ரோடோஸ் பயணம் – உலகம் சுற்றி பார்ப்போம் 01

சாள்ஸ் ஜே போர்மன்

உலகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்களிற்கு உங்களை அழைத்து செல்லும் புதிய தொடர். தமிழ் பக்கம் வாசகர்களிற்காக சாள்ஸ் ஜே போர்மன் எழுதுகிறார். யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த இவர் கடந்த முப்பது வருடங்களாக புலம்பெயர்ந்து வாழ்கிறார். உலகத்தின் தலைசிறந்த சுற்றலா மையங்களிற்கு வாராவாரம் இனி உங்களை அழைத்து செல்வார்.

——————————————————————————————————

 

“ιδού η ρόδος,

ιδού και το πήδημα”  = “Hic Rhodus, hic salta!”

“இதுதான் ரோடோஸ் என்று எண்ணிக்கொள் எங்கே பாய்ந்து காட்டு பார்க்கலாம்!”

உங்களில் எத்தனை பேர் “தற்பெருமை கொண்ட விளையாட்டு வீரன்” கதை கேட்டிருக்கிறீர்களோ, தெரியாது, ஆனால், இக்கதையில் குறிப்பிடப்படுகிறவனைப் போன்றவர்களை நிச்சயம் சந்தித்திருப்பீர்கள்.

ஆரம்ப வரிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கிரேக்க பழமொழியைத் தத்துவ ஞானி ஹேகல் குறிப்பிட்டிருக்கிறார். மேலுமொரு சமயத்தில் கார்ல் மார்க்ஸ் இதையே டொச் மொழியில் “Hier ist die Rose, hier tanze”குறிப்பிட்டிருக்கிறார். “இதோ தருகிறேன் ரோஜாவை, இங்கேயே நடனமாடு,” என்று மாற்றிச் சொல்கிறார் மார்க்ஸ்.

அங்கிருந்துதான் நான் ரோடோஸ் என்ற இடத்தைப் பற்றி அறிந்திருந்தேன். அதே ரோடோஸ் மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலம் என்பது தெரிந்து கொண்டு அதற்கும் குறிப்பிட்ட விகடத் துணுக்குக்கும் என்ன சம்பந்தம் என்று தேடியபோதுதான் அத்துணுக்கு பற்றிய பாட்டி சொன்ன கதையும் தெரியவந்தது.

அதைப் பின்பு சொல்கிறேன், அதற்கு முன் என்னைப் பற்றியும் எனது பிரயாண ஆர்வம் பற்றியும் சில வார்த்தைகளுடன் எனது பயணத் தொடரைச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

சுவீடன் வாழ்வில் விரைவில் மூன்று சதம் போடப்போகும் எனது சொந்த ஊர் புலோலி. பலர் சுவீடனையும் சுவிஸையும் ஒன்றுடனொன்று போட்டுக் குழப்பிக்கொள்வதால் சுவீடன் வட ஐரோப்பாவில் ஸ்கண்டினேவிய நாடுகளில் ஒன்று. இது நோர்வே, பின்லாந்து, டென்மார்க் நாடுகளிடையே இருக்கும் நாடு என்பதையும் குறிப்பிடுகிறேன்.

பல நாடுகளுக்கும், ஏகப்பட்ட ஆர்வக்கோளாறுகளுடன் பயணம் செய்யும் என்னுடன் பெரும்பாலும் 2008 இல் பிறந்த எனது மகன் கதிரும் பிரயாணம் செய்வதுண்டு. அவனது தாயும் நானும் விவாகரத்துச் செய்து கொண்டவர்கள், அவன் என்னுடன்தான் பெரும்பாலும் வாழ்கிறான். தான் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே நோர்வேயின் பனிமலைகளின் பரிசுத்தமான காற்றைச் சுவாசிக்க என்னுடன் ஏறிய அவன் எனது பயணங்களில் ஒன்றையும் தவறவிட விரும்புவதில்லை.

2016 இன் கோடை விடுமுறையின்போது இரண்டு பயணங்கள் செய்திருந்தோம். ஏற்கனவே காரில் இரண்டு வாரங்கள் எத்தனை தடவைகள் சுற்றினாலும் எனக்கு அலுக்காத நோர்வேயின் சில பகுதிகளில் பயணம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருந்தோம். அதன்பின் கதிர் ஒரு வாரம் தனது தாயாருடன் தங்கியிருந்தபின் இரண்டாவது பிரயாணமான ரோடோஸ் சுற்றுலாவுக்குத் தயாராகினோம்.

ஒரு பிள்ளைக்கு இரண்டு பெற்றோருடைய அன்பும், அரவணைப்பும் அவசியமானது. எனது வீட்டுக்கருகிலேயே பாடசாலைக்குப் போகும் அவன் வார இறுதிகளில் மட்டுமே தனது தாயாரைச் சந்திக்கப் போவது வழக்கம். எனவே இந்த நாட்டின் நீண்ட விடுமுறையான கோடை விடுமுறையில் ஓரிரு வாரங்களாகவது அவனை அவனது தாயாருடன் செலவழிக்க ஒழுங்குசெய்வது எங்கள் வழக்கம். குழந்தைகளுக்காகத்தான் பெற்றோரே தவிர பெற்றோருக்காக அல்ல பிள்ளைகள் என்பது எனது திடமான கருத்து.

நாங்கள் வாழும் நகரம் சுவீடனின் தலைநகரமான ஸ்டொக்ஹோமிலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்திலிருக்கிறது. அதிக போக்குவரத்தில்லாத, ஒழுங்காக அமைக்கப்பட்ட தரமான அவ்வீதிகளில் இரண்டரை மணிகளுக்குள் அத்தூரத்தைக் கடந்துவிடலாம். கிரேக்க நாட்டில் இருக்கும் ரோடோஸ் தீவில் எங்கள் பிரயாணத் திட்டம் இரண்டு வாரங்கள்.

விமானத்தில் போகும் நேரம், திரும்பும் நேரமெல்லாம் ரயிலிலோ பேருந்திலோ போய்த் திரும்பி வர வசதியில்லாமல் இருந்ததால், ஒரு ஞாயிறன்று மதியம் ஸ்டொக்ஹோம் ஆர்லாண்டா விமான நிலையத்திற்குப் புறப்பட்டோம் எங்கள் காரில். விமான நிலையத்துக்குச் சில கி,மீ தூரத்திலேயே காரைப் பாதுகாப்பாக நிறுத்தி வாடகையைச் செலுத்திவிட்டு அங்கிருந்து விமான நிலையத்துக்குப் போக இலவசமான பேருந்து சேவைகள் இருக்கின்றன.

சுவீடன் மற்றும் ஸ்கண்டினேவியரிடையே கோடைகாலத்துச் சுற்றுலாவுக்கு மிகப் பிரபலமான ரோடோஸுக்கு அனேகமாக எல்லா விமான நிறுவனங்களிலிருந்தும் அடிக்கடி விமானங்கள் போவதை விமான நிலைய பயண அட்டவணை காட்டியது. ஸ்டொக்ஹோமிலிருந்து நேரடியாக ரோடோஸுக்குப் போகும் எங்கள் “நோர்வீஜியன்” விமானம் மாலையில் புறப்பட்டு நடு நிசியளவில் ரோடோஸின் டயாகொராஸ் விமான நிலையத்தை அடையவிருந்தது.

இப்படியான கோடை வாசஸ்தலங்களுக்குப் பல மலிவு விலை விமான நிறுவனங்களும் பறக்கின்றன. அவைகளின் வியாபாரப் போட்டியில் இப்போதெல்லாம் பெரும்பாலான விமான நிறுவனங்கள் விமானச் சீட்டை மட்டுமே விற்கின்றன. விமானத்துள் நீர் உட்பட எது வேண்டுமானாலும் நிறைய விலை போட்டு விற்கிறார்கள். காரணம் விமானச் சீட்டின் விலை குறைப்பதில்தானே போட்டி.

நாங்கள் எங்களுடன் கொண்டுவந்திருந்த உணவை ஸ்டொக்ஹோம் விமான நிலையத்திலேயே சாப்பிட்டுவிட்டு விமானமேறினோம். பிரயாணங்களின் போது எதை உண்பது, குடிப்பது என்பதில் பிரத்தியேக கவனம் செலுத்தவேண்டும். அதனால் முடிந்தவரை எங்களுடைய உணவுகளை நானே தயார்செய்துகொள்வது வழக்கம். உற்சாக பிரயாணத்துக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். நாளாந்த ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் முக்கிய விடயங்களில் ஒன்று உட்கொள்ளும் உணவு.

நான்கு மணி நேரப் பயணத்தின் பின்பு இறங்கிய பின்பு பசித்தால் அங்கேயே எதையாவது வாங்கிக்கொள்ளலாம் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.

பொதுவாக மலிவுக் கட்டண விமானங்கள் நேர அட்டவணை, வசதிகள் நம்பகரமானவை அல்ல என்ற அபிப்பிராயத்துக்கு வித்தியாசமானது “நோர்வீஜியன்” நிறுவனம். 1993 இல் ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக வளர்ந்து வருவதுடன் பொதுவாக நல்ல பெயரை எடுத்து 2000 ம் ஆண்டுகளில் பல தடவைகள் விமானப்பயணிகளுக்கான பல பரிசுகளையும் பெற்றுவரும் நிறுவனம் “நோர்வீஜியன்.”

குறிப்பிட்ட நேரத்திலேயே பறக்க ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே ரோடோஸை அடைந்துவிட்டது. ரோடோஸ் மூக்கு முட்டக் குடித்துவிட்டு டிஸ்கோ ஸ்தலங்களில் ஆட வரும் இளவயது காளைகள், கன்னியருக்கு மட்டுமன்றி, குடும்பத்தினருடன் வருபவர்களுக்கும் விடுமுறை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வாசஸ்தலம் என்பதால் விமானத்துக்குள் சகல வயதினர்களையும் காணமுடிந்தது.

விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்க ஒழுங்குசெய்திருந்த ஹோட்டல் சுமார் 15 கி.மீற்றர் தூரத்தில் இருந்தது. விமானத்தில் வந்த பெரும்பாலான பயணிகள் குழுக்களாக ஏற்கனவே பயண நிறுவனங்களின் ஒழுங்குகளுடன் வந்தவர்கள். வாழ்வில் எல்லாவற்றையும் முன்னரே வகைப்படுத்தி ஒழுங்குசெய்துகொண்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கும், எவ்வித திடீர் அதிர்ச்சிகளும் ஏற்படாது என்ற வாழ்க்கைக் கோட்பாடு கொண்டவர்கள் சுவீடிஷ் மக்கள். விடுமுறைகளில் நிறுவனங்களால் ஒழுங்குசெய்யப்பட்ட உல்லாசப் பயணங்களில் தான் வழக்கமாக அவர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கான பேருந்து வண்டிகள் விமானத்துக்கு வெளியே காத்திருந்தன.

எவ்வித திருப்பங்களுமில்லாமல், அடுக்கடுக்காகத் திட்டமிடப்பட்ட விடயங்களால், அரச இயந்திரம் என்ற இயந்திரம் பின்னணியில் செயற்பட நாட்கள் உருண்டுகொண்டிருக்கும் சுவிடனில் வாழும் எனக்கோ பயணங்கள் முழுக்க முழுக்க ஒழுங்குசெய்யப்படுவதில் இஷ்டமில்லை.

அதே காரணத்தால் பயணம் செய்யும் பிரதேசத்தைப் பற்றி மட்டுமன்றி அங்குள்ள நாளாந்த நடைமுறைகள் பற்றியும் முடிந்தவரை தெரிந்துகொள்வது அவசியம். இன்று புத்தகங்களை மட்டுமல்ல உலகத்தையே கைவிரல் நுனிகளால் புரட்டி எவ்வளவோ விபரங்களைத் தெரிந்துகொள்ளமுடியுமென்பது பயணங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

டயாகொராஸ் விமான நிலையத்திலிருந்து நகருக்குப் போவதற்கு நாள் முழுவதும் பல அரச, தனியார் பேருந்துகள், சாதாரணமான பணப்பைகளுக்குப் பொருத்தமான கட்டணத்துடன் ஓடுகின்றன. ஆனால், நடுநிசிக்கு முன்பு அவைகளின் சேவை நிறுத்தப்பட்டு, அதிகாலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன. எங்களுக்கு இருந்த ஒரே வழி வாடகைக்கட்டண கார்கள் மட்டுமே. அவைகளிலும் பேரம் பேச ஏதுமில்லை. நிர்ணயிக்கப்பட்ட விமான நிலையம் – நகரம் கட்டணத்தையே கேட்டார் சாரதி.

பொதுவாகவே சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட சேவையில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிகிறது. சாரதியுடன் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது அன்று நடந்த ஐரோப்பிய கால்பந்துப் போட்டியொன்று பற்றிப் பேச்சுத் திரும்பியது. கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமான மகன் கதிருக்கு அது சுவாரஸ்யமாக இருக்கவே அவர்களிருவரும் அதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் நாங்கள் ஹோட்டலுக்கு வரும்வரை.

ரோடோஸ் நகரத்துக்கு வெளியே ஒரு அமைதியான வீதியில் அமைந்திருந்தது அவ்விடுதி. இரவு ஒரு மணியாகிவிட்ட அமைதி சூழலில் தெரிந்தது. ஹோட்டல் வரவேற்பு அறையில் இருந்தவர் எங்களை வரவேற்று அங்குள்ள நடைமுறைகளைச் சுருக்கமாகச் சொன்னார். நாங்களிருவரும் நன்றாகக் களைத்துப் போயிருந்தோம். எதையும் காலையில் எழுந்தபின் பார்த்துக்கொள்ளலாம், இப்போது ‘தூங்குவதற்கு எங்கே கட்டில்?’ என்ற எண்ணமே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்த அந்த துணுக்குக் கதை என்னவென்று ஆர்வத்துடனிருக்கிறீர்களா ?

அதைச் சொல்லிவிட்டுத் தூங்கப்போகிறேன்!

முன்னொரு காலத்தில் ஒரு சவடாலடிக்கும் விளையாட்டு வீரன் – அதிக கெட்டித்தனமில்லாத ஒருவன் – இருந்தான். அவன் ஒரு சமயம் வெளி நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்துவிட்டுத் திரும்பி வந்து தனது வண்டவாளங்களை ஒரு கூட்டத்தினரிடையே அளந்தான். தனது பிரயாணத்தில் பல நாடுகளில் தான் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளெல்லாம் செய்ததாகப் பிரதாபித்தான். அவற்றிலொன்றாக தான் ரோடோஸுக்குப் போயிருந்தபோது அங்கு நடந்த போட்டியொன்றில் தான் மிகவும் நீண்ட பாய்ச்சலொன்று பாய்ந்து எல்லாரையும் அசத்தி வென்று பாராட்டுப் பெற்றதாக அளந்தான்.

அப்போது கூட்டத்துக்குள்ளிருந்து வந்த குரல் ஒன்று ;

“இதுதான் ரோடோஸ் என்று எண்ணிக்கொள் எங்கே பாய்ந்து காட்டு பார்க்கலாம்!”

இதன் கருத்து ஒரு மனிதன் தனது பெருமைகளை அளந்துகொண்டிருப்பதை விட அதைச் செய்து காட்டவேண்டுமென்று சொல்கிறது.

[தொடரும்…..]

 

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here