கல்முனைக்கு இன்றும் கணக்காளர் வரவில்லை!


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று கணக்காளர் பதவியேற்பார் என கூறப்பட்டிருந்தபோதும், இன்றும் கணக்காளர் பதவியேற்கவில்லை.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்கள், சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு, தன்னெழுச்சியான போராட்டமாக எழுந்தது. இது வெகுஜன போராட்டமாக மாற்றமடைந்ததையடுத்து, தவிர்க்கவியலாமல் அரசியல் தரப்புக்கள் இது குறித்து அரசை வலியுறுத்தின. அமைச்சர் மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இதை வலியுறுத்தியதையடுத்து, கல்முனையை தரமுயர்த்துவதை தவிர்த்து, முதற்கட்டமாக கணக்காளரை நியமிக்க ஒப்புதல் அளித்தது.

கணக்காளர் நியமனத்திற்கு திறைசேரி செயலாளர் அனுமதியளித்தார். இதையடுத்து, கணக்காளர் நியமனத்திற்கான அனைத்து உத்தியோகபூர்வ பணிகளும் நிறைவடைந்தன.

உகண பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் தமிழ் உத்தியோகத்தர் ஒருவரே கல்முனைக்கு கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்ற கடிதம் வழங்கப்பட்டு விட்டது. எனினும், பதில் கணக்காளர் இதுவரை நியமிக்கப்படாததால் அவர் தனது புதிய பொறுப்பை இதுவரை ஏற்க முடியவில்லை. இன்று கணக்காளர் கல்முனைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், உகண பிரதேச செயலகத்திற்கு பதில் கணக்காளர் நியமிக்கப்படாததால் இன்றும் கல்முனை பதவியேற்பு நடக்கவில்லை.

நாளை அல்லது மறுநாள் கணக்காளர் கல்முனையில் பதவியேற்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here