நான் பணம் வாங்கியது உண்மை; விமர்சிக்காமல் யோகேஸ்வரனும் பணத்தை வாங்குங்கள்: சிறிநேசன்!


ரணில் அரசாங்கத்திடம் நான் தனிப்பட்ட ரீதியில் பேசி பணத்தை பெற்றுக்கொண்டது உண்மை. மட்டக்களப்பு எம்.பி, சீ.யோகேஸ்வரன் என்னை விமர்சிக்காமல், கெட்டித்தனத்தை பாவித்து பணத்தை பெற்றுக்கொண்டு அபிவிருத்தி பணிகளில் ஈடுபடலாம். இந்த விடயத்தில் அவருக்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு எம்.பி, ஞா.சிறிநேசன்.

மட்டக்களப்பு எம்.பி ச.வியாழேந்திரனின் கம்பெரலிய நிதியை, சிறிநேசன் பெற்றுக்கொண்டுள்ளார், மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னொரு எம்.பியான சீ.யோகேஸ்வரனிற்கு அந்த பணம் வழங்கப்படவில்லையென அண்மையில் தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை குறிப்பிட்டே, நேற்று முன்தினம் பொதுநிகழ்வொன்றில் சிறிநேசன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

கம்பெரலிய திட்ட நிகழ்வொன்றில் உரையாற்றும்போது

“வியாழேந்திரனின் கம்பெரலிய நிதியை நான் பெற்றுக்கொண்டது உண்மை. எனக்கு கெட்டித்தனம் இருந்தது. நான் பேசி அந்த நிதியை பெற்றேன். யோகேஸ்வரன் எம்.பி கெட்டித்தனம் இருந்தால் இப்படி நிதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் பக்கத்திற்கு செய்திகள் கொடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்க கூடாது.

இந்த விடயத்தில் யோகேஸ்வரனிற்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்“ என்றார்.

இதேவேளை, அந்த கம்பெரலிய நிதியை சிறிநேசன் எப்படி பெற்றுக்கொண்டார் என்பதை தமிழ்பக்கம் முழுமையாக அறிந்தது. இறுதியாக நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டமொன்றில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், அந்த நிதியை இருவரும் சரிசமமாக பிரித்தெடுப்பதே பொருத்தமானது எனவும், ஒரு பகுதி நிதியை யோகேஸ்வரனின் பரிந்துரைகளிற்கு ஒதுக்கும்படியும் தெரிவித்திருந்தார்.

எனினும், பண விவகாரத்தில் கூட்டமைப்பு தலைவரின் அறிவுறுத்தலையும் சிறிநேசன் கண்டுகொள்ளவில்லை.

அந்த நிதியை சிறிநேசனிற்கு ஒதுக்கியுள்ளதாக ஆரம்பத்தில் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தாலும், பின்னர் நிலைப்பாட்டை மாற்றி, இருவரும் சரிசமமாக பங்கிட வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

அந்த அறிவுத்தல்களை புறமொதுக்கி, பொதுநிகழ்வில் உண்மைக்கு புறம்பான தகவலை சிறிநேசன் பரப்ப முற்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இந்த விவகாரத்தில் யோகேஸ்வரனிற்கு கெட்டித்தனம் போதவில்லையென கொள்ளலாமா? அல்லது சிறிநேசன் உருட்டி பிரட்டி பேசுகிறார் என கொள்ளலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here