யாழில் பத்திரிகை விநியோகத்தருக்கு அதிகாலையில் நடந்த பயங்கரம்: கேபிள் நிறுவனங்களின் போட்டி காரணம்?

காலைக்கதிர் பத்திரிகையின் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இன்று அதிகாலை கும்பல் ஒன்றால் தாக்குதல் நடத்தப்பட்டது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமைடந்த காலைக்கதிர் விநியோகஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்தார்.

பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் கொழும்புத் துறை துண்டிச் சந்தியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சராமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

“தாக்குதல்தாரிகள் 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்தனர். காலைக்கதிர் பத்திரிகை, டான் ரீவியின் பெயர்களைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் கைக்கோடாரி, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன. எனது குடும்ப நிலையைக் கூறி மண்டியிட்டதனால்தான் என்னை உயிருடன் விட்டுச் சென்றனர்“ என்று தாக்குதலுக்குள்ளான குடும்பத்தலைவர் தெரிவித்தார்.

காலைக்கதிர் பத்திரிகையை டான் ரீவி நிறுவனம் தற்போது நடத்தி வருகிறது. ஆஸ்க் என்ற கேபிள் இணைப்பை டான் தொலைக்காட்சி உரிமையாளர் நடத்தி வருகிறார்.

யாழில் கேபிள் இணைப்பு வழங்கும் இன்னொரு நிறுவனமான எல்பிஎன் இணைப்பை வழங்கும்  யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்தின் மீது டான் ரீவி நிறுவனம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. சட்டவிரோதமாக அது இணைப்பை வழங்கி வருவதாக குற்றம்சுமத்தப்பட்டு, நீதிமன்றம்வரை இந்த விவகாரம் சென்றுள்ளது.

அவர்களின் தூண்டுதல் காரணமாகவே யூஎஸ் கேபிள் சேவிஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது என சட்டத்தரணிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here