“பொட்டம்மானை மட்டும் ஒப்படையுங்கள்; யுத்தத்தை நிறுத்தலாம்“- இந்தியா கொடுத்த புரபோஷல் – 2

அன்ரன் பாலசிங்கத்துக்கு இந்தியா அனுப்பிய கடைசி செய்தி

பா.ஜ.கவுடன் மட்டும் தொடர்பேற்படுத்தி பலனில்லை, காங்கிரசுடனும் தொடர்பேற்படுத்த வேண்டுமென புலிகள் நினைத்தனர். பொது தேர்தலில் பா.ஜ.க சில சமயம் வெற்றியடையாவிட்டால், நிலைமை மோசமாகிவிடலாம். காங்கிரசுடன் தொடர்பிருப்பது அவசியம். அந்த பேச்சு சரி வந்தால், சில சமயங்களில் அவர்களே யுத்தத்தையும் நிறுத்தவும்கூடும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் புலிகளிற்கு எதிராக நடப்பார்கள் என்பது புலிகளிற்கு தெரியும். அதனால்தான் 1991இல் ராஜிவ் காந்தியையும் கொன்றார்கள்.

2008 செப்ரெம்பரில் புலிகளின் செய்தியொன்று ப.சிதம்பரத்திற்கு கிடைத்தது. அந்த செய்தியை கொண்டு வந்தவர் மலேசிய வர்த்தக புள்ளி. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன்  வர்த்தக தொடர்பில் இருப்பவர். இந்த வர்த்தகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றது உபரி தகவல். இதற்கு மேல், மலேசிய வர்த்தக புள்ளியை அடையாளப்படுத்த முடியாது. அது சட்டசிக்கல்களை ஏற்படுத்தும்.

புலிகளின் மெசேஜை அந்த வர்த்தக புள்ளிதான் ப.சிதம்பரத்திற்கு பாஸ் செய்தார். யார் மூலம் தகவலை பாஸ் செய்தால் காரியம் சாதிக்கலாமென்பதை புலிகள் அறிந்து வைத்திருந்தனர். “யுத்தத்தை நிறுத்த வேண்டும். பேச்சுக்காக புலிகள் விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்காக போதியளவு இறங்கி வரவும் தயாராக இருக்கிறார்கள்“ என்பதே அந்த மெசேஜ்.

இந்த இடத்தில் மிகமுக்கிய இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். இதுவும் ஒரு பிளாஷ்பேக்தான். சிதம்பரத்தின் மூலம்தான் புலிகள் காங்கிரசுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார்கள் என நினைக்காதீர்கள். சிதம்பரத்துடனான தொடர்பு ஏற்படுத்தப்படுவதற்கு இரண்டு வருடங்களின் முன் “வெட்டு ஒன்று துண்டு இரண்டாக“ புலிகள்- காங்கிரஸ் பேச்சு நடந்து முடிந்திருந்தது. 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததும் அந்த பேச்சு நடந்தது.

புலிகள்தான் இந்த பேச்சையும் ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நலன்களிற்கு குறுக்காக புலிகள் நிற்கமாட்டார்கள், உத்தியோகபற்றற்ற முறையிலான தொடர்பையாவது இரண்டு தரப்பும் பேணலாம், இதன் மூலம் தேவையற்ற குழப்பங்கங்களை தீர்க்கலாமென புலிகள் இந்தியாவிற்கு தகவல் அனுப்பினார்கள். இது 2005 இல் நடந்தது.

இந்த தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் இருவர். முதலாவது ஆள், நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். இரண்டாவது ஆள், பிரித்தானியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் வடஇந்தியர். அவர் றோ அமைப்பை சேர்ந்தவர். புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் தங்கியிருந்தபோது, இந்தியாவுடன் நடந்த உத்தியோகபற்றற்ற பேச்சுக்கள் எல்லாம் இந்த றோ ஆள் மூலம்தான் பாலசிங்கத்துடன் நடத்தப்பட்டது.

உங்களிற்கு நன்றாக நினைவிலுள்ள ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண குடாநாட்டை புலிகள் கைப்பற்றலாமென்ற நிலைமையிருந்தது. இப்போது இந்தியா தலையிட்டதாக சொல்கிறார்கள் அல்லவா, எப்படி தலையிட்டது தெரியுமா? இந்த றோ ஆள்தான் பாலசிங்கத்திற்கு இந்தியாவின் நிலைப்பாட்டை அறிவித்தார்.

2005 இல் நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளின் செய்தியை இந்தியாவிற்கு சொன்னார். சொல்ஹெய்ம் ஒரு இராஜதந்திரி. “ம்… பார்க்கலாம்“ என்ற அளவில் அவருடன் இந்தியா அளவாகத்தான் பேசியது.  ஆனால் இலண்டனில் உள்ள றோ ஆள்தான் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். அந்த யோசனையை கேட்டு புலிகள் உண்மையிலேயே ஆடிவிட்டார்கள்.

2006 இன் மத்திய பகுதி. அன்ரன் பாலசிங்கம் கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயம். சமாதான பேச்சுக்கள் முறிந்து, வன்னியில் படைநடவடிக்கைகள் தீவிரம் பெற தொடங்கியிருந்தது.  தனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார். இந்த சமயத்தில் பிரபாகரன்- பாலசிங்கம் உறவிலும் முன்னரை போல சுமுகமிருக்கவில்லை. இந்தியாவை சமாளித்தால்தான் விடுதலைப்புலிகளிற்கு எதிர்காலம் பிரகாசமாகுமென்பதை பாலசிங்கம் உணர்ந்திருந்தார்.  தனது மரணத்திற்கு முன்னர் இந்தியாவை சமாளிக்க விரும்பினார். கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்திலும் இந்திய மத்திய அரசிற்கு சில தகவல்களை கொடுத்தார். புலிகள் ஒருபோதும் இந்தியாவின் நலன்களிற்கு எதிராக செயற்படாது, இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு  புலிகளை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.

எரிக் சொல்ஹெய்ம்

இந்த தகவல்கள் எல்லாம் இலண்டனில் இருந்த றோ ஆளின் மூலம் காங்கிரசின் உயர்மட்டத்திற்கும், சௌத் புளொக் கொள்கை வகுப்பாளர்களிற்கும் சென்றது. அவர்கள் சில வாரம் இந்த விடயத்தில் தீவிர ஆலோசனை நடத்திவிட்டு புலிகளிற்கு பதில் அனுப்பினார்கள். இலண்டன் ஆள் மூலம்தான் அந்த பதில் வந்தது.

“ராஜிவ் கொலை விசயத்தில் பிரபாகரன், பொட்டம்மான் இருவருமே குற்றவாளிகள். இருவரையும் தண்டிக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. கடந்தகால சம்பவங்களிற்காக புலிகளும் வருந்துகிறார்கள். சில விசயங்களில் விட்டுக்கொடுப்பாகவும் நடக்க தயாராக இருக்கிறார்கள். இந்தியாவும் இதை புரிந்துகொண்டு சில விட்டுக்கொடுப்புக்களிற்கு தயாராக இருக்கிறது. பிரபாகரன் உங்கள் தலைவர். அவரை தண்டிக்கப்போகிறோம் என்பது பொருத்தமில்லாததுதான். இதில் இந்தியா விட்டுக்கொடுப்பாக நடக்கிறது. ஆனால் கண்டிப்பாக பொட்டம்மானை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இந்திய சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்“

இதுதான் இலண்டனில் இருந்த றோ ஆள், பாலசிங்கத்திற்கு கொடுத்த இந்தியாவின் செய்தி.

இந்த செய்தி பிரபாகரனிற்கு உடனே அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் இந்த விடயத்தில் எதையும் பேச பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. இதனால் 2006 இறுதிக்காலத்துடனேயே இந்த பேச்சு இல்லாமல் போய்விட்டது. இதுதான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் புலிகள் மேற்கொண்ட முதலாவது தொடர்பு முயற்சி.

இதற்கு இரண்டு வருடங்களின் பின்னரே மீண்டும் காங்கிசுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ப.சிதம்பரம் தமிழராக இருந்ததும், மத்திய அரசில் செல்வாக்கானவராக இருந்ததும் புலிகள் அவரை தொடர்புகொள்ள காரணமாக அமைந்தது.

இந்த சமயத்தில் புலிகள் இன்னொரு வழியிலும் இந்தியாவை நெருங்கினார்கள். திமுக அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் புதல்வி கனிமொழி ஒரு கவிஞர். வழக்கமான அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் முற்போக்கான சிந்தனையுடையவர். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாட்டு பேராசிரியர் ஒருவர் மூலம் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிற்கும், கனிமொழிக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது. ஏற்கனவே சிதம்பரத்திற்கு அனுப்பிய அதே செய்தியை கனிமொழிக்கும் புலிகள் அனுப்பினார்கள். சிதம்பரத்திற்கு அனுப்பிய விவரத்தையும் சொல்லி, சிதம்பரத்தை இந்த விடயத்தில் அக்கறையெடுக்க வலியுறுத்துமாறும் நடேசன் கேட்டுக் கொண்டார்.

செப்ரெம்பரில் சிதம்பரத்திற்கு புலிகள் ஒரு மெசேஜ் அனுப்பினாலும், அது சரணடைவிற்கான சமரசமல்ல. இந்தியாவின் நாடி பிடித்து பார்த்து, புலிகளின் தரப்பில் விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியை மத்திய அரசிற்கு முன்னரே தெரியப்படுத்தலாம் என்பதே நோக்கம்.

2009 ஜனவரியில் அமெரிக்கா, ஏப்ரலில் இந்தியா தேர்தல்களை புலிகள் எதிர்பார்த்தார்கள் என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அமெரிக்காவை இலங்கை விவகாரத்தில் தலையிட வைக்கும் பொறுப்பை குமரன் பத்மநாதன் ஏற்றிருந்தார். அவரிடம் 2008 இல் மீண்டும் சர்வதேச பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுவிட்டது. மலேசியாவில் இருந்தபடி கே.பி விடயங்களை கையாண்டார். எனினும், அமெரிக்க தலையீட்டு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தேர்தலில் வென்றாலும், ஈழ விவகாரத்தில் ஒரு அளவிற்கு மேல் நம்மால் செயற்பட முடியாதென பராக் ஒபாமா தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்தது.

இராணுவத்தை முன்னகர விடாமல் தடுத்து வைப்பதும் புலிகளிற்கு முடியாத காரியமாக இருந்தது. இந்தியாவிற்கு புலிகள் மெசேஜ் அனுப்பிய பின்னர், 2008 ஒக்ரோபரில் மணியங்குளம், வன்னேரிக்குளம், ஜெயபுரம், நாச்சிக்குடா, கிராஞ்சி, ஜெயபுரம், பூநகரி, வலைப்பாடு என வரிசையாக நகரங்கள் இராணுவத்திடம் விழுந்து கொண்டிருந்தது.

பிரபாகரன் போட்ட ஏழு மாத கணக்கை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்தியாவிற்கு அனுப்பிய தூது, இந்திய, அமெரிக்க தேர்தல்கள் அனைத்தையும் மனதில் வைத்து, இராணுவத்தின் முன்னகர்வை தடுக்க புலிகள் ஜெயபுரத்தில் பெரும் மண் அணையொன்றை அமைத்திருந்தார்கள். அந்த மண் அணை அமைக்கப்பட்ட விதம், அதை இராணுவம் எப்படி தகர்த்தது என்பது பற்றிய விபரங்களை விலாவாரியாக பின்னர் குறிப்பிடுவோம்.

புலிகள் ஜெயபுரத்தில் இருந்து நாச்சிக்குடா வரை பன்னிரண்டு அடி உயர மண் அணை அமைத்திருந்தனர். இதன் முன்பக்கத்தில் பாரிய குழி. இராணுவம் கவச வாகனத்தில் வர முடியாது. முன்னேறி வரும் இராணுவமும் அந்த குழியை கடந்துதான் மண் அணையில் ஏற முடியும். இதற்குள் மண் அணையின் உச்சத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழியில் இருக்கும் புலிகள், இராணுவத்தை சுட்டுவிட முடியும். இந்த மண் அணையில் புலிகளின் அணிகள் நிலைகொண்டிருந்தபோது தளபதி பானு அந்த பகுதிக்கு பொறுப்பாக இருந்தார். இந்த மண் அணையை இராணுவம் கைப்பற்றியது புலிகளின் சரியான திட்டமிடலின்மை காரணமாகவே. மண் அணையை புலிகள் முழுமையாக அமைக்கவில்லை. ஜெயபுரத்திற்கும் பல்லவராயன்கட்டிற்கும் இடைப்பட்ட வெட்டவெளி பகுதியில் 400 மீற்றர் நீளமான பகுதியில் மண் அணை அமைக்கப்படவில்லை. அதுபோல கிராஞ்சிக்கு அண்மையிலிருந்த நீர்ப்பரப்பு ஒன்றிற்கு எதிரிலும் மண் அணை அமைக்கப்படவில்லை. இரண்டு பகுதியிக்குள்ளாளும் இராணுவம் முன்னேறாது என பானு கணக்கிட்டிருந்தார். இரண்டரை மாதம் இந்த மண் அணையை தகர்க்க முடியாமல் இராணுவம் திண்டாடி, இறுதியில் இரவோடு இரவாக இராணுவ அணியொன்று வெட்டவெளியை கடந்து, புலிகள் மண் அணை அமைக்காத பகுதிக்குள்ளால் நுழைந்து, புலிகளின் பெரும் மண் அணையை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தனர்.

சிதம்பரம் மூலம் இந்தியாவுடன் பேச்சு நடத்தும் சமயத்தில் இராணுவத்தால் தொடர்ந்து முன்னேற முடியாதென்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென புலிகள் திட்டமிட்டதும் நடக்கவில்லை.

புலிகளின் சிறிய மண் அணையொன்றை உடைக்க முயன்ற இராணுவ சிப்பாய்களின் கதி

குறைந்த பட்சம் அமெரிக்க தேர்தல்வரையாவது இராணுவத்தை கிளிநொச்சிக்கு அண்மையாகவும் வராமல் தடுக்க வேண்டுமென புலிகள் நினைத்தார்கள். அதுவும் நடக்கவில்லை.

புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக குமரன் பத்மநாதன் அப்பொழுது தாய்லாந்து, மலேசியாவில் இருந்து செயற்பட்டார். அமெரிக்க தரப்புடன், கே.பியின் ஆட்கள்தான் பேசினார்கள். பராக் ஒபாமாவின் முதன்மைசெயலாளர் மட்டத்தில் இந்த பேச்சுக்கள் நடந்தன. இந்திய தேர்தலில் பா.ஜ.க வெல்லுமென நிலவிய கணிப்பைத்தான் ஒபாமாவின் வட்டாரங்களும் நம்பினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், 2009 மே, யூன் மாதங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, யுத்தத்தை நிறுத்தலாம், அதுவரை எதுவும் சாத்தியமாகும் வாய்ப்பில்லையென்பதை அமெரிக்க தெளிவாக சொல்லிவிட்டது.

இந்த இழுபறிகள் நடந்து கொண்டிருக்க, 2009 ஜனவரியில் இராணுவம் பரந்தன், கிளிநொச்சி நகர்களை கைப்பற்றியது. இந்தியா, அமெரிக்காவை தலையிட வைக்க எந்த இடங்களை இழக்ககூடாதென நினைத்தார்களோ, அந்த இடங்களை இராணுவம் கைப்பற்றிவிட்டது.

நிலைமை கைமீறி போகிறதென நினைத்த நடேசன், பிரபாகரனுடன் ஆலோசிக்காமல் இந்தியாவுடன் ஒரு சமரச முயற்சியில் இறங்கினார். புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமாரன், சமாதானசெயலக பொறுப்பாளர் புலித்தேவன், கடற்புலிகளின் தளபதி சூசை, நீதித்துறை பொறுப்பாளர் பரா, நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தி உள்ளிட்டவர்களுடன் ஆலோசித்துவிட்டே முயற்சியை ஆரம்பித்தார். மலேசியாவிலிருந்த கே.பிக்கும் விசயத்தை சொன்னார்கள். நடேசன் வன்னியிலிருந்து ஒரு முனையில் சமரச முயற்சியை நகர்த்த, கே.பி இன்னொரு தரப்பினூடாக சமரச முயற்சியில் ஈடுபடுவதாக முடிவானது.

நடேசன் உடனடியாகவே காரியத்தில் இறங்கினார். காங்கிரசை அணுக நடேசன் தேர்வுசெய்தது ஒரு பெண்ணை!

அவர் யார்? நடேசனின் முயற்சிக்கு இந்தியாவின் ரியாக்சன் எப்படியிருந்தது? பிரபாகரன் அதை அறிந்தாரா? இவற்றை பற்றி அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here