மனோ கணேசனின் அமைச்சரவை பத்திரமும், தமிழ் அரசு கட்சியின் ‘இரண்டுநாள்’ நம்பிக்கையும்!


அரசியல் கைதிகள் விடயத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததையடுத்து, அவர் மீது தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் திடீரென விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.

அமைச்சரவை பத்திரத்தின் மூலம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது, இதெல்லாம் தெரியாமல் அமைச்சர் நாடகம் ஆடுகிறார் என தமிழ் அரசு கட்சி ஆதரவாளர்கள் பொங்கி வழிய ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் போட்டியிட்டு, எப்படியாவது அடுத்த நாடாளுமன்ற அங்கத்துவத்தை பெற்றுவிட வேண்டுமென்ற குறிக்கோளில் உள்ள சட்டத்தரணி கே.வி.தவராசா ஊடகங்களின் வழியாக, மனோ கணேசனின் முயற்சி குறித்து நசூக்காக எதிர்மறை அப்பிராயத்தை வளர்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எப்பொழுதும் கட்சி ஆதரவாளர்கள் என்பவர்கள் கண்மூடித்தனமான, கல்லை கடவுளென நம்பும் வகையறாக்கள்தான். அவர்கள் அரசியலை பகுத்தறிந்து தெரிந்து கொள்வதில்லை. அதனால் மனோ கணேசனின் முயற்சி அவர்களை சீண்டியிருக்கலாம். அரசியல் கைதிகள் விவகாரத்தில் மனோ தலையிடுவது, “எங்கள் ஏரியா, உள்ளே வராதே“ மனோநிலையை அவர்களிடம் ஏற்படுத்தியதாலேயே இந்த விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

இன்றைய தமிழ் அரசியல் தரப்பினர் பெரும்பாலானவர்கள் போராட்டத்துடன் தொடர்பற்றவர்கள். அவர்களின் அதிகபட்ச போராட்ட அனுபவம் என்பது, நான் யாழ்ப்பாணத்தில் இருந்தவன், ஈ.பி.டி.பிக்கும் பயப்பிடாமல் சொந்த வீட்டிலேயே இருந்தவன் என்பதுதான். எல்லா தமிழ் கட்சிகளின் நிலையும் அதுதான்.அதனால்தான் 30 இலட்சத்திற்கும் அதிக ஈழத்தமிழர்களை கொண்ட சனத்தொகையில், வெறும் 4 இலட்சம் அளவானவர்கள், துண்டாகி வாழ்ந்து, முள்ளிவாய்க்கால் வரை சென்றனர். இந்த சமூகத்தின் பெரும்போக்கானவர்கள் அந்த குழுமத்தில் இணையவில்லை.

அதனால்தான், தமிழ் மக்கள் மத்தியில் இனரீதியாக சிந்திக்காமல், கட்சிரீதியாக சிந்திக்கும் மனநிலை மிக அதிகளவில் இருந்தது.

இனநலனின் அடிப்படையிலான செயற்பாட்டு பாரம்பரியத்தில் வளர்ந்திருந்தால், எல்லா உள்ளக வேறுபாடுகளிற்கும் அப்பால் அரசியல் இலக்குகளை அடைவதன் முக்கியத்துவமும், அதற்காக முதிர்ச்சியும் அவசியமென்பதை உணர்ந்திருப்பார்கள். விடுதலைப்புலிகள் தமிழ் தேசியகூட்டமைப்பை உருவாக்கியதே இதற்கு உதாரணம்.

தமது போராட்டத்திற்கும், அதன்மூலம் இனத்தின் நலனிற்கும் கேடு செய்கிறார்கள் என குறிப்பிட்டு புலிகளின் கொலைப்பட்டியலில் இரு காலத்தில் இருந்த தமிழ் அரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ கட்சிகளை ஒன்றிணைத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ கட்சிகளுடன் புலிகளிற்கு 1990களின் பிற்பகுதியில் உள்ளக தொடர்புகள் ஏற்பட்டு, செயற்பாட்டுரீதியான ஒத்துழைப்பு ஏற்பட்டிருந்தது. புலிகளின் உள்ளக நடவடிக்கைகள் சில இந்த அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் நடந்தது. ஆனால் அதுவரை புலிகளின் கொல்லப்படக் கூடும் என கருதி, அதி உயர் பாதுகாப்புடன் வலம் வந்தவர் இரா.சம்பந்தன். அவரையே, கூட்டமைப்பின் தலைவராக புலிகள் நியமித்திருந்தனர்.

இன்றைய தேவை- அரசியல் கைதிகள் விவகாரத்தில், அதற்காக முயற்சிப்பவர்களின் பலவீனங்களை பெரிதுபடுத்துவதல்ல. சின்னச்சின்ன முயற்சிகளையேனும் ஒவ்வொருவரும் செய்து, அவர்களை விடுதலை செய்விப்பதே. இந்த போராட்டத்திற்கு வெளியில் வாழ்ந்த பெரும்போக்கானவர்களால், அரசியல் கைதிகள் விவகாரத்தை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையோ என்று எண்ணத் தோன்றும் விதமான சம்பவங்களே அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன.

அரசியல்கைதிகள் விவகாரத்தில் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் பெரும்பாலான சட்டத்தரணிகள்- கே.வி.தவராசா உட்பட- பண விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதில், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் குற்றச்சாட்டுக்களை பல ஊடகங்கள் அறிந்திருக்கும். தமிழ்பக்கம் கூட அந்த ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருக்கக்கூடும். ஆனால், அதையெல்லாம் விட, அவர்கள் அரசியல்கைதிகள் விடயத்தில் செயற்படுகிறார்கள் என்பதே முக்கியம். அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல்ரீதியான தீர்மானமாக மாற்றும்வல்லமையுள்ள தமிழ் தலைமைகள் இதுவரை அதிகாரத்தை பெறாத காரணத்தினால், இந்த வகையான சட்ட முயற்சிகள் மற்றும் சிறுசிறு முயற்சிகளை நிறுத்தக்கூடாது. அரசியல்கைதிகள் விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே நம்பிக்கை இதுதான்.

அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளாமல், அரசியல் கைதிகளாக தம்மை அணுகும்படி விடாப்பிடியாக செயற்பட்டது நமது அரசியல் தலைவர்களின் மீதான நம்பிக்கையினால் அல்ல. இப்படியான சிறுசிறு அசைவுகளில் கொண்ட நம்பிக்கையே. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சிறுசிறு அசைவுகள் பெரிய பலனை கொடுக்காததால், அனேக அரசியல் கைதிகள் மனத் தளர்ந்தனர். இன்று சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளில் அனேகர், குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுவிட்டனர்.

இதில் கசப்பான உண்மையொன்றுண்டு. அரசியல் கைதிகள் விவகாரத்தில் சேவை செய்வதாக கூறும் தமிழ் சட்டத்தரணிகள் எல்லோரையும் பற்றிய கறுப்பு பக்க கதைகள் அரசியல் கைதிகளிடம் உள்ளது. ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தையும் சட்டத்துறை தொழிலாக செய்யும் சிங்கள சட்டத்தரணியொருவரே யுத்தத்தின் பின்னரான சூழலில் அநுராதபுரம், கொழும்பு பகுதி நீதிமன்றங்களில் அதிக தமிழ் அரசியல்கைதிகளிற்காக முன்னிலையாகியுள்ளார். சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் அதை அவர்களுடன் பேசி உறுதிசெய்யலாம்.

ஆனால் நமது நோக்கம் என்ன?

அரசியல் கைதிகள் விடுவிப்பு மாத்திரமே. அதற்காக யார் உழைக்கிறார்கள் என்பதல்ல.

இந்த அரசியல் முதிர்ச்சியும், பொறுப்புணர்ச்சியும் தமிழ் அரசு கட்சி தொண்டர்களிற்கும், பிரமுகர்களிற்கும் தேவை. அண்மைக்காலத்தில் தமிழ் சூழலை அதிகம் கட்சிரீதியாக சிந்திக்க வைத்து, பிளவுபடுத்தும் அரசியலையே முன்னெடுத்து வருகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் போதாமை மீதான விமர்சனங்கள் அதிகரிக்க, விக்னேஸ்வரன் முதல் மனோ கணேசன் வரை எல்லோரையும் பார்த்து அச்சப்படுகிறார்கள்.

அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சரவை பத்திரம் ஒன்றுக்கும் உதவாதது, அமைச்சரவை பத்திரம் மூலம் அரசியல்கைதிகளை விடுதலை செய்து விட முடியுமா என தமிழ் அரசு கட்சியினர் எகத்தாளமாக கேட்டு வருகிறார்கள்.

அமைச்சரவை பத்திரம் மூலம் அரசியல்கைதிகளை விடுவிக்க முடியாது. ஆனால் அரசியல் கைதிகள் விவகாரத்தை இந்த அரசியல் பொறிமுறைக்குள் கிடைக்கின்ற சாத்தியங்கள் எல்லாவற்றிலும் பிரயோகித்து பார்க்க வேண்டும். அரசியல் கைதிகள் விவகாரத்தில் இதுவரை ஒவ்வொரு அரசியல் தரப்பும் ஏதோ சாக்குப்போக்கு சொல்லி, பொறுப்புகூறலில் இருந்து தப்பித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மட்டும் கூடுமிடத்தில் அந்த பிரச்சனையை கொண்டு செல்வது, அவர்கள் இந்த விவகாரத்தில் கொண்டுள்ள நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவேனும் உதவும். அதுகூட ஒரு அரசியல் அணுகுமுறைதான்.

நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் இனப்பிரச்சனை தீர்வு குறித்த விவாதம் நடந்து வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த விவாதம் நடக்கிறது. சிலநாட்களின் முன் பத்திரிகையாளர் ஒருவர் இரா.சம்பந்தனிடம், “இனப்பிரச்சனை தீர்வு விவகாரத்தில் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?“ என கேட்டார். “நாடாளுமன்றத்தில் இரண்டுநாள் விவாதத்தை கோரியிருக்கிறோம். அதன் பின்னரே அடுத்த நகர்வை தீர்மானிப்போம்“ என்றார்.

இதன் அர்த்தம், இன்றும் நாளையும் நடக்கும் விவாதத்தின் மூலம் இலங்கை இனப்பிரச்சனை தீர்ந்து விடும் என்பதல்ல. இரா.சம்பந்தனும் அப்படி நம்பமாட்டார். 70 வருடங்களாக இந்த இடத்தில் பேசிபேசி தீர்வில்லாத விடயத்தை, அந்த இடத்தில் இரண்டுநாள் விவாதத்தின் மூலம் ஏதாவது ஒரு புள்ளியை கண்டடையலாமென நினைக்கும் இரா.சம்பந்தனின் கட்சி ஆதரவாளர்கள், அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்து கைதிகளை விடுவிக்க முடியுமா என கேள்வியெழுப்புவது எவ்வளவு பெரிய முரண்நகை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here