தமிழீழத்தில் தொடங்கி கணக்காளரில் வந்து நிற்கிறோம்; சம்பந்தரை பார்த்து வெட்கப்படுகிறோம்: கிழக்கில் ஆரம்பித்தது புதிய கட்சி!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. அதை செய்ய தவறினால், தமிழ் தலைமைகளல் அதிருப்தியடைந்துள்ள மக்கள், தேசிய கட்சிகளின் பின்னால் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டதரணியுமான கே.சிவநாதன்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி என்ற பெயருடன் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்அங்குரார்ப்பண கூட்டம் நேற்று (16) காலை மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழீழத்தில் ஆரம்பித்து நாங்கள் போராட்டம் நடத்தியது கணக்காளர் ஒருவருக்குத்தானா என நான் கேட்கின்றேன். உண்மையில் இந்தக் கணக்காளரால் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள உபபிரதேச செயலாளரின் கீழ் செயற்பட முடியுமா, சட்டம் இதனை அங்கீகரிக்குமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். தமிழ்த் தலைமைகளில் இருக்கின்ற சட்டவல்லுநர்களைப் பார்த்து கேட்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவானபோது அது எதுவித அரசியலிலும் ஈடுபடப் போவதில்லை, இருக்கின்ற கட்சிகளை இணைத்து தமிழ் மக்கள் தேர்தல்களில் அதிகூடிய ஆசனங்களைப் பெறக்கூடிய வகையில் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு கொண்டுசெல்வது என்ற முயற்சியுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. அது தொடர்பில் தொடர்ச்சியான முயற்சிகளை கிழக்கு தமிழர் ஒன்றியம் செய்துவந்தது. ஆனால் இருக்கின்ற கட்சிகள் சுயநலனை முன்னிறுத்திவருவதன் காரணமாக எமக்கு சாதகமான பதில்களை வழங்கவில்லை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசிலை அனைத்து தமிழ் மக்களும் விரும்பவில்லை. கடந்த காலத்தில் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் நலன்கருதிய எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அந்த தமிழ் தலைமைகள் மீது தமிழ் மக்களுக்கு அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த அதிருப்தி காரணமாக எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த புத்திஜீவிகளை உள்ளடக்கிய பலமான அரசியல் சக்தியை நாங்கள் உருவாக்காது விட்டால் விரக்தியில் உள்ள தமிழ் மக்கள் தேசிய கட்சிகளின் பின்னால் செல்லும் நிலையுருவாகலாம்.

சக்தி வாய்ந்ததொரு அரசியல் தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை கிழக்குத் தமிழர் ஒன்றியத்திற்கு ஏற்பட்டது. இது தானாக ஏற்பட்ட தேவையல்ல. கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து மக்கள் அது ஒரு அரசியல் கட்சியாக உருவாக வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். நாங்கள் அதை நிராகரித்திருந்தோம். இருக்கின்ற பத்துக் கட்சிகளோடு பதினோராவது கட்சியாக கிழக்குத் தமிழர் ஒன்றியம் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை. அவ்வாறான எண்ணமும் எங்களுக்கு இருக்கவில்லை.

இதுவும் பத்துக் கட்சிகளோடு பதினோராவது கட்சியல்ல. ஒரேயொரு கட்சி என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கிழக்கு மாகாண மக்கள் வாக்களிப்பதானால் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கட்சிக்குத்தான் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதோடு, தேர்தல் காலங்களில் இருக்கின்ற எல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான முயற்சிகளை கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் பிரிவு மேற்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்களது தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த எந்த வாய்ப்பையும் தமிழ் மக்கள் சார்பாக பயன்படுத்தத் தவறிவிட்டனர். இறுதியாக நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதும் கூட தமிழ் மக்கள் சார்பான எத்தனையோ கோரிக்கைகள் இருந்தும் எதனையும் முன்வைக்காது வெறுமனே மகிந்த ராஜபக்ச வந்துவிடக்கூடாது என்பதற்காக இறைவனின் அனுக்கிரகத்தில் ஏதாவது நடக்கட்டும் எனக்கூறி வாக்களித்ததாக சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் தேவைகள் எதனையுமே கோரிக்கையாக முன்வைக்காது வெறுமனே மகிந்த ராஜபக்ச வந்துவிடுவார் எனக் கூறுவது தமிழ் மக்களின் தலைவர் இவர்தானா என எண்ணி வெட்கப்படவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் எத்தனையோ விடயங்களை ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டிருக்கலாம். கல்முனை பிரதேசசபைக்கு ஒரு கணக்காளரை நியமிப்பதற்கு ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

தமிழீழத்தில் ஆரம்பித்து நாங்கள் போராட்டம் நடத்தியது கணக்காளர் ஒருவருக்குத்தானா என நான் கேட்கின்றேன். உண்மையில் இந்தக் கணக்காளரால் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள உபபிரதேச செயலாளரின் கீழ் செயற்பட முடியுமா, சட்டம் இதனை அங்கீகரிக்குமா என்பதை முதலில் பார்க்க வேண்டும். கணக்காளருக்கான பணிப்புரைகள் ஒரு பிரதேச செயலாளரினால்தான் கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும்வரை கணக்காளர் உபபிரதேச செயலாளரின்கீழ் செயற்பட முடியாது. உபபிரதேச செயலாளர் தரமுயர்த்தப்படும்போதுதான் பிரதே செயலாளராக வருவார். அந்தப் பிரதேச செயலாளர்தான் கணக்காளருக்கான பணிப்புரைகளை விடுக்க முடியும்.

ஆகவே ஒரு கணக்காளரை நியமித்துவிட்டோம், அதற்காகத்தான் வாக்களித்தோம் என்று கூறுவது சரியான கூற்றல்ல. ஏனென்றால் இந்தக் கணக்காளரை வழிநடத்துவதற்கு பிரதேச செயலாளர் அங்கு இல்லை. அங்கிருப்பது உபபிரதேச செயலாளர் ஆவார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை பயன்படுத்தி உடனடியாக செய்திருக்க வேண்டியது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தி ஒரு கணக்காளரை நியமித்திருந்தால் அது நிலைமை வேறு.
கணக்காளர் உபபிரதேச செயலாளரின்கீழ் செயற்பட முடியுமா என தமிழ்த் தலைமைகளில் இருக்கின்ற சட்டவல்லுநர்களைப் பார்த்து கேட்கின்றேன். இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் இருக்கின்ற பிரதேச செயலாளரின் பணிப்புரையின் கீழ்தான் இந்த கணக்காளர் செயற்பட முடியும் என்றால் இதனால் எங்களுக்கு என்ன பயன்?.

ஆகவே நீங்கள் செய்ய வேண்டிய விடயங்களையெல்லாம் கைநழுவவிட்டுவிட்டு உங்கள் வாக்கு வங்கிகளுக்காக மக்களுக்கு இப்படியான பொய்களைச் சொல்லி இளைஞர்களை பட்டாசு கொளுத்த வைப்பது நியாயமான விடயமல்ல.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியதும் தமிழ் மக்களின் நலனை பார்க்கக்கூடியதுமான சரியானதொரு அரசியல் தளத்தை தமிழ் மக்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அமைத்துக்கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது. அந்த அடிப்படையில் இன்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவான ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி உதயமானது. இதற்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து புத்திஜீவிகளும், தமிழ் மக்களும் பூரண ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

வரும்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு தேர்தல் கூட்டை அமைத்து இதனை செயற்படுத்துவதற்கும் கிழக்குத் தமிழர் ஒன்றியம் ஒரு சமூக அமைப்பாக இருந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினாலும் நெறிப்படுத்தல் இந்த அரசியல் கூட்டிற்கு தேவைப்படுவதால் சமூக அமைப்பாக இருந்து நெறிப்படுத்தலில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதாலும் அரசியல் பிரிவை இன்று நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here