இன்றும் கல்முனைக்கு கணக்காளர் வரவில்லை!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளரை நியமிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி இன்றைய தினமும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த 8ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், க.கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட சில எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர். இதன்போது, மறுநாள்- 9ம் திகதி- கல்முனைக்கு கணக்காளர் நியமிக்கப்படுவார் என பிரதமர் உறுதியளித்திருந்தார்.

9ம் திகதி சுற்றுலா பயணியை போல அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் ஒருவர் சென்றிருந்தார். இடமாற்ற கடிதம், நியமன கடிதம் எதுவுமின்றி அவர் சென்று, வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட முயன்றார். இடமாற்ற ஆவணங்கள் முறையாக இல்லாமல் அவர் கையொப்பமிட முடியாதென அறிவுறுத்தப்பட்டதையடுத்து அவர் திரும்பி சென்றார்.

கல்முனை தரமுயர்த்தல் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சூழ்ச்சிகரமான அணுகுமுறையை கையாள்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே நடக்கின்றன.

கல்முனை பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படுவதெனில், அது திறைசேரி செயலாளரின் அனுமதியுடனே நியமிக்கப்பட வேண்டும். கல்முனைக்கு கணக்கு ஆரம்பிப்பதெனில், கல்முனை தரமுயர்த்தப்படும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இப்படியான மேல்மட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில், அம்பாறை அரச அதிபரின் ஊடாக கணக்காளர் என கையை வீசிக்கொண்டு ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டது, ஏமாற்று நடவடிக்கையென்ற பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அந்த கணக்காளர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வரவில்லை. இன்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் செல்லவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here