‘கல்முனைக்கு அழுத்தம் கொடுத்து பார்ப்போம்’: கூட்டமைப்பு முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. வரவிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பிற்கு முன்னதாக அரசாங்கத்துடன் பேசி நிறைவேற்றக்கூடிய விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இரா.சம்பந்தனும் இதில் கலந்து கொண்டிருந்தார். இரா.சம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது. அந்த செய்தியில் உண்மையில்லை. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவரது உறவினருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்வையிட சம்பந்தன் சென்றதே, இந்த வதந்திக்கு காரணம்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இன்றைய கலந்துரையாடல் நடக்கவில்லை. ரணில் அரசுக்கு சாதகமாக வாக்களிப்பதற்கு முன்னர் நிறைவேற்றக்கூடிய விவகாரங்களை பற்றியே ஆராயப்பட்டது.

அனேகமாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையைத்தான் அனேகமானவர்கள் வலியுறுத்தினர். இனப்பிரச்சனை தீர்வு உள்ளிட்ட பெரிய விடயங்களில் இருந்து, சிறிய விடயங்கள் வரை எதுவுமே இந்த அரசில் நடக்கவில்லை, இந்த நிலையில் கல்முனையையும் தரமுயர்த்தாமல், ரணில் அரசை ஆதரித்தால் மக்களை எதிர்கொள்ள முடியாதென அனேகமாக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசை தோற்கடிப்போம் என பேரம்பேசி, கல்முனையை தரமுயர்த்த முடியுமா என முயற்சித்து பார்க்கலாம் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். நாம் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று கூறினால் அரசிலுள்ளவர்கள் அதை நம்புவார்களா என ஒரு எம்.பி நகைச்சுவையாக பேசினார்.

இயன்றவரை அரசிற்கு அழுத்தம் கொடுத்து கல்முனையை தரமுயர்த்த வைக்க வேண்டுமென எல்லா எம்.பிக்களும் கேட்டுக் கொண்டனர்.

இதன்படி நாளை மறுநாள் வியாழக்கிழமை காலையில் மீண்டும் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டம் கூடுவதென முடிவாகியது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here