தமிழ் முற்போக்கு கூட்டணியும் எம்மோடு இணைந்து செயற்படலாம்!

“தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.’’ – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.

இதில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எம்மால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியானது ஏனைய கூட்டணிகளை விட முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தான் முதன்மை நோக்கமாகும்.

எடுத்த எடுப்பிலேயே தலைவர் யார், பொதுச்செயலாளர் யார் என பதவி நிலையை முன்னிலைப்படுத்தி செயற்பட நாம் விரும்பவில்லை. உரிய நேரத்தில் உரிய வகையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். குழந்தை பிறந்தவுடனேயே பெயர் வைத்து விட முடியாது அல்லவா?

ஏன் தற்போது கூட்டணி உருவாக்கப்பட்டது என சிலர் கேள்வி எழுப்பலாம். இவ்வளவு காலமும் கூட்டணி உருவாக்கினார்கள். நடந்தது என்ன? மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டனவா? எனவேதான், மக்களின் நலன்கருதி அவர்களுக்கான கூட்டணியை அமைத்துள்ளோம்.

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எம்முடன் இணைந்து செயற்பட முன்வருபவர்கள் இருப்பின் அவர்களையும் சேர்த்துக்கொள்வோம். விரும்பினால் தமிழ் முற்போக்குகூட இணையலாம். எவருக்கும் இங்கு கதவடைப்பு இடம்பெறாது என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here