பாலகுமாரன் மகள் திருமணம்: பஷீர் சேகுதாவூத் உருக்கம்!

விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரனின் மகள் பா.மகிழினியின் திருமணம் கடந்த சில தினங்களின் முன்னர் சென்னையில் நடந்தது. இதில் முன்னாள் ஈரோஸ் இயக்க முக்கியஸ்தர் பஷீர் சேகுதாவூத்தும் கலந்து கொண்டிருந்தார். முஸ்லிம் காங்கிரசின் தவிசாளராக இருந்த பஷீர் அந்த கட்சி தலைமையுடன் முரண்பட்டு அண்மையில்தான் கட்சியை விட்டு ஒதுங்கியிருந்தார். திருமணத்தின் பின் தனது முகநூலில் நெஞ்சை உருக்கும் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவு-

மகிழினி எமது மகள் நீ! மணவாழ்வில் மகிழ் நீ!!

மகிழ், கடந்த இரண்டாம் திகதி உனது கையுடன் ரோலன்ட் தனது கையைக் கோர்த்து சமத்துவத்தைக் கடைப்பிடித்தார். உன் தாயுடன் சேர்ந்து கண்களில் நீர் முட்ட உங்களை வாழ்த்த எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு என்னென்று நன்றி சொல்வேன்.

பெரு வாழ்வு வாழுகிற, உனது தந்தை தோழர் பாலகுமாரன், “மக்களுக்காக வாழ்வது எவ்வாறு” என்று எனக்குக் கற்றுத் தந்த ஆசான்.

மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவம் என்ற ஒன்றையே தாரக மந்திரமாகக் கடைப்பிடித்து வாழ்கிற, மாமனிதருக்கும் மேலான பாலா என்கிற சாதாரண மனிதருக்கு வீழ்வேது?

1990 இல் பாலா அண்ணன் அன்று கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்திருந்த “மலிங்கா இன்” என்ற சிங்களவருக்கு உரிமையான தங்குமிடத்தில் இருந்து என்னிடம் விடை பெற்ற போது சொன்ன வார்த்தைகள் மிகப் பெறுமதியானவை.

“இனம், மதம், நிறம், சாதியம் போன்ற வேறுபாடுகளைக் கடந்த வர்க்க விடுதலைப் போராட்டத்தை நடாத்துவதற்காகவே நான் போராட்டத்தில் இணைந்தேன். இன விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்திருக்கிற காரணத்தால் இதனை மீறிப் பயணிக்க என்னால் முடியவில்லை.இந்திய அமைதி காக்கும் படை விலகிச் செல்கிற இத்தருணத்தில் நான் எனது மண்ணுக்குச் செல்லவே விரும்புகிறேன்.ஆனாலும், இன விடுதலைப் போராட்டம் நிறைவுற்றதும் வர்க்கப் போராட்டம் தொடங்கும்” இதுவே பாலா என்னிடம் சொன்ன அந்தப் பெறுமதி மிக்க வார்த்தைகளாகும்.

என்னையும் நினைவு கூர்ந்து திருமண நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த திருமதி இந்திராணி பாலகுமாரன் அக்காவுக்கு எனது நெஞ்சத்து நன்றிகள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here