புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மாவையின் ஏற்பாட்டில் நாளை பெருமெடுப்பில் அஞ்சலி!

தமிழீழ விடுதலைப்புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தை நாளை காலை தமிழ் அரசுக்கட்சி நடத்துகிறது.

வலிகாமம் மேற்கு பிரதேசசபை முன்றலில் நாளை காலை 9 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வு, ஈ.சரவணபவன் தலைமையில் நடைபெறும். மாவை சேனாதிராசாவும் கலந்து கொள்கிறார்.

யாழ் பல்கலைகழகத்தின் விஞ்ஞான, தொழில்நுட்ப பீடங்களின் முன்னாள் பீடாதிபதி சி.சிறிசற்குணராசா நினைவுப்பேருரை நிகழ்த்துவார்.

இதேவேளை இன்று பண்ணாகத்தில் உள்ள அவரது சிலையின் முன்பாகவும் நினைவு நிகழ்வு நடக்கிறது. பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கௌரிகாந்தன் உள்ளிட்டவர்கள் உரையாற்றுவார்கள்.

இதேவேளை, விடுதலைப்புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட அ.அமிர்தலிங்கம் மற்றும் வெ.யோகேஸ்வரன் ஆகியோரின் 30வது நினைவு நிகழ்வு இன்று வீ.ஆனந்தசங்கரி தலைமையில் நாச்சிமார் கோவிலடியில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணி தலைமையகத்தில் இடம்பெறும்.

1989இல் அ.அமிர்தலிங்கத்திற்கு விடுதலைப்புலிகள் மரணதண்டனை விதித்தனர். அமிர்தலிங்கம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோது அந்த வீட்டிலிருந்த வெ.யோகேஸ்வரனும் உயிரிழந்திருந்தார். அந்த வீட்டிலிருந்த மாவை சேனாதிராசா எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளவில்லை. இது இன்றுவரை அரசியலரங்கில் சர்ச்சைகளை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசுடன் இணைந்து விடுதலைப்புலிகளை அரசியல்ரீதியாக முடக்கும் காரியத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டே, அ.அமிர்தலிங்கத்திற்கு விடுதலைப்புலிகள் மரணதண்டனை விதித்திருந்தனர்.

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையினர் நுழைந்து படுகொலைகளை மேற்கொண்டபோது, மனித உரிமை அமைப்புக்களின் மூலம் அது குறித்த அதிர்வலைகள் ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அமிர்தலிங்கம், இந்திய அமைதிப்படை இறப்பர் தோட்டாக்களையே பயன்படுத்துவதாக கூறி, அமைதிப்படையின் படுகொலைகளை மறைக்க முயன்றிருந்தார்.

இந்தியா- இலங்கை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர், தமிழகத்தில் இருந்து வெளியாகும் துக்ளக் இதழிலிற்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதில், ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இனிமேல் என்ன செய்வார்கள் என கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அமிர்தலிங்கம், ஆயுதம் தூக்குவதற்கு முன்னர் படித்துக் கொண்டிருந்தவர்கள், இனிமேல் படிப்பை தொடர்வார்கள். மற்றவர்கள், முன்னர் என்ன தொழில் செய்தார்களோ அதை தொடர்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இது புலிகளை கடுமையாக சீண்டியிருந்தது. தமிழ் அரசியல்வாதியொருவருக்கு எதிராக முதன்முதல் உண்டியல் குலுக்கும் நடவடிக்கையை அமிர்தலிங்கத்திற்கு எதிராக புலிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர். உண்டியல் குலுக்கு, கோட் ஒன்று வாங்கி அமிர்தலிங்கத்திற்கு அனுப்புவதென்றும், ஒப்பந்தத்தின் பின்னர் அமிர்தலிங்கம் அவரது முந்தைய தொழிலான சட்டத் தொழிலிற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டே கோட் வாங்க உண்டியல் குலுக்கல் ஆரம்பித்தனர். எனினும், அப்போது திலீபனின் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்திருந்ததால், அந்த நடவடிக்கையை பிரபாகரனே தலையிட்டு நிறுத்தி, இந்த வகையானவர்களிற்கு வேறு விதமாகவே பதிலளிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அப்போது, ஈழமுரசு பத்திரிகையும் அமிர்தலிங்கத்தை கண்டித்து காட்டமாக ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here