மட்டக்களப்பில் ஒதுக்கப்படுகிறாரா சீ.யோகேஸ்வரன்?: வியாழேந்திரனின் கம்பெரலிய பணம் சிறிநேசனிடம்!

மட்டக்களப்பில் சீ.யோகேஸ்வரன் தலைமையிலான அணியை கூட்டமைப்பிலிருந்து ஒதுக்கும் முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது. மாவட்டத்தில் சீ.யோகேஸ்வரனையும், அவரது அணியினரையும் அண்மைக்காலத்தில் திட்டமிட்டரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒதுக்கல் நடவடிக்கைகளால், கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு தமிழ் அரசு கட்சிக்குள் இப்பொழுது இரண்டு அணிகள் தோன்றியுள்ளன. செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையிலான ஒரு அணியும், சீ.யோகேஸ்வரன் தலைமையிலான அணியும் இயங்குகிறது.

முன்னர் விடுதலைப்புலிகள் தரப்புடன் நெருக்கமாக இருந்த தரப்பினர் சீ.யோகேஸ்வரன் தரப்பு அணியாகவும், அவ்வாறில்லாதவர்கள் க.துரைராசசிங்கம் அணியாகவும் பிரிந்து நின்று மல்லுக்கட்டுக்கட்டுகிறார்கள்.

இரா.சம்பந்தனின் செல்லப்பிள்ளையென பெயர் எடுத்தவர் கி.துரைராசசிங்கம். அதனால், இரா.சம்பந்தனின் முழுமையான ஆதரவு கி.துரைராசசிங்கம் அணிக்கு உள்ளது. அண்மைக்காலமாக, ரணில் அரசை சீ.யோகேஸ்வரன் பகிரங்கமாக விமர்சித்து வருவதும், அந்த அணியை ஒதுக்கி வைக்க காரணமென தெரிகிறது.

இருதரப்பிற்குமிடையில் நிலவும் மோதலின் பிந்தைய சம்பவம்தான், சீ.யோகேஸ்வரன் தரப்பிலுள்ள முன்னாள் எம்.பி அரியநேத்திரனின் பிரதேசத்தில், அவருக்கு தெரியாமல், துரைராசசிங்கத்தின் அணியிலுள்ள சிறிநேசனின் அலுவலகம் திறந்தது. இந்த சம்பவம் பின்னர், அறிக்கைப் போராகவும் வெடித்திருந்தது.

தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில், கி.துரைராசசிங்கம் மீளவும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சீ.யோகேஸ்வரன் எதிர்த்ததும் இதனால்தான்.

கி.துரைராசசிங்கத்தின் அணுகுமுறைகள் மாவட்டத்தில் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளூராட்சி தேர்தலில் தனது சொந்த தொகுதியையும் கோட்டை விட்டார். எனினும், அவர் இரா.சம்பந்தனின் செல்லப்பிள்ளையென்பதால் தொடர்ந்து செயலாளராக நீடிக்கிறார்.

இதேவேளை, சீ.யோகேஸ்வரன் தொடர்ந்து ரணில் அரசை விமர்சிப்பதன் மூலம், இரா.சம்பந்தனிலிருந்து தொலைவிற்கு சென்று வருகிறார். இதற்கு உதாரணமாக அண்மையில் சுவாரஸ்ய சம்பவமொன்று நடந்துள்ளது.

மட்டக்களப்பு எம்.பி, வியாழேந்திரன் முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த போது கம்பெரலிய நிதியை பெற்றிருந்தார். எனினும் அவர் அணி மாறியனார். இதனால் அவருக்குரிய இரண்டாம் கட்ட நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த நிதியை, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி, சிறிநேசனிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார் இரா.சம்பந்தன். மாவட்டத்தில் இரண்டு எம்.பிக்கள் உள்ளனர். முறைப்படி நிதியை பகிர்ந்தளிப்பதெனில், அதை இருவருக்கும் பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.

கடந்த மாதம் மட்டக்களப்பு பொது நிகழ்வொன்றில் ரணில் அரசை யோகேஸ்வரன் கடுமையாக தாக்கிய பின்னரே இந்த சம்பவம் நடந்தது.

கம்பெரலிய பணம் சிறிநேசனிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதை அறிந்த யோகேஸ்வரன், நிதியின் குறிப்பிட்ட பகுதியை தனது அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒதுக்குமாறு எழுத்துமூலமாக கோரிக்கை கடிதத்துடன் இரா.சம்பந்தனை அண்மையில் சந்தித்தார் என்பதை தமிழ்பக்கம் நமபகரமாக அறிந்தது. எனினும், அவரது கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்கவில்லை. அது சிறிநேசனிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் செயலகத்திலும் சீ.யோகேஸ்வரன் இதற்கான விண்ணப்பத்தை செய்தபோதும், அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து, அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது குறித்து சீ.யோகேஸ்வரன பிரஸ்தாபித்திருந்தார். எனினும், அப்போதும் இரா.சம்பந்தன் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here