ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்க்கிறார் சம்பந்தர்; மனோவின் ஏற்பாட்டை விரும்பாதது காரணமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் எம்.பிக்களிற்குமிடையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த கலந்துரையாடலில், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

எனினும், இன்றைய கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறிப்பிடத்தக்க தொகையிலான எம்.பிக்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். மூன்று காரணங்களினால் எம்.பிக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தமிழ்பக்கம் அறிந்தது.

இந்த சந்திப்பிற்கான அழைப்பு தாமதமாக கிடைத்தமை ஒரு தொகுதி எம்.பிக்கள் கலந்து கொள்ளாமைக்கு ஒரு காரணம். சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், த.சித்தார்த்தன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சி.சிவமோகன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட எம்.பிக்கள் தத்தமது மாவட்டங்களில் தங்கியுள்ளனர். ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தத்தமது மாவட்டங்களிலேயே தங்கியுள்ளனர். இரவு 9 மணிக்கு பின்னரே இவர்களிற்கு சந்திப்பிற்கான அழைப்பு கொடுக்கப்பட்டது. சிலருக்கு இரவு 10.30 மணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உடனயாக கொழும்பிற்கு புறப்பட்டு செல்வதற்கு அவகாசம் இல்லாமையால் அனேக எம்.பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள்.

இரண்டாவதாக, மனோ கணேசனின் அரசியல் தமக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலர் தொடர்ந்தும் கொந்தளித்து வருகிறார்கள். கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் அண்மை நாட்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

மனோ கணேசனின் அரசியல் செயற்பாடு தொடர்பில், இரா.சம்பந்தனும் உறுப்பினர்களுடன் சிலபல வார்த்தைகள் பேசியிருக்கிறார். இந்தநிலையில், மனோ கணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ள மாட்டார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இதேவேளை, மூன்றாவது ஒரு காரணத்தின் நிமித்தம் சில தமிழ் எம்.பிக்கள் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. அது மதரீதியான காரணமாகும்.

இன்றைய கூட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரனும் இன்னும் சில எம்.பிக்களுமே கலந்துகொள்ளலாமென தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here