சி.க.சிற்றம்பலத்தை சமரசப்படுத்தி மீண்டும் கட்சிக்குள் அழைக்க முயற்சி: மாவையின் மகனிற்கு சொல்லப்பட்ட பதில்!

தமிழ் அரசு கட்சி மீதான அண்மைய விமர்சனங்கள், விரைவில் தேர்தல் நெருங்குவது போன்ற காரணங்களையடுத்து, கட்சிக்குள் புது முயற்சிகளில் இறங்கியுள்ளார் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன்.

இதன் ஒரு கட்டமாக தமிழ் அரசு கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீள இணைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து பல்வேறு காலகட்டத்தில், பலர் வெளியேறியுள்ளனர். அவர்களை மீள இணைப்பதில் கலையமுதன் ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

தமிழ் அரசு கட்சிக்குள் அதிகமாக ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் இருவர். முதலாமவர், சி.க.சிற்றம்பலம். மற்றவர், க.அருந்தவபாலன். இருவரையும் சமரசப்படுத்த முயற்சிகள் நடந்நதது. இதில், சி.க.சிற்றம்பலத்தை சமரசப்படுத்த முயன்றவர், கலையமுதன்.

தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டின் முன்னதாக இந்த சமரசத்தை முடிக்க கலையமுதன் விரும்பியிருந்தார். மாநாட்டிற்கு முன்னதான நாளில், சி.க.சிற்றம்பலத்தின் இருப்பிடத்திற்கு கலையமுதன் சென்றிருக்கிறார்.

சிற்றம்பலம் மீளவும் கட்சிக்கு திரும்ப வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அவரை மத்தியகுழுவில் உடனடியாக இணைப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.

இதன்போது, கலையமுதனிற்கு ஒரு “லொக்“ வைத்துள்ளார் சிற்றம்பலம்.

“நான் தமிழ் அரசு கட்சிக்கு திரும்பி வரலாம். அதிலொரு பிரச்சனையும் இல்லை. நாளையே நான் வர தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு மத்தியகுழு உறுப்பினர் பதவி தேவையில்லை. அதை நான் கேட்கவில்லை. நான் கேட்காமலே, தருவதாக ஒன்றல்ல பலமுறை கட்சியே சொன்னது- தேசியப்பட்டியல் எம்.பி பதவியை. அப்படி சொல்லி சொல்லியே பலமுறை கட்சி என்னை ஏமாற்றியது. சாந்தி சிறிஸ்கந்தராசாவை விலக்கி விட்டு, தேசியப்பட்டியல் எம்.பி பதவியை உடனே தாருங்கள். நான் கட்சிக்கு வருகிறேன்“ என கூறியுள்ளார்.

இது கலையமுதனின் சக்திக்கு அப்பாற்பட்ட விடயம். ஆளைவிட்டால் போதுமென இடத்தை காலி பண்ணிவிட்டார்.

பின்னர், தனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த சம்பவத்தை சொன்ன சிற்றம்பலம், தேசியப்பட்டியல் எம்.பியை ஏன் கோரினேன் என்பதற்கும் விளக்கமளித்துள்ளார்.

“தமிழ் அரசு கட்சி என்னை தேசியப்பட்டியல் எம்.பியாக்கினால் ஏற்பதில்லையென்ற முடிவை எப்போதோ எடுத்து விட்டேன். ஆனால், கலையமுதனிடம் அதை வலியுறுத்தினேன். அதற்கு காரணம்- கட்சிக்குள் என்ன நடந்ததென்பதை தெரியாமல், ஏதோ மாமன் மச்சான் பிரச்சனையால் வெளியேறியதைபோல சமரசத்திற்கு வந்தார். இளையவர்கள் இப்படியான முயற்சிகளிற்கு வருவதில் தவறில்லை. அதற்கு முன்னர், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மறுபக்கங்களையும் இவர்கள் அறிந்து கொண்டல்லவா வர வேண்டும். அதற்காகத்தான் தேசியப்பட்டியலை வலியுறுத்தினேன்“ என விளக்கமளித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here