ஜனாதிபதிக்கு நீங்கள் பாடம் படிப்பிக்க முடியாது: தெரிவுக்குழு முன் தயாசிறி!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் முக்கிய ஹோட்டல்களிற்குள் குண்டுகள் வெடித்தபோதும், தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்குள் மட்டும் ஏன் குண்டு வெடிக்கவில்லை? அந்த சமயத்தில் தாஜ் சமுத்திராவிற்குள் இருந்தவர்கள் யார்? இது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நேற்று தெரிவித்தார் தயாசிறி ஜயசேகர.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் முன் நேற்று இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர முன்னிலையாகியிருந்தார். அங்கு சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சி நேர்காணலில், தயாசிறி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தெரிவுக்குழுவினர் விசாரித்தனர்.

“இந்த தாக்குதலை 225 எம்.பிக்களும் அறிந்திருந்ததாக கூறுவது தவறு. எனது பாதுகாப்பு பிரிவினர் இதுகுறித்து எனக்கு தெரிவிக்கவில்லை. இது குறித்து கேட்கும்போது நாம் சில காரணங்களை கூறுவோம். அப்படியான ஒன்றே அந்த தொலைக்காட்சி பேட்டி. தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏன் வெடிக்கவில்லையென்ற கேள்வி என்னிடமுள்ளது.தெரிவுக்குழு இதில் கவனம் செலுத்த வேண்டும்“ என்றார்.

இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர்- அந்த குண்டு வெடிக்காததால் ஏதோ ஒரு காரணத்திற்காக வெடிக்க வைக்கப்படவில்லையென கருதலாமா? என கேள்வியெழுப்பினார்.

தயாசிறி- உங்களுக்கு அப்படி எண்ணத் தோன்றுகிறது. எனக்கு நான் கூறியதை போல எண்ணத் தோன்றுகிறது. ஏன் வெடிக்கவில்லையென்ற சந்தேகம் எனக்குள்ளது.

சரத் பொன்சேகா- நீங்கள் கூறுவதை பார்த்தால், அந்த ஹோட்டலில் யாராவது பிரமுகர்கள் இருந்து, அதனால் வெடிக்காது தடுக்கப்பட்டுள்ளது என்ற கற்பனை கதை மாதிரி உருவாகுமே.

தயாசிறி- இது கட்டுக்கதை இல்லையே. இது குறித்து சரியாக விசாரியுங்கள். தாக்குதல் தொடர்பாக சரியான தகவல்களை நீங்கள் பெறலாம். நீங்கள் இராணுவத்தளபதியாக இருந்தவர். உங்களிற்கு அது இலகுவானதென நினைக்கிறேன். குண்டுத்தாக்குதலின் போது ஹோட்டலில் இருந்தவர்களின் விபரங்களை அறிந்தால் அடுத்த கட்ட விடயங்கள் வெளிவரும்.

சரத் பொன்சேகா- நீங்கள் கூறுவதை போல பார்த்தால் புலிகள் பாலத்தில் தெஹிவளை புகையிரதத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெயாங்கொடையில் வெடிக்கவில்லை. அப்படியானால் வெயாங்கொடையில் யாரோ இருந்தார்கள், அதனால் வெடிக்கவில்லையென சொல்ல முடியாதே.

தயாசிறி- அவ்வாறு இல்லை. இன்னொரு மாதிரியும் கூற முடியும். வெயாங்கொடை புகையிரதத்தில் சென்றவர் வெடிக்க வைக்காது சென்றார் என்றும் கருதலாம். அதாவது வெயாங்கொடை ரயிலில் ஏறியவர், அதில் வெடிக்க வைக்காமல் இன்னொரு ரயிலில் வெடிக்க வைத்தால் சந்தேகம் வரும். அது மாதிரியே இதுவும் உள்ளது.

கேள்வி- நீங்கள் ஒரு முக்கிய கட்சியின் பிரமுகர். கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்கள நாடு என கூறப்பட்டது. இரு வர்ணங்கள் அகற்றப்பட்ட கொடி கொண்டுவரப்பட்டது. இது குறித்த தங்களின் நிலைப்பாடு என்ன?

தயாசிறி- தமிழ் தரப்பினரும் தமது தலைவர் பிரபாகரன் என்று கூறுகின்றனர். சிங்கள அடிப்படைவாதிகள் சிங்கள தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர். இவ்வாறான விடயங்களால் மக்கள் அடிப்படை வாதங்களுக்கு உட்பட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இது சிங்கள நாடு என அவர்கள் நினைக்கின்றனர். முஸ்லிம் அமைச்சர்கள், உறுப்பினர்கள் இணைந்து முஸ்லிம் அரசையும், தமிழர்கள் இணைந்து தமிழ் அரசையும் அமைக்க முடியுமா? சிங்கள மக்கள் பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். இந்த நிலையில் நாட்டை பாதுகாக்க இலங்கையின் ஒன்றுபட வேண்டும்.

கேள்வி- இலங்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேறு தரப்பில் குற்றம் கூற முடியுமா? இது திசை திருப்பும் வகையில் அமையாதா? இப்போதே இது ஐஎஸ் என்று உறுதியாகத் தெரிகின்றது. அவ்வாறு இருக்கையில் ஏன் கதையை மாற்ற வேண்டும்?

தயாசிறி- நான் திசை திருப்பவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் இருப்பதாகக் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதமரின் உரையைப் பாருங்கள். அமைச்சர் கிரியெல்ல கூறியவற்றை பாருங்கள். அவர்கள் ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை

கேள்வி- அரசியல்வாதிகள் பல கதைகள் கூறினார்கள். ஆனால் ஐ.எஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தயாசிறி- இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு பட்டதை யார் உங்களுக்கு கூறினார்கள்? எந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது? அதனை வெளிப்படுத்துங்கள். நான் நம்புகிறேன். உறுதியாக கூறுங்கள். அப்போது நான் நம்புகிறேன். என்றும் இது குறித்து விசாரணைகள் சரியாக நடக்கவில்லை என்று கர்தினால் கூறுகிறார். வத்திக்கானில் சென்று அழுகிறார்.

கேள்வி- அப்படி என்றால் தெரிவுக் குழு விசாரணைகளை சரியாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?

தயாசிறி- நான் அவ்வாறு கூறவில்லை. நீங்கள்தான் கூறுகின்றீர்கள். விசாரணைகள், கைதுகள் இடம் பெற்றுள்ளன. கர்தினால் வத்திக்கானில் அழுதுகொண்டு கருத்து கூறியது குறித்து நான் கூறினேன். எதிர்காலத்தில் தாக்குதல் நடக்கும் என மக்கள் நினைக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த பிரச்சினையை முடிக்கலாம் என்று நீங்கள் (சரத் பொன்சேகா) கூறினீர்கள். ஆனால் அது முடியாது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆகவே அதில் நம்பிக்கை இல்லை என்று கூறினேன்.

கேள்வி- வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டிருந்தால் இந்த விடயத்தில் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஜனாதிபதியை கொலை செய்வதற்கு வெளிநாட்டு சக்திகளின் சதி இருப்பதாக கூறப்பட்டது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக கூற முடியுமா?

தயாசிறி- அவ்வாறு கூற முடியாது. இது வேறு பிரச்சினை. நான் அவ்வாறு கூற முற்படவில்லை. இந்த விடயம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை ஆகும்.

கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சகல பாதுகாப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டீர்களா?

தயாசிறி- இல்லை.

கேள்வி- எப்போது கலந்து கொண்டீர்கள்?

தயாசிறி- தாக்குதல் நடைபெற்ற அன்று கூடிய கூட்டத்தில்.

கேள்வி- தாக்குதல் நடத்த நடந்த அன்றா.. அடுத்த நாளா?

தயாசிறி- அடுத்த நாள்.

கேள்வி- யார் உங்களை அழைத்தது?

தயாசிறி- ஜனாதிபதி.

கேள்வி- தேசிய பாதுகாப்பு கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது. எத்தனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.

தயாசிறி- இவர்கள் தான் இருக்க வேண்டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவையானவர்களை ஜனாதிபதி அழைப்பார். அவருக்கு நம்பிக்கை உள்ள நபர்களை அவர் அழைத்தார். இதில் அமையும் அழைத்தார் என்றே நினைக்கிறேன்.

கேள்வி- பாதுகாப்பு குழு கூட்டங்களில் நினைக்கும் நபர்களை அழைக்க முடியாது. இது அரசாங்கம் மட்டுமே ஆராய வேண்டிய விடயம்.  எதிர்க்கட்சிகள் இது செல்லக்கூடாது.

தயாசிறி- எங்காவது அவ்வாறு கூறப்பட்டுள்ளதா? ஏதாவது புத்தகத்தில் அது உள்ளதா? இருந்தால் கூறுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்.

கேள்வி- வர்த்தமானியில் உள்ளது. பின்னர் இது மாற்றப்பட்டது. ஆனால் அதிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை தான் வரவழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைக்க முடியாது.

தயாசிறி- நாம் அன்று எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக்கிறோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒரு நாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை.

கேள்வி- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பினர்களுடன் பேச வேண்டுமென்றால் வேறிடத்தில் பேச வேண்டும். ஜனாதிபதி இதனைத் இதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

தயாசிறி- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடியாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள்.

கேள்வி- பாதுகாப்பு பேரவை விடயங்களை அடிப்படையாக கொண்டு சில விடயங்களை நீங்கள் வெளிப்படுத்தீனீர்களா?

தயாசிறி- இல்லை. நான் அதை வெளிப்படுத்தவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here