காங்கிரசிற்குள் வலுக்கும் இளம் தலைமை கோரிக்கை

ராகுல் காந்தி ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களையே பெற்று படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியின் ராஜினாமாவை திரும்ப பெற வைப்பதற்கு கட்சித்தலைமை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போனது. அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே பிற தலைவர்களின் ராஜினாமாவும் தொடர்கிறது. சமீபத்திய நிகழ்வாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பதவி விலகினார். இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இதற்கிடையே நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சியான காங்கிரசுக்கு புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் ஏற்பட்டு உள்ளது. இதில் கட்சியின் முன்னணி தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சுஷில் குமார் ஷிண்டே, அசோக் கெலாட், மோதிலால் வோரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே இனி இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இக்கோரிக்கையை வைக்கும் பஞ்சாப் மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங், ராகுல் காந்திக்கு பதிலாக நியமிக்கப்படும் ஒருவர், மக்களிடம் பிரபலமானவராக, இளம் தலைமுறையை ஈர்க்கும் கவர்ச்சியை பெற்றவராக இருக்க வேண்டும் எனக்கூறினார். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்கும் நிலையில், இந்த சமூகத்தை பிரதிபலிப்பவராகவே காங்கிரசின் தலைவர் இருக்க வேண்டும் என கட்சியின் காரியக்கமிட்டியை அவர் கேட்டுக்கொண்டார். ராகுல் காந்தியே கட்சிக்கு ஒரு இளம் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமரிந்தர் சிங்கின் இந்த கோரிக்கை கட்சியின் அனைத்து மட்டத்திலும் வலுப்பெற்று வருகிறது. இளைஞர் காங்கிரசை சேர்ந்த முன்னணி தலைவர்கள் சிலர் கடந்த வாரம் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது கட்சியின் தலைமை பதவியை இளம் தலைவர் ஒருவரிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர். மேலும் வயதான தலைவர்கள் தற்போதைய இளம் தலைமுறையினரை ஈர்ப்பதில் தவறிவிடக்கூடும் எனவும் அவர்கள் கூறினர்.

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய டெல்லியின் முன்னாள் செயல்தலைவர் ராஜேஷ் லிலோதியா, ‘ராகுல் காந்தி எப்போதும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்காக உழைக்கவும் செய்திருக்கிறார். அவரது நோக்கத்தை நான் ஆதரிக்கிறேன். கட்சியின் உயர்மட்டம் உள்பட அனைத்து மட்டத்திலும் இளம் தலைவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு இளம் தலைவர் கோரிக்கை காங்கிரசில் வலுவடைந்து வந்தாலும், அதற்காக எந்த ஒரு தலைவரையும் யாரும் இன்னும் அடையாளம் காட்டவில்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் (வயது 41) மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா (48) ஆகியோரில் ஒருவர் காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்காக பணியாற்றினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here