மானிப்பாயில் மேலதிக பொலிசார் குவிப்பு: தப்பியோடிய ரௌடிகளை தேடி சல்லடை!

மானிப்பாயில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, அந்த பகுதியில் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க, யாழ் மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து மேலதிக பொலிசார் மானிப்பாயில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட இளைஞன் ஆவா குழுவை சேர்ந்த ரௌடியென பொலிசார் தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் கொண்டு வந்த வாள் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. “அந்த பகுதியில் ஆவா குழு ரௌடிகள் பொலிசார் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மானிப்பாய், கோப்பாய், கொடிகாமம், சுன்னாகம் பொலிஸ் நிலையங்கள் இணைந்து அவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக களமிறக்கப்பட்ட விசேட அணி, மானிப்பாய்- இணுவில் வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட ஆவா அணி வந்தது. அவர்களை மறித்தபோதும் நிற்கவில்லை. பொலிசார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதையடுத்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது பொலிசார் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவர் காயங்களுடன் கைதானார்.

அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்“ என பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை, தப்பியோடிய ஏனைய நான்கு ஆவா குழு ரௌடிகளையும் கைது செய்ய பொலிசார் இரவிரவாக விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக மாவட்டத்தின் ஏனைய பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிசார் அழைக்கப்பட்டிருந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து கஜேந்திரா வாள் ஒன்றையும் பொலிசார் மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here