வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை: செழிப்பான வரலாறும்… கசப்பான நிகழ்காலமும்!

மூவின மக்களையும் தரம் உயர்த்திய பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது அதனை உயர்த்திட முடியாத நிலையில் உள்ளதால் ஆலையின் நிலைமை கேள்விக்குறியாக காணப்படுகின்றது.

வாழைச்சேனை கடதாசிக் கூட்டுதாபனமானது 1951ம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு 1956ம் ஆண்டு ஆரம்பித்ததாகும். இலங்கையில் முதல் முதலாக ஆரம்பித்த கடதாசி ஆலை வாழைச்சேனை தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம். இவ் ஆலை ஆரம்பித்ததற்கு முதன்மையாக செயற்பட்டவர் மறைந்த அமைச்சர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் ஆகும்.

1956ம் ஆண்டு தொடக்கம் 1960ம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இன்மையால் பெரும் சிரமத்தை இவ் ஆலை எதிர்நோக்கியது. இதன் பின் 1960ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக இயங்கிய இவ் ஆலை அரசாங்கத்துக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது. இதன் மூலப் பொருளாக அக்காலம் வைக்கோல் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 3000ம் தொழிலாளர்கள் வேலை புரிந்தனர்.

குறிப்பான இவ்வாலை அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுத்ததால் உற்பத்தி விருது என்ற பாராட்டு விருதை இரு தடவை பெற்றுள்ளது. இவ்வேளை இவ் ஆலை மூலம் திறைசேரிக்கு வருடாந்தம் 100 மில்லியன் வரியாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் ஆலை ஒரு வியாபார ஸ்தாபனமாக இருந்ததால் இதன் வருமானம் மூலம் 1972இல் வாழைச்சேனை வோட் மெசின் ஸ்தாபிக்கப்பட்டதுடன் 1974இல் கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் 126 பேச் பரப்பில் பெரிய தலைமைக் கட்டடம் தாபிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 1976ம் ஆண்டு ஜேர்மன் அரசாங்கத்தின் கே.எஸ்.டபிள்யூ லோன் திட்டம் மூலம் எம்பிலிப்பிட்டியவில் இன்னுமொரு தேசிய கடதாசி ஆலை தாபிக்கப்பட்டது. ஆனால் இதன் கடனை எப்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி ஆலை வருமானமும், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை வருமானம் மூலமுமே நீக்கினர்.

இக்காலவேளையில் தேசிய கடதாசி ஆலை மிகவும் இலாபத்தில் ஓடியதால் இங்கு கடமை புரிந்த தொழிலாளர்கள் நன்கு கவனிக்கப்பட்டதுடன், மேலதிக கொடுப்பனவை மேற்கொண்டு ஆலையை இலாபத்தில் கொண்டு செல்வதில் மிகவும் ஊக்கமாக செயற்பட்டனர். இவ்வேளை 1997இல் ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் பொது வளங்கள் சீரமைப்பு ஆணைக்குழுவின் சிபார்சில் கம்பனியாக கொண்டுவரப்பட்டது. அதாவது தேசிய கடதாசி லிமிட்டெட் கம்பனியாக்கப்பட்டது.

இவ் கடதாசி ஆலையானது 1993க்கு முன்பு வைக்கோல் மூலப்பொருளாக கொண்டு இயங்கி பின் சூழல் அதிகார சபையில் சூழல் மாசுபடுதல் என்ற வகையில் வைக்கோல் செயற்றிட்டம் நிறுத்தப்பட்டு கழிவு கடதாசியிலேயே இயங்கி வருகின்றது. ஆனால் இதற்காக உள்ள இயந்திரங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. காரணம் யுத்தத்தை காரணம் காட்டி யுத்த காலவேளையில் இதன் தலைமையகம் இயந்திரங்களை பராமரிப்பதில் காட்டிய அசமந்தப்போக்கும் காரணமாக உள்ளது.

இதனால் இயந்திர செயற்பாடுகள் குறைவடைந்ததால் உற்பத்தி குறைவடைந்தது. உற்பத்தி குறைவடைந்ததால் கடதாசி ஆலை நஷ்டத்தில் ஓட ஆரம்பித்தது. இதனால் இங்கு தொழில் புரிந்த தொழிலாளர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக வேலை, மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதால் வருமான ரீதியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தாமாகவே சுய விருப்பத்தில் ஆலையில் இருந்து வெளியேற முனைந்தனர். இது ஐந்து தடவை இடம்பெற்றது.

ஆனால் இதன் பின்பு ஆரம்பிக்கப்பட்ட எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலை நஷ்டத்தில் இயங்கியதால் அரசாங்கம் “அவுஸ் லங்கா” என்னும் அவுஸ்ரேலியா நிறுவனத்துக்கு 30 வருட குத்தகையில் 600 மில்லியனுக்கு கொடுத்து 400 மில்லியனை பெற்றது. ஆனால் வாழைச்சேனை கடதாசி ஆலை சார்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.

முன்பு வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஒரு சொத்தாக இருந்த கொழும்பு யூனியன் பிளேஸ் தலைமை காரியாலய கட்டடம் 250 மில்லியனுக்கு விற்கப்பட்ட வேளை இதில் 50 வீதம் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பயன்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டும் அது முற்றாக நிறைவேற்றப்படவில்லை.

எனவே வாழைச்சேனை தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தை புனரமைப்பதற்கு தேவையான நிதியை வழங்கி இயந்திரங்கள், கட்டடங்கள் போன்றவை உட்பட புனரமைப்பு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும்.

மிகமுக்கியமாக மின் கட்டணத்தை செலுத்தி முடிப்பதுடன், சுற்றிவர வேலியும், பாதுகாப்பு ஏற்பாடும் மிகவும் அவசியமாகும். இன்று ஆலை போதிய பாதுகாப்பு வசதி அற்ற நிலையில் உள்ளது.

தொழிலாளர்கள் தங்கி நின்று வேலை புரியவும், தூர இட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்குவதற்கும் முன்பு தாபிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் பெரும்பாலாக விடுதிகள் மாடு, பாம்பு உறையும் இடமாக தற்போது உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அரசுக்கு வருமானம் வழங்கிய ஒரு கடதாசி ஆலை என்பதற்கு அப்பால் சிறுபான்மை மக்களை பெரும்பான்மையின தொழிலாளர்களாக கொண்டு இயங்கிய ஒரு வியாபார நிறுவனமாக இப்பகுதியில் திகழ்ந்தது. இதனாலே தெரியவல்லை ஆலை இன்னும் புனரமைக்கவில்லை என மக்கள் மனதில் கேள்வி எழுகின்றது.

தேவையான கழிவு கடதாசி மூலப்பொருள் உண்டு. கடதாசியின் தேவையும் அதிகம் உள்ளது. மிகவும் பயிற்சி பெற்ற தேவையான தொழிலாளர்கள் வளம் உண்டு. இவற்றை பயன்படுத்தி தொழிற்சாலையை முன்னோக்கி செல்வது மிகவும் அவசியமாகும்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை செயலிழந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.கணேசமூரத்தி ஆகியோர் நான்கு வருடங்களுக்குள் பார்வையிட்டனர்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பொறியிலாளர்கள் இயந்திரங்களை பார்வையிட்டனர். ஆனால் இதுவரைக்கும் எந்தவித முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை. அரசியல் பிரதிநிதிகள் ஆலைக்கு வருகை தந்து பார்வையிடுதால் ஆலை மீள இயங்குமோ என்ற சந்தோசத்தின் ஊழியர்கள் வருகை தந்து செல்கின்றனர். ஆனால் எந்த பயனையும் இன்றுவரை காணவில்லை.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை இயங்காமல் போனால் மிருகங்களின் சரணாலயமாக மாறக் கூடிய நிலைமையில் தற்போது காணப்படுகின்றது. இங்கு புறாக்கள், மாடுகள், பாம்புகள் உட்பட விலங்குகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றது. வெளிநபர்கள் சிலரது மாடுகள் தினமும் மேயும் நிலையை அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள புனரமைப்பு செய்யவும், அதன் இயந்திரங்களை திருத்தம் செய்வதற்காக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் வாழைச்சேனை கடதாசி ஆலையை முதற்கட்டமாக கடந்த 2017ம் ஆண்டு பார்வையிட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் மற்றும் முன்னாள் ஆலையின் தவிசாளர் தேசமான்ய மங்கள சீசெனரத் ஆகியோர் ஆலையின் நிலைமைகள், இங்கு காணப்படும் இயந்திரங்களில் நிலைமைகள் தொடர்பாக இந்திய எஸ்.வீ தொழிற்சாலையின் பொறியியலாளர் குழாம் ஆலையை பார்வையிட்டனர்.

இத்தொழிற்சாலையை கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு இங்குள்ள இயந்திரங்களை திருத்தி அமைத்து சுமார் இருபது வருடங்களுக்கு பயன்படுத்துவதற்கேற்ற முறையில் மாற்றுவோம். இங்குள்ள இயந்திரங்கள் மிகவும் உறுதி வாய்ந்த மீள பயன்படுத்தக் கூடிய ஆயுட்கால உத்தரவாதம் கொண்ட ஜேர்மன் வோய்த் இயந்திரமாகும்.

இவ்வியந்திரங்களை திருத்துவதன் மூலம் சுமார் 100 மெட்றிக்தொன் காகிதங்களை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு நாளைக்கு முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான காகிதங்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் காரணத்தினால் 2000 குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இந்திய தமிழ் நாட்டிலிருந்து ஆலைக்கு வருகை தந்த எஸ் வீ கைத்தொழில்சாலையின் பிரதம பொறியிலாளர் எஸ்.பழனியப்பன் தெரிவித்தார்.

கொரிய நாட்டின் ஆயிரத்தி அறுநூறு மில்லியன் ரூபா நிதியளிப்பில் புனரமைப்பு செய்யப்படவுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலைகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தெரிவித்தனர்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை புனரமைக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இன இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சனையை முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமையும். ஆனால் வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையினை எந்த அரசாங்க காலத்தில் இயங்க வைக்கப்படும் என்ற ஏக்கம் இளைஞர்கள் முதல் முன்னாள் ஊழியர்களின் மனதில் புரியாத புதிராக கேள்வியுடன் உள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆலையை பார்வையிட வருகை தரும் அரசியல் பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைகளை மக்களுக்கு வழங்கி விட்டு செல்கின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. பிரதமர் அனுமதி வழங்கினால் ஆலையை இயக்குவதாகவும், கொரியா நாட்டின் முதலீட்டாளர்களின் முதலீடு மூலம் இயங்கச் செய்ய உள்ளதாகவும் அரசியல் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால் பல வருடங்கள் கடந்து கொண்டே செல்கின்றது.

ஆலைக்கு சொந்தமான பிள்ளையார் ஆலயம் தற்போது மந்தகதியில் முன்னாள் ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் இயங்க வருகின்றது. இவ்வாலைக்கு வரும் பிரதிநிதிகள் ஆலயத்திற்கு வருகை தந்து பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஆலைக்கு செல்கின்றனர். ஆனால் ஆலயத்தையும், கடதாசி ஆலையையும் மறந்து விடுகின்றனர்.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை புனரமைக்கப்படுமோ அல்லது அரசியல் நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் சதி நடவடிக்கையாக இருக்குமோக என்ற சந்தேசம் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்னாள் ஊழியர்கள், இளைஞர் யுவதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை புனரமைக்க மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைய வேண்டும் என பலரது கோரிக்கையாக உள்ளது.

 

எனவே ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு பக்க துணையாக இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கோரிக்கையினை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here