தாயையும், மகனையும் மோதி விட்டு ஆடைத் தொழிற்சாலை சாரதி தப்பியோட்டம்!

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவனும், தாயாரும் காயமடைந்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வான், வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக ஆடைத் தொழிற்சாலையினை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

இதன் போது வேப்பங்குளம் பகுதியினை அண்மித்த இடத்தில் குறித்த வாகனத்தின் சாரதி திடீரென பிரேக் பிரயோகித்து வாகனத்தினை பின் நோக்கி செலுத்தியுள்ளார்.

இதன் போது வாகனத்தின் பின்புறமாக நின்ற மோட்டார் சைக்கில் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண் (வயது 36) மற்றும் பாடசாலை மாணவன் (வயது 7) காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து வாகனத்தினை சாரதி எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் வாகனத்தினை பின்நோக்கி தொடர்ந்து சென்று மடக்கிக் பிடித்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அழைத்து சென்றதுடன் போக்குவரத்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் வான் மற்றும் மோட்டார் சைக்கிளை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தினசரி அதிவேகத்துடனேயே பயணிக்கின்றன. இன்று மூன்று ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு பயணித்தது.

இதன் போது வீதியின் குறுக்கே வாகனமொன்று மாற முற்பட்ட சமயத்தில் குறித்த மூன்று வாகனங்களும் திடீரென பிரேக் பிரயோகித்தன. இதன் போது பின்னர் நின்ற குறித்த வாகனம் பின்பக்கம் நோக்கி பயணித்து இரு வாகனங்களையும் முந்திச்செல்ல முற்பட்டது இதன் போதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தினை நேரடியாக பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here