முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய நந்திக்கொடிகளை அறுத்தெறிந்தார் பிக்கு!


முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6ம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இதையொட்டி ஆலய வீதியின் ஓரமாக நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று, குருகந்த ரஜமகா விகாரதிபதியால் நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நிலவும் சர்ச்சை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் அமைதியான முறையில் தமது ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் பௌத்த பிக்கு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

அன்றைய தினம் மேல்நீதிமன்றின் வழக்கு விசாரணையின் போது பிள்ளையார் ஆலய பகுதியில் ஆலய நிர்வாகத்தினரோ பௌத்த பிக்குவோ எவ்வாறான அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே அங்கே இருக்கின்ற அமைப்புகள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் விதமாக பௌத்த பிக்கு ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நந்திக்கொடி களை அறுத்து வீதியோரத்தில் எறிந்திருக்கின்றார்.  விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் பொலிஸார் கடமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விகாராதிபதி அண்மைய வாரங்களாக முல்லைத்தீவில் தங்கியிருக்கவில்லை. நேற்று முல்லைத்தீவு திரும்பிய கையுடன் அடாவடியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here