பாலியல் வழக்கில் சிக்கிய முகிலன் இன்று நீதிமன்றத்தில்!

பாலியல் புகாரில் கைதான சமூக ஆர்வலர் முகிலன் சென்னையில் இருந்து நேற்று கரூர் அழைத்து செல்லப்பட்டார். அவரை இன்று கரூர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.

கடந்த பிப்ரவரி 15-ந் தேதி அன்று எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது சமூக ஆர்வலர் முகிலன் திடீரென்று காணாமல் போய்விட்டார். இதுதொடர்பாக முதலில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகிலனை தேடி வந்தனர். கடந்த சனிக்கிழமை திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் மீட்கப்பட்டார். அவரை திருப்பதியில் இருந்து சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

முகிலன் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் ஏற்கனவே பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றை பதிவு செய்து இருந்தனர். அந்த வழக்கையும் சி.பி. சி.ஐ.டி. போலீசார்தான் விசாரித்து வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலியல் வல்லுறவு வழக்கில் முகிலனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் 2-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை வீட்டில் அவரது முன்னிலையில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முகிலன் மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டார். அதன்பேரில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து திங்கட்கிழமை அதிகாலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகிலன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய நோய் சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்தபிறகு முகிலன் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பின்னர் முகிலனை சி.பி. சி.ஐ.டி. போலீசார் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தினார் கள். முகிலனை 10-ந் தேதிக்குள் (இன்று) கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு ரவி உத்தரவிட்டார். மேலும் தேவைப்பட்டால் முகிலனுக்கு உரிய மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டும் என்றும், அவருக்கு உரிய உணவு பொருட்களை வாங்கித்தர வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு ஆணை பிறப்பித்தார்.

அப்போது முகிலன் இரவு பயணம் எனது உடல்நிலைக்கு ஒத்துக்கொள்ளாது என்றும், நாளை (இன்று) பகலில் என்னை அழைத்து சென்று கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

முகிலனை அழைத்து செல்வதற்காக கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகாதேவி எழும்பூர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அவர் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார், போலீஸ் வேனில் முகிலனை ஏற்றி பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை கரூருக்கு அழைத்து சென்றனர். அவர் இன்று (புதன்கிழமை) கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here