நம்பிக்கையில்லா பிரேரணையில் நடுநிலை; ரணில் அரசை இம்முறையும் காப்பாற்றினால் மக்களிடமிருந்து அன்னியப்படுவோம்: ரெலோ யாழ் கிளை!

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட, இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாரர்ளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் அக் கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம்.

அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல், அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் அலுவலகத்தில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. இந்தச் சூழ் நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்த கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலலும் அதனைத் தொடர்ந்து நாடாளுன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும் அதைப் போல கடந்தாண்டு ஒக்ரோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

இந்தச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு, இரானுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு. அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ்நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளது.

உதாரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிதி காணி அதிகாரத்தை வழங்காமல் ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை முண்டு கொடுத்த காப்பாற்றக் கூடாதென்ற உணர்வு மக்கள் மத்தியிலே கொந்தளிப்பாக இருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

அந்த அடிப்படையிலே தான் தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் குழு இன்றைக்கு கூடி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையிலே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு என்ன செய்ய வேண்டுமென விவாதித்த பொழுது, ஒருவர் கூட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு எதிராக வாக்களித்து அதாவது அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் அரசாங்கம் இவ்வாறு எங்களை ஏமாற்றிய காரணத்தால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற கருத்து பலமாக இருந்தாலும் கூட, இவ்வளவு காலமாக அரசிற்கு ஆதரவைக் கொடுத்துவிட்டு இப்போது உடனடியாக எதிர்ப்பைக் காட்டுவது- இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே- நாங்கள் உங்களை ஆதரிக்க மறுக்கின்றோம், உங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை என்னும் விதத்திலே இந்த வாக்கெடுப்பிலே கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டுமென ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுகக்கின்றோம்.

இதைவிட இன்றைக்கு தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் சிங்கள பௌத்தமயமாக்கல், 290 கோடி ருபாவில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைப்பது, தமிழ் நிலத்தை சிங்கள திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இனிமேலும் இந்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் போய் விட்டதென்பதை இந்த நாட்டுக்கும் அகில உலகிற்கும் தெரிவிப்பதற்கான இந்த அருமையான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் நிறைவேற்ற வேண்டும்.

எங்களுடைய கோரிக்கையை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்து தமிழ் மக்களின் அந்த விருப்பத்திற்கமைய சாதகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர்ந்தும் அரசைக் காப்பாற்றுவதன் மூலம் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படக் கூடிய, அதாவது தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து அபாயம் இருக்கின்றதென்பதையும் எச்சரிக்கையுடன் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இது வேண்டுகோள் தான். ஏற்றுக் கொள்ளப்படலாம். ஏற்றுக்கொள்ப்படலாமலும் விடலாம். ஆனால் இதனால் எழும் பிரதி பலன்களை கூட்டமைப்பு அனுபவிக்க வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு தான் நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஆகவே நாளைக்கு எடுக்கப் போகும் தீர்க்கமான முடிவு எதிர்கால தமிழ் தேசிய அரசியலிலே பாரிய மாற்றங்களை பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம் காட்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here