UPDATE: கொல்லப்பட்டவர் ஆவா இல்லை, சாவா குழுவாம்; கொடிகாமத்திலிருந்து சென்ற ரௌடிகளே சிக்கினர்!

மானிப்பாய் பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஆவா குழுவை சேர்ந்தவர் அல்ல, அவர் சாவா குழுவை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிசார் நேற்றிரவு (20) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இரவு 8.45 மணியளவில், மானிப்பாய் இணுவில் வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

பொலிசாரின் தாக்குதலில் 23 வயது இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேற்படி பகுதியில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற போவதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு மறைந்திருந்ததாகவும், 3 மோட்டார் சைக்கிள்களில் முகத்தை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டியவாறு வந்த ரௌடிகள் பொலிசார் மறித்தபோதும், ரௌடிகள் மோட்டார் சைக்கிளை நிறுத்தவில்லை.

தப்பியோடிய ரௌடிகள் மீது பொலிசார் துப்பாகிச்சூடு நடத்தினர். இதில் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, ஒருவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவர் ஆவா ரௌடிக்குழுவை சேர்ந்தவர் என பொலிசார் முதற்கட்ட தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஆனால், கொல்லப்பட்டவர் சாவா என்ற குழுவை சேர்ந்தவர் என்ற புதிய தகவலை பாதுகாப்பு தரப்பு சார்ந்த தகவல்மூலங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.

கொடிகாமத்தில் இயங்கும் ரௌடிக்குழுவே சாவா என்ற குழுவாகும். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட சாவா குழு ரௌடிகள் திட்டமிட்ட தகவல் பொலிசாருக்கு கிடைத்தது. இதையடுத்தே கொடிகாமம் உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிசார், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட இளைஞன் கொடிகாமத்தை சேர்ந்தவர் என தெரிகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here