ரணில் அரசுக்கு இன்று எந்த சிக்கலுமில்லை: கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவிற்கு முடிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் அரசும், பிரதமரும் தோல்வியடைந்து விட்டனர் என தெரிவித்து ஜேவிபி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது.

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அரசு தப்பிப் பிழைக்குமா என்பதை போன்ற பரபரப்பான தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இன்றைய வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றம் ஏற்படவோ, ஆளும் ரணில் அரசுக்கு நெருக்கடி ஏற்படவோ வாய்ப்பில்லையென்ற நிலைமைதான் உள்ளது.

ஏனெனில், ஆட்சியை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவதாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடாப்பிடியான நிபந்தனைகள் எதுவுமின்றி, இன்று அரசை ஆதரிக்க முடிவுசெய்துள்ளது. கல்முனை தரமுயர்த்தல், அரசியல் கைதிகள் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனைகளில் கடந்த முறைகளில் எப்படியான அணுகுமுறையை கையாண்டதோ, அதே விதமான அணுகுமுறையையே இம்முறையும் கையாளுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கவல்ல முக்கிய தலைவர் ஒருவர் நேற்றிரவு தமிழ்பக்கத்துடன் பேசும்போது, நம்பிக்கையின் அடிப்படையில் இம்முறையும் ரணில் விக்கிரமசிங்கவை இம்முறையும் ஆதரிப்போம். ஆனால் எம்.பிக்கள் பலர் பல கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அவற்றை பெற்றுக்கொள்ள கடைசிவரை முயற்சிப்போம். இதனால் இன்று வாக்கெடுப்பிற்கு முன்னதாக கூட்டமைப்பு எம்.பிக்களிற்கும் பிரதமரிற்குமிடையிலான சந்திப்பு நடக்கலாம். அதற்கு முன்பாக காலை 10 மணிக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடக்கவிருக்கிறது. அதில்தான் ரணிலுடனான சந்திப்பு அவசியமா என்பது முடிவாகும் என்றார்.

இதேவேளை, கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படா விட்டால் ரெலோவின் இரண்டு எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், க.கோடீஸ்வரன் இருவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். கிழக்கு எம்.பிக்கள் அரசை ஆதரிப்பதில் ஆட்சேபணையில்லையென கருதினாலும், உள்ளூரில் ஏற்படும் எதிர்ப்பு குறித்து நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். எனினும், அவர்களும் ஆதரித்து வாக்களிப்பார்கள்.

இதற்கிடையில், கோடீஸ்வரனை சமரசம் செய்து அவரது வாக்கை ரணில் அரசுக்கு பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளும் நடக்கிறது. நேற்று முன்தினம் கோடீஸ்வரனை தனிமையில் அழைத்துக் கொண்டு சென்று, ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தினார் எம்.ஏ.சுமந்திரன். முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பை மீறி கல்முனையை தரமுயர்த்த ரணில் அரசு தயாராக இல்லாத நிலையில், இன்று கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க அரசியல் கோரிக்கையெதனையும் வென்றெடுக்க வாய்ப்பில்லையென்றே தெரிகிறது. மாறாக, கம்பெரலிய போன்ற விசேட அபிவிருத்தி நிதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சில வாரங்களின் முன்னர் கூட்டமைப்பு உள்ளிட்ட அரச தரப்பு எம்.பிக்கள் ஒவ்வொருவருக்கும் 40 வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள அமைச்சின் கீழ் 15,000 ரூபா சம்பளத்தில் ஒரு வருட தகுதிகாண் காலத்துடனான வேலைவாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு கடந்த வாரம் கொழும்பில் நடந்து முடிந்தது. எனினும், இந்த வேலைவாய்ப்பில் வடக்கு கிழக்கு அரச தரப்பின் ஒவ்வொரு எம்.பியின் சிபாரிசிலும் 40 பேர் இணைக்கப்படவுள்ளனர். அரச தரப்பு பட்டியலில் கூட்டமைப்பு எம்.பிக்களும் உள்ளடங்குகின்றனர்.

வரும் வாரங்களில் ஏனைய அமைச்சின் வேலைவாய்ப்புக்களில், கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு குறிப்பிட்டளவான கோட்டா வழங்குவதாக தற்போது ரணில் அரசு உறுதியளித்துள்ளது. அனேகமாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், இம்முறை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் அனுகூலம் இதுவாகத்தான் இருக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here