ஹத்துருசிங்கவை விலகக்கோரும் இலங்கை கிரிக்கெட்!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடு அதளபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நிலையில், ஹத்துருசிங்கவை பெரும் நம்பிக்கையுடன் இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் செய்திருந்தது. ஹத்துருசிங்க அப்போது பங்களாதேஷ் பயிற்சியாளராக செயற்பட்டு அணியை தூக்கி நிறுத்தியிருந்தார்.

எனினும், இலங்கை அணியின் பயிற்சியாளரான பின்னர் அணி குறிப்பிடத்தக்க பெறுபேற்றை பெறவில்லையென இலங்கை கிரிக்கெட் கருதுகிறது. முன்னர் வரைமுறையற்ற அதிகாரத்துடன் பயிற்சியாளராக செயற்பட்ட ஹத்துருசிங்க, பின்னர் அணித் தேர்விலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்.

தற்போது இலங்கையணி தொடர் தோல்விகள், துடுப்பாட்டம், களத்தடுப்பில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்களின் அடிப்படையில் ஹத்துருசிங்கவை நீக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

எனினும், மாதாந்தம் 80 இலட்சம் சம்பளம் பெறும் ஹத்துருசிங்க, பதவியிலிருந்து விலக மறுத்து விட்டதாக தெரிகிறது. 2020 வரை அவரது ஒப்பந்தக்காலம் உள்ளது. அதுவரை பயிற்சியாளராக நீடிக்க அவர் விரும்புகிறார். உலகக்கிண்ண தொடரிலிருந்து தோல்வியுடன் நாடு திரும்பிய பின்னர், செய்தியாளர்களை சந்தித்து ஒப்பந்தக்காலம் முடியும்வரை பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கை கிரிக்கெட் அதனை விரும்பவில்லை. அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக மறுத்தால், இலங்கை கிரிக்கெட்டின் கீழுள்ள வேறொரு அணிக்கு பயிற்சியாளராக ஹத்துருசிங்க மாற்றப்படுவார் என தெரிகிறது. அனேகமாக இலங்கை மகளிர் அணி அல்லது இளையோர் அணிக்கு அவர் மாற்றப்படலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here