தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்களிற்கு அதிருப்தியுள்ளது; ஆனால் தேர்தல் முடிவுகள் பாதகமாக வராது: முன்னாள் எம்.பி அரியநேத்திரன் பேட்டி!

நேர்காணல்: மட்டு பழுவூரான்

“தமிழ் அரசு கட்சியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் பல உள்ளன. அதில் நீங்கள் பட்டிருப்பில் அலுவலகம் திறந்ததும் ஒரு காரணமாகும் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்“ என மட்டக்களப்பு எம்.பி, ஞா.சிறிநேசனிடம் நேரில் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார் மட்டக்ளப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

தமிழ்பக்கத்தின் மட்டக்களப்பு செய்தியாளரிற்கு நேற்று (18) வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழுமையான வடிவம்-

கேள்வி: சமகாலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் மக்களிற்குமிடையிலான முரண்பாடுடைய புரிந்துணர்வு போன்று உள்ளது. இது குறித்து தங்களின் கருத்து என்ன?

அரியநேத்திரன்: உண்மைதான். தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்தியான நிலையில உள்ளார்கள். தமிழ் மக்கள் 71 வருடமாக பலவிதமான வேறுபட்ட யுத்தங்களை புரிந்து ஒரு தீர்வினை பெற வேண்டும் என்பதற்காகவே கொள்கை ரீதியாக கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர். 2015ற்கு பின்னர் கூட்டமைப்பு அரசாங்கத்தினோடு இணக்கப்பாட்டு அரசியல் ரீதியாகவே சென்று கொண்டிருக்கின்றது. இதன் மூலம் சில அபிவிருத்திகளை செய்யக்கூடியதாக இருக்கின்றது. கூட்டமைப்பு மீது அதிருப்தி இருப்பதற்கான காரணம் இதுவும் அதிகமாக கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது. காரணம் இம்மாகாணத்தின் புவியியல் பின்ணனியான முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள், அரசியல் வாதிகளின் தாக்கமும் இங்கு இருக்கின்றது.

மக்கள் எதிர்ப்பதன் காரணங்களில் ஒன்றாக முஸ்லிம் அரசியல்வாதிக்கள் வடக்கிலும், கிழக்கிலும் நேரடியாக அபகரிக்கும் காணிகளுக்கு கூட்டமைப்பு அரசியற் தலைமைகள் எதிராக குரல் கொடுக்காது, அவற்றை தட்டி கேட்காது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக மக்களிடையே பல விமர்சனங்கள் முன்வைத்தனர்.

ஏன் கூட்டமைப்பு எதிர்க்கவில்லை என்றால், இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை பெறுவதில் தமிழ் மக்கள் தனியாக இன்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் இணைத்தே தீர்வினை பெற வேண்டும் என்று உள்ளது. முஸ்லிம்களை நேரடியாக எதிர்க்க கூடாதுதென்றும் அவ்வாறு அவர்கள் தவறுகள் புரிவார்களாயின் அதனை பக்குவமாக சுட்டிக் காட்ட வேண்டும். அவ்வாறான பிரச்சினைகள் ஊடகங்களில் வெளிவரும் போது தீர்விற்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டுவிடும் என்னும் காரணத்தினால் பக்குவமாக கூட்டமைப்பு கையாள்கின்றது. இதனை மக்கள் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை. இதற்கு பல உதாரணங்களை சுட்டிகாட்டலாம்.

கொள்கை ரீதியாக அரசியற் தீர்விற்காகப் பயணித்தோர் இப்போது அவற்றை மறந்து அபிவிருத்தியின் பாதையில் செல்கின்றனர். அதிலும் சில மக்களுக்கு அதிருப்தி உள்ளது. என்னையும், கட்சியையும் பொறுத்தமட்டில் இரண்டும் அவசியம் தான். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் வாழ்க்கையில் மேன்மையுற செய்வதற்கு அரசாங்கத்தினூடாக அபிவிருத்திகளை பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். அதுதான் முழுமையான செயற்பாடும் இல்லை. தமிழ் மக்களின் தீர்விற்கான பேச்சுக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கேள்வி: இவ்வாறான எதிர்ப்பலைகள் எதிர்கால தேர்தல்களில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்களா?

அரியநேத்திரன்: இல்லை அவ்வாறு ஏற்படுத்தாது. தேர்தல்கால அரசியல் வேறு. அக்காலங்களில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும். அதனை மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள். அதிருப்தி இருக்கின்றது என்பது உண்மை. ஆனால் நிச்சயமாக தமிழ் மக்கள் சிந்தித்து கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள்.

கேள்வி:- 2015ல் நல்லாட்சி ஏற்பட்ட போது, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அச்சமயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களால் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக பேசப்பட்ட போது தாயகக் கோட்பாட்டை முன்வைத்து பேரினவாத கட்சிகளுடன் ஆட்சியமைப்பதை விடுத்து ஏனைய கட்சிகளை இணைத்து ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசில் கூட்டமைப்பு இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபடுகின்றது. இது குறித்து என்ன சொல்கின்றீர்கள்?

அரியநேத்திரன்: 2015 ஆட்சி மாற்றம் மற்றும் பாராளுமன்ற மாற்றத்தின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தது என்பதே உண்மை. சில அரசியற்கட்சிகள் கூறுவது போன்று ஏழு ஆசனம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சரை தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது என்ற விசமத்தனமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

ஐ.தே.கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே பேசியது உண்மை. தயா கமகேயின் பேச்சு வார்த்தையானது த.தே.கூட்டமைப்பு கட்சியோடு அல்லது தலைமையோடோ ஏற்படுத்தவில்லை. அவருடைய கருத்து “எனக்கு முதலமைச்சர் பதவியினை தாருங்கள். ஏனைய பதவிகளை நீங்கள் எடுங்கள்” என்ற பாணியில் அமைந்திருந்தது. இச்செய்தி கூட்டமைப்பிடம் கொண்டு செல்லப்பட்டு ஆராய்ந்த போது தலைவர் சம்பந்தனால் “நாம் விடுதலைக்காக போராடிய ஒரு சிறுபான்மை இனம், நாம் இன்னுமொரு சிறுபான்மை இனத்துக்கு எதிராக பெரும்பான்மை இனத்துடன் இணைவதென்பது கிழக்கு மாகாண சபைக்கு தற்காலிமாக சரியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அரசியற் தீர்விற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே மாகாண சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் இணைந்து பேசி தீர்மானிக்கட்டும்“ எனவும் கூறினார். தமிழ் பேசும் அதிகமான மக்கள் கிழக்கில் இருக்கும் போது சிறிய அளவில் பேரினவாத மக்கள் வாழும் மாகாணத்திற்கு பேரினவாத கட்சி ஒருவருக்கு முதலமைச்சர் வழங்குவதென்பது உசிதமல்ல.

கேள்வி: அண்மையில் பட்டிருப்பு தொகுதிக்கான தமிழரசு கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் இத்தொகுதி தலைவராக இருந்தும் கூட பங்குபற்றவில்லையே?

அரியநேத்திரன்: உண்மையில் எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது. அலுவலகம் திறக்கப்பட்ட பின்னரே இது தொடர்பாக ஊடகங்கள் ஊடாக அறிந்து கட்சியின் பொதுச்செயலாளரோடு தொடர்பு கொண்டு கேட்ட போது அது கட்சி அலுவலகம் அல்ல, மாறாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் தனித்துவமான அலுவலகம் எனவும், கட்சி அலுவலகம் என்றால் நான் சென்றிருப்பேன் எனவும் தெரிவித்தார். அங்கு போடப்பட்டுள்ள பதாகையில் பட்டிருப்பு தொகுதி அலுவலகம் என போடப்பட்டுள்ளது எனவும் வினவும் போது, அதற்கு செயலாளர் நான் அதை மாற்ற சொல்கின்றேன் எனவும் செயலாளர் என்னிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நான் பாராளுமன்ற உறுப்பினரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக வினவிய இருந்தேன். “இந்த செயற்பாடு அயோக்கியதனமான செயற்பாடாகும். இது உங்களுடைய தனித்துவமான அலுவலகமாக இருந்திருந்தாலும் இந்த தொகுதியில் மூன்று கிளைகள் அதற்கு நிர்வாகங்கள் இருக்கின்றது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றோம். அவர்களுக்கு கூட அறிவிக்காமல் இவ்வாறு அலுவலகம் திறந்திருப்பது யோக்கியமான செயற்பாடாக தென்படவில்லை. இந்த கட்சியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் பல உள்ளன. அதில் இக்கட்சி அலுவலகம் திறப்பும் ஒன்றாகும் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்“ என தெரிவித்திருந்தேன். இவ் அலுவலகத்தை மூடி விடவா என கேட்டார். நான் இல்லை மூட வேண்டாம் என தெரிவித்திருந்தேன். ஆனால் கட்சிக்குள் முரணபாடு எதுவும் இல்லை. கட்சி திறப்பு விழாவின் போது என்னையும் சக முன்னாள் உறுப்பினர் செல்வராசாவைப் பற்றியும் தாக்கி உரையாற்றியிருந்தார். எங்களின் தோல்விக்கும், பட்டிருப்பு தொகுதியின் உறுப்பினர் இல்லாமல் போனதிற்கும் விளக்கம் கொடுத்திருந்தார். அதை சொல்ல வேண்டிய இடம் அதுவல்ல. கட்சி கூட்டங்களில் தெரிவித்து தீர்வு கண்டிருக்க வேண்டும்.

கேள்வி:- தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் வருகையின் பின்னர் தமிழரசு கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்ற கருத்தினை தமிழ் அரசு கட்சியின் கடந்த மத்தியகுழு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அவ்வாறாயின் எவ்வாறான வீழ்ச்சிகளை உங்களது கட்சி சந்தித்துள்ளது?

அரியநேத்திரன்: ஆம், அக்கருத்து பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கருத்தில் உண்மை உள்ளது. அதில் ஒன்று கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சியானது வடகிழக்கில் ஒரு சபையை தவிர ஏனைய சபைகள் அனைத்தும் அறுதிப்பெரும்பாண்மை பெற்று சபையினை அமைக்கவில்லை. அதுமட்டுமன்றி வாக்குகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் இத்தேர்தலில் கிழக்கு மாகாண முழுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதுமட்டுமன்றி கட்சி தொடர்பாக நடாத்தப்பட வேண்டிய கூட்டங்கள், நிகழ்வுகள் முன்னர் நடாத்தப்பட்டு வந்த போதும் தற்போது அது நடாத்தப்படுவதில்லை, கட்சி உறுப்பினர்களை கட்சிக்குள் உள்வாங்கி அனைவரையும் அனைத்தெடுத்து கட்சியினை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சி உறுப்பினர்களிடையே பரவலாக உள்ளது. வட்டாரக் கிளைகளை புனரமைக்கவில்லை. அதில் எனக்கும் பங்குள்ளது. ஆனால் அவர் தேசிய ரீதியிலான வடகிழக்கிற்கு செயலாளர் தானே. தவிர மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரம் செயலாளர் அல்ல. அவர் இவ்வாறான சில பொறுப்புக்களை ஏனையவர்களிடம் பகிராமல் தனக்குள்ளே வைத்து அனைத்து செயற்பாடுகளையும் தானே முன்னெடுத்து சென்றமையும் மிக முக்கிய காரணமாகும்.

கேள்வி: தமிழரசு கட்சிக்குள்ளே முரண்பாட்டு அரசியல் கருத்துமுரண்பாடு ஏற்பட்டமையினால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு பல குழுக்களாக பிரிந்துள்ளது உண்மையா?

அரியநேத்திரன்: கருத்து முரண்பாடு உள்ளது என்பது உண்மை. ஆனால் ஜனநாயக ரீதியிலான கட்சிக்குள் பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்படும். அதனை சிலர் ஏற்பார்கள், சிலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால் ஒரு முரண்பாடு நிச்சயமாக ஏற்படும். அவ்வாறான முரண்பாடு காரணமாகவே எமது கட்சியை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதுபோன்று சிலருக்கு கருத்து முரண்பாடு ஏற்படும் இதுதான் உள்ளதே தவிர விமர்சிக்கும் அளவிற்கு இல்லை.

நேர்காணல் : மட்டு பழுவூரான்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here