யாழில் ஐஸ்கிறீம் கடையை திறந்து வைக்கிறார் மாவை: கிழக்கிலிருந்தும் ஐஸ்கிறீம் குடிக்க யாழ் விரையும் எம்.பிக்கள்!


யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்கிறார்.

நேற்று கிழக்கில் கல்யாண நிகழ்விற்காக சென்றிருந்த மாவை சேனாதிராசா, நேற்றிரவு திருகோணமலைக்கு சென்று கனடா விருந்தாளிகளை சந்தித்து, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். யாழ் வந்த சூட்டுடன், ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

தனியார் ஐஸ்கிறீம் கடை திறப்பு விழா, யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் தலைமையில் இடம்பெறும்.

கனடாவிலிருந்து வந்து, தமிழ் அரசுக்கட்சியில் அடுத்த மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன், தமிழ் அரசு கட்சியின் பத்திரிகையை அச்சிடும் வர்த்தகரின் குடும்ப நிறுவனமே இந்த ஐஸ்கிறீம் கடையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள சாவகச்சேரி நகரசபைக்கு சொந்தமான விளம்பர தட்டிகளை, இந்த வர்த்தகரிற்கு இலவசமாக வழங்கியதன் மூலம், ஏற்கனவே நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஊடகங்களில் அந்த விவகாரம் வெளியானதன் பின்னர், விளம்பரங்கள் அகற்றப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பண்ணை கடற்கரையிலுள்ள யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தில் ஒப்பந்த அடிப்படையில், இந்த ஐஸ்கிறீம் கடை சில வாரங்களின் முன்னர் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று எல்லா எம்.பிக்களையும் அழைத்து ஐஸ்கிறீம் விருந்தளிப்பதுடன், திறப்பு விழா என அழைப்பிதழ் அச்சடித்து சம்பிரதாய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக தமிழ் அரசு கட்சியின் கனடா கிளையினால் வழிநடத்தப்படும் அணியினர் இன்று வடக்கு, கிழக்கு, கொழும்பிலிருந்து அவசரஅவசரமாக யாழ்ப்பாணம் நோக்கி ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவிற்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

கனடா கிளை பண பலத்தின் மூலம் தமிழ் அரசியலில் அதீத செல்வாக்கை செலுத்தி, மோசமான நிலைமையை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனங்கள் ஏற்கனவே தீவிரமாக உள்ள நிலையில், ஐஸ்கிறீம் கடை திறப்பு தமிழ் அரசு கட்சிக்குள் கனடா கிளையின் பிடியின் வலிமையை எடைபோடும் பகிரங்க சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

யாழில் ஐஸ்கிறீம் குடிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து சிறிநேசன் எம்.பி தற்போது யாழ் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.

மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறிநேசன் ஆகிய எம்.பிக்கள் இன்று ஐஸ்கிறீம் கடை திறப்பில் கலந்து கொள்வார்கள். கோடீஸ்வரன், சரவணபவன் ஆகியோரும் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா கிளையுடன் நெருக்கமான தொடர்பை இதுவரை பேணியிராத சரவணபவன், அண்மையில் கனடா சென்றபோது, கனடா கிளையினரை சந்தித்து நிதி உதவி கோரியிருந்தார். கொழும்பில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பத்திரிகைகள் இல்லையென்பதால் புதிய பத்திரிகையொன்றை வெளியிடவுள்ளதாகவும், அதற்கு நிதியுதவியளிக்கும்படியும் கேட்டிருந்தார். கனடா கிளையினரை மகிழ்ச்சிப்படுத்த சரவணபவனும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளலாமென தெரிகிறது.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அத்தியாவசிய, நில உரிமை பிரச்சனைகள் தொடர்பில் ஆராய அண்மையில் மனோ கணேசன் ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்கு செல்வதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here