனான். கிடைத்ததா?“ என்றார். அப்பொழுதுதான் பாலகுமாரனை பார்பவரைபோல பார்த்து சிரித்துவிட்டு,   பார்த்து “பாலகுமாரண்ணைக்கு ஒரு சி.டி கொடுத்து விடுங்கள்“ என்றுவிட்டு போய் விட்டார்.

உதவியாளர் ஒரு சிடி கொடுத்தார். ஏதாவது சமரச திட்ட எழுத்து வடிவங்களாக இருக்குமோ என்றும் பாலகுமாரன் யோசித்தார். வீட்டுக்கு சென்று, சிடியை போட்டால், அது ஒரு திரைப்படம்!

படத்தின் டைட்டிலை பார்த்ததுமே, பாலகுமாரனிற்கு முகம் இருண்டது. பாலகுமாரனது யோசனைக்கு பிரபாகரன் ஒரு திரைப்படத்தின் மூலம் பதிலளித்திருக்கிறார், அது சாகப் பயந்தவர்களின் யோசனை என்பதை போன்ற செய்தியை சொல்லும் திரைப்படம் அது.

அந்த திரைப்படம் முன்னூறு வீரர்கள்- ஸ்பாட்டன்ஸ்!

பிரபாகரனிற்கு மிக பிடித்தமான திரைப்படம். தமது அமைப்பிலிருக்கும் ஒவ்வொரு போராளியும் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க வேண்டுமென விரும்பினார்.அது புலிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பல பத்து தடவைகளிற்கு மேல் பிரபாகரன் பார்த்து விட்டார். கிரேக்க வரலாற்று கதையே இந்த திரைப்படம்.

இந்தியா புலிகளை சரணடைய வைக்க தயாரித்த திட்டம் குறித்த கட்டுரையில், இந்த இரண்டு சம்பவங்களையும் குறிப்பிட்டதற்கு காரணம் உள்ளது. பிரபாகரனின் மனநிலையை தெரிந்துகொள்ளாமல், இந்தியா இந்த விடயத்தை கையாண்டது, அதனால்தான் இந்திய யோசனை வெற்றியடையவில்லை என்பதை குறிப்பிடவே அவற்றை சொன்னேன்.

ப.சிதம்பரத்தின் செய்தி கிடைத்த பின்னரும், பிரபாகரன் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தது நடேசனிற்கு சங்கடமாக இருந்தது. பிரபாகரனுடன் பேசிவிட்டு, விரைவில் பதில் தருகிறேன் என தொடர்பாளர்களிடம் கூறிவிட்டு, பிரபாகரனை தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது நல்லதல்ல என யோசித்துவிட்டு, ஒருநாள் பிரபாகரனை நேரில் சந்தித்து, சிதம்பரத்தில் செய்தி தொடர்பாக பேசினார். மறுநாள், புதுக்குடியிருப்பில் இதைப்பற்றி ஆராயலாம் என்றார் பிரபாகரன்.

2009 ஜனவரி மத்தி. புதுக்குடியிருப்பில் (மிகச்சரியாக சொன்னால் புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதியில் கிழக்கு பக்கம் அமைந்திருந்த கணினி பிரிவின் முகாமில் நடந்தது. அந்த முகாமில்தான் நீச்சல் தடாகம் இருந்தது. பிரபாகரன், பாலசந்திரன் நீச்சல் தடாகத்தில் உள்ள படம் இணைத்துள்ளோம். இந்த முகாமில்தான் எடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியின் மேற்கு பக்கமாக இருந்த நிலக்கீழ் பதுங்குகுழியை கொண்ட பிரபாகரனின் முகாம் மக்கள் பார்வைக்காக முன்னர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பு நடந்த முகாமை மக்கள் பார்வைக்காக இராணுவம் திறந்து விடவில்லை)

பிரபாகரன், பொட்டம்மான், நடேசன், சூசை, பானு, கஸ்ரோ, தமிழேந்தி ஆகிய ஏழுபேர் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடல் நடந்தது. இந்த சந்திப்பில் பிரபாகரன் மிக கடினமாக கதைத்தார். “இராணுவத்தின் முன்னகர்வை தடுத்து நிறுத்த முடியாவிட்டால், இயக்கத்தின் அழிவை யாராலும் தடுக்க முடியாது, என்னிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதென யாரும் நினைக்காதீர்கள். என்னிடம் எந்த திட்டமும் இல்லை. நீங்கள் ஏதாவது செய்யதால்தான் உண்டு“ என வெளிப்படையாக பேசினார்.

உடனடியாக தேவைப்படும் ஆயுதங்கள் கிடைக்காமல் இராணுவத்தை தடுத்து நிறுத்துவது சிரமம் என்ற கள யதார்த்தத்தை உடைக்க, ஏதாவது செய்ய வேண்டுமென சூசை, கஸ்ரோவிடம் மற்ற தளபதிகள் கேட்டு கொண்டனர். அதாவது வெளிநாட்டில் இருந்து கப்பலில் ஆயுதங்கள் கொண்டுவர வேண்டும். இனி அதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லையென சூசை வெளிப்படையாகவே சொன்னார்.

கள யதார்த்தத்தை கூட்டிக்கழித்து பார்த்து, தமிழீழ கோரிக்கையை கைவிட நாம் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை இந்தியாவிற்கு அறிவிப்பதென முடிவெடுக்கப்பட்டது.

Image result for à
பா.நடேசன்

புலிகளின் தனி ஈழ கோரிக்கை சமரச முயற்சிகளின்போது நெருக்கடியை ஏற்படுத்துவதுண்டு. பேச்சுக்கு வரும் அரசாங்கம், புலிகளின் தனி ஈழ கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விட்டதென தெற்கில் எதிர்கட்சிகள் பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள். இந்த சிக்கலை தவிர்க்க, பேச்சுக்கு முன்னரே அரசும் புலிகளும் ஒரு புரிந்துணர்வு வேலை செய்வார்கள். 2002 சமாதான பேச்சு சமயம் நினைவிலுள்ளவர்களிற்கு நாம் சொல்வது புரியும். அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாங்கொங்கில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் சொன்னார்- “புலிகள் தமிழீழ கோரிக்கையை கைவிட்டால்தான் பேச்சை ஆரம்பிக்கலாம். நாட்டை பிரித்து கொடுக்க நாம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை“ என.

புலிகளின் பேச்சு குழுவிற்கு தலைமைதாங்கி சென்ற அன்ரன் பாலசிங்கம் அதற்கு பதிலளித்தார். “தமிழ் மக்களின் பல தசாப்தகால அரசியல் அபிலாசைகளை தீர்க்க வேண்டுமென்றுதான் பேச்சிற்கு வந்திருக்கிறோம். பேச்சின் முன்னரே நாம் நிபந்தனைகளை விதிக்கவில்லை. சுயாட்சி அடிப்படையிலான நிலையான தீர்வு கிடைத்தால் அதையும் பரிசீலிக்க தயாராகவே இருக்கிறோம்“ என்றார். இந்த பேச்சுக்களின் தொடர்ச்சியாக “தமிழீழ கோரிக்கையையும் கைவிடலாம். ஆனால் பொருத்தமான மாற்று தீர்வொன்று கிடைத்தால்“ என சொல்லியிருந்தார். இப்படியான இராஜதந்திர நகர்வொன்றை செய்யலாமென அன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில், இராணுவத்தின் நகர்வை நிறுத்தியே ஆக வேண்டும். சிறிய இடைவெளி கிடைத்தால்தான் அமைப்பை மீள ஒழுங்கமைக்கலாம்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வட இந்திய ஊடகவியலாளரையும் இந்த சமரச திட்டத்திற்குள் களமிறக்க புலிகள் விரும்பினார்கள். அதற்கு காரணம், கனிமொழி சமரச முயற்சியில் ஈடுபாட்டுடன் நடக்கமாட்டார் என பிரபாகரன் நினைத்தார். ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமயத்தில் கருணாநிதியுடன் புலிகளிற்கு ஆரம்பத்தில் தொடர்பிருந்தது. கருணாநிதியின் அணுகுமுறை பிரபாகரனிற்கு பிடிக்கவில்லை. கருணாநிதியின் இயல்பு பிரபாகரனிற்கு தெரியும். கருணாநிதியின் ஆலோசனைகளை புறந்தள்ளி கனிமொழி நடப்பார் என்பதை பிரபாகரன் நம்பவில்லை. ஆனால் நடேசனிற்கு கனிமொழியில் நம்பிக்கையிருந்தது. என்றாலும் பிரபாகரனின் அபிப்பிராயப்படி வடஇந்திய பத்திரிகையாளரும் இந்த புரஸஷில் சம்மந்தப்பட்டார்.

சிதம்பரத்தை டில்லியில் நேரில சந்தித்து பேச்சு நடத்தினார். “புலிகள் எப்படியான தீர்வு முயற்சிக்கு சம்மதிப்பார்கள்? இப்பொழுது யுத்தத்தை நிறுத்துவதென்றால் இலங்கை கடுமையான நிபந்தனைகளை விதிக்கும். புலிகளை காப்பாற்றுவதாக நமது முயற்சி இருக்காது. புலிகளை முழுமையாக ஆயுத நீக்கம் செய்தால்தான் இந்த பிராந்தியம் அமைதியாக இருக்குமென்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதாகவே இந்தியாவின் திட்டம் இருக்கும். அதற்கு சம்மதித்தால் மட்டுமே புலிகள் இந்த நெருக்கடியிலிருந்து மீளலாம். எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாராக இருக்கிறார்களா என்பதை புலிகளிடம் கேட்டு சொல்லுங்கள்“ என வடஇந்திய பத்திரிகையாளரிடம் சிதம்பரம் கூறினார்.

அன்றே இந்த தகவல் புதுக்குடியிருப்பில் இருந்த நடேசனிற்கு வந்தது. நடேசன் இதுபற்றி கலந்துரையாடிய ஒரே ஆள்- கே.பி. எப்படியான பதில் சொல்லலாமென இருவரும் ஆலோசித்துவிட்டு அனுப்பிய பதில்- “ஆம். யுத்தத்தை நிறுத்த விட்டுக்கொடுப்பின் எல்லைவரை செல்ல நாம் தயார்“!

மறுநாள் புலிகளின் பதில், ப.சிதம்பரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டது. புலிகள் விட்டுக்கொடுப்பிற்கு தயாராக இருந்த விவகாரத்தை சிதம்பரம் ஆச்சரியமாகத்தான் கேட்டார். எப்படியோ புலிகளை பலமிழக்க செய்ய கிடைத்த வாய்ப்பை தவறவிட அவர் தயாராக இல்லை. உடனே காரியத்தை ஆரம்பித்தார். யுத்தத்தை நிறுத்த புலிகள் என்ன செய்ய வேண்டுமென்ற ஒரு சமரச புரபோஷலை தயாரித்து அனுப்பலாமென முடிவு செய்தார். இந்த தகவலும் புலிகளிடம் போனது. நடேசனும் சம்மதித்தார்.

இந்த புரபோஷலை தயாரிக்க சிதம்பரம் யாரை அணுகினார் தெரியுமா? அதை அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here