விடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்!- 01

மாவைக்கும் கஜேந்திரகுமாருக்கும் தெரியாத வேற லெவல் டீலிங் இது

பீஷ்மர்

ஈழ யுத்தத்தின் இறுதியில் விடுதலைப்புலிகளை சரணடைய வைக்க பல முயற்சிகள் நடந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவையெல்லாம் எப்படி நடந்தன? அவற்றிற்கு என்ன நடந்தது? யாரெல்லாம் அதில் சம்பந்தப்பட்டார்கள் என்பதை விலாவாரியாக நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் சமயங்களில் மாவை சேனாதிராசாவும், கஜேந்திரகுமாரும் மாறிமாறி பிடுங்குப்படுவதுதானா அந்த விவகாரம்?

நிச்சயம் இல்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில், எல்லா கதவுகளும் அடைபட்ட பின்னரே நமது உள்ளூர் அரசியல்வாதிகள் அரங்கிற்கு வந்தனர். அதற்கு பல மாதங்களிற்கு முன்னரே இந்த சமரச, சரணடைவு பேச்சுக்கள் உள்வட்டத்திற்குள் ஆரம்பித்து விட்டது.

கிளிநொச்சி, புதுடில்லி, வொஷிங்டன் பின்னர் மலேசியா, ஒஸ்லோ என ஐந்து நகரங்களை மையமாக வைத்து நடந்த சிக்கலான இரகசிய பேச்சுக்கள் பற்றிய விபரங்களை இந்த பகுதியில் தரவிருக்கிறோம்.

இதற்கு முன்னர் ஒரு பிளாஷ்பேக்கிற்கு உங்களை அழைத்து செல்கிறோம்.

2009 ஜூன் மாதம். சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அப்போதைய இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது இப்படி பேசினார். ‘இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு பல முயற்சிகள் நடந்தன. இந்திய அரசும் நிறைய முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், இலங்கை அரசும் புலிகள் தரப்பிலும் அதற்கு செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு சொன்னபடி நடந்திருந்தால், புலிகள் அமைப்பு அழியாமலிருந்திருக்கும். பிரபாகரனும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு உண்டு. இறுதியுத்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் தடுத்திருக்கலாம்’. என்றார்.

ப.சிதம்பரம் சொன்ன நிறைய முயற்சிகள் எவை?

ப.சிதம்பரம்

இந்த சமயத்தில் காங்கிரசின் தமிழ்நாட்டு முக்கியஸ்தர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர், வைகோ மற்றும் நெடுமாறன் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார்கள். ‘இந்தியா மேற்கொண்ட சமரச முயற்சிகளை வை.கோ, நெடுமாறன் இருவரும் குழப்பிவிட்டனர். புலிகளிற்கு தவறான தகவல்களை கொடுத்து புலிகளை அழித்துவிட்டனர்’ என குற்றம்சாட்டினார்கள். அது உண்மையா?

எட்டு வருடங்களின் முன்னர் அந்த நாட்களில் நடந்த இரகசிய உள்சுற்று பேச்சுக்களிற்கு உங்களை அழைத்து செல்வதற்கு முன்னர், ஒரு விசயத்தை சொல்லிவிடுகிறோம். இந்த பேச்சுக்களில் கலந்துகொண்டது மிகச்சிலர்தான். புலிகள் தரப்பில் பிரபாகரன், நடேசன், பொட்டம்மான், கஸ்ரோ ஆகியோர் வன்னியிலிருந்து இதை கையாள, மலேசியா, அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் உள்ள மூவரும் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் ஐவர் இதில் சம்பந்தப்பட்டவர்கள். அதில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், பாஜகவின் முடிவெடுக்கும் மட்டத்தில் உள்ள உயர் தலைவரும், ஒரு வடஇந்திய பத்திரிகையாளரும் அடக்கம்!

அமெரிக்க ஸ்ரேற்ஸ் டிப்பார்ட்மென்ற் ஆட்களையும், நோர்வே டிப்ளோமற்ஸையும் இந்த கணக்கில் சேர்க்கவில்லை.

பல திசைகளிலும் இருந்த இந்த புள்ளிகளிற்குள் எப்படி தொடர்பேற்பட்டது என்பதை குறிப்பிடுகிறோம்.

இந்த சமரச முயற்சிகள் எப்பொழுது தொடங்கியதென்றால்… மிகச்சரியாக சொன்னால், 2008 செப்ரெம்பரில் நடந்தது. அப்பொழுதுதான் இடைத்தரகர் ஒருவர் மூலம் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் புலிகளிற்கும் தொடர்பு ஏற்பட்டது. யார் அந்த இடைத்தரகர் என்பதை பின்னர் குறிப்பிடுகிறோம். புலிகள் விட்டுக்கொடுப்பிற்கு தயாராகிறார்கள் என்ற விசயம் 2008 செப்ரெம்பரில் சிதம்பரத்திற்கு தெரிந்தது!

அதுவரை விட்டுக்கொடுப்புடனான சமரச முயற்சியொன்றிற்கும் புலிகள் தயாராக இருக்கவில்லை. தமது ராஜதந்திர தொடர்புகள் மூலம் யுத்தத்தை நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார்களே தவிர, தமது தரப்பில் விட்டுக்கொடுப்பு எதற்கும் தயராக இருக்கவில்லை. செப்ரெம்பர் மாத முயற்சியும் கிட்டத்தட்ட அதேவகையானதுதான். யுத்தத்தை கொஞ்சம் தாமதித்தால், இரண்டு நாடுகளின் அழுத்தம் மூலம் யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்தலாம் என நினைத்தார்கள். அந்த நாடுகள் இந்தியா, அமெரிக்கா!

2008 இறுதியில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தது. 2009 ஜனவரியில்தான் புதிய அதிபர் பதவியேற்பார். புதிய அதிபராக பராக் ஒபாமா பதவியேற்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. புலிகளின் அமெரிக்க நெற்வேர்க்கிலிருந்தும் இதேவிதமான ரிப்போர்ட்தான் வன்னிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதனால்தான் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டிருந்தது. சில சட்டச்சிக்கல்கள் காரணமாக இப்போது மேலோட்டமாக மட்டும் ஒரு விசயத்தை சொல்கிறோம். ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்திற்காக விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நெற்வேர்க்கிலிருந்தும் ஒரு தொகை பணம் சென்றது!

அதேபோல இந்திய பொது தேர்தலையும் புலிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்பட்டதால், ஐரோப்பிய நாடுகளை போல தமது உறுப்பினர்களை கொண்ட நெற்வேர்க் கிடையாது. ஆதரவாளர்களின் மூலமே விசயங்களை முடித்துக் கொண்டார்கள். இந்த ஆதரவாளர்கள் அரசியல்வாதிகள் என்றால், அவர்கள் மூலமே அரசியல் காய்நகர்த்தல்களையும் செய்தார்கள். 2009 ஏப்ரலில் இந்திய பொதுதேர்தல் நடக்கவிருந்தது. இதில் பாஜக கூட்டணி வெற்றியடையுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள புலிகளிற்கு ஆதரவான அரசியல் தலைவர்களும் இதேவிதமான கருத்தைதான் சொன்னார்கள். அவர்களின் அபிப்பிராயத்தை புலிகள் பெரிய விசயமாக எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருமென புலிகள் தீவிரமாக நம்பியதற்கு இரண்டு காரணம்தான் உண்டு. முதலாவது, ஊடக கணிப்புக்கள் அப்படித்தான் சொல்லியது. இரண்டாவது, வட இந்திய பத்திரிகையாளர் ஒருவர். இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையொன்றின் ஆசிரியர்பீடத்தின் உயர்பொறுப்பில் இருந்தார். ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் இதழியல்துறையில் வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தார்.

இலங்கையின் மூத்த சட்டவாதியொருவர் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் உள்ளார். அவர் மூலம் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் கஸ்ரோவுடன் அவருக்கு தொடர்பேற்பட்டது. கஸ்ரோ ஆங்கிலத்தில் சரளமாக உரையாட மாட்டார். இது தொடர்பு சிக்கலை ஏற்படுத்தியது. வடஇந்தியர் சாதாரண ஆள் கிடையாது, அரசு உயர்மட்டங்களுடன் தொடர்பை வைத்துள்ள ஆள் என்பதை தெரிந்ததும் புலிகளின் அமெரிக்க நெற்வேர்க்கில் இருந்த ஒரு சட்ட புலமையுள்ளவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

புலிகளின் சர்வதேச விவகார பொறுப்பாளரான கஸ்ரோ

பாஜக அரசின் மூத்த தலைவர் ஒருவருடன் 2008 ஒக்ரோபரில் அந்த வடஇந்திய பத்திரிகையாளர் பேசினார். புலிகளின் வாக்குறுதி, எதிர்பார்ப்புடன் அவர் சென்றிருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் நலன்களிற்கு இடையூறாக இருக்கமாட்டோம் என்ற புலிகளின் வாக்குறுதியை பத்திரிகையாளர் வழங்கினார். அதேபோல, பாஜக ஆட்சிக்கு வந்ததும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வைக்க வேண்டுமென்றும் கேட்டார். அந்த தலைவர் சிவசேனையில் தீவிர ஈடுபாடுடையவர். அவரை கவிழ்ப்பதற்கு வட இந்திய பத்திரிகையாளர் ஒரு உத்தியை கையாண்டார். வடக்கு கிழக்கில் இராணுவத்தால் அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் பற்றிய ஆவணத் தொகுப்பொன்றையும் தயாரித்து தர வேண்டுமென வன்னிக்கு சொல்லி, அதை எடுத்து வைத்திருந்தார். அந்த ஆவண தொகுப்பையும் பாஜக தலைவரிடம் கொடுத்தார். அந்த சந்திப்பில் பாஜக தரப்பிலிருந்து சொல்லும்படியான ரெஸ்பொன்ஸ் வரவில்லை.

ஆனால், ஒரு வாரத்தில் அந்த பத்திரிகையாளரை மீண்டும் சந்திக்க அழைத்த பாஜக தலைவர், புலிகள் கேட்ட வாக்குறுதியை கொடுத்தார். அதாவது, 2009 ஏப்ரலில் இந்திய பொது தேர்தலில் பாஜக வெற்றியடைந்திருந்தால், இலங்கையில் யுத்தத்தை நிறுத்த முழு அழுத்தம் கொடுத்திருக்கும்.

2008 நவம்பர் மாவீரர் தினத்திற்கு முன்னர், விசுவடுவில் பிரபாகரன் அனைத்து தளபதிகள், இளநிலை தளபதிகளை அழைத்து சந்திப்பொன்றை செய்தார். அதில் அவர் சொன்னது- ‘இந்த யுத்தத்தை வெல்வதென்றால் இரண்டு விசயம் நடக்க வேண்டும். ஒன்று புதிதாக 25,000 போராளிகளை திரட்டி என்னிடம் தாருங்கள். நான் இந்த யுத்தத்தை வென்று காட்டுகிறேன். அல்லது, கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றாமல் ஏழு மாதங்கள் தடுத்து வைத்திருக்க வேண்டும்’.

அதென்ன ஏழு மாத கணக்கு? கிளிநொச்சி?

இதில்தான் விசயமே இருக்கிறது. என்னதான் அமெரிக்கா இந்த விசயத்தில் தலையிட்டாலும், இந்தியாவின் விருப்பமின்றி எதுவும் நடக்காதென்பது புலிகளிற்கும் தெரியும். ஏப்ரல் தேர்தலில் பாஜக வென்றாலும், பதவியேற்று எல்லாம் பங்சன் பண்ண தொடங்க, மே மாதமாகும்.

கிளிநொச்சிதான் புலிகளின் தலைநகரம் என்ற அபிப்பிராயம் உள்ளது. மே மாதம் வரை இராணுவத்தால் கிளிநொச்சியை பிடிக்க முடியவில்லையென்றால், ‘உங்களால் இனி முடியாதப்பா. அங்கே மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்’ என இராஜதந்திர அழுத்தம் கொடுக்கலாம். மாறாக, கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றினால், பாஜக அழுத்தம் கொடுத்தாலும், ‘இதோ பாருங்கள் மிஸ்டர் இந்தியா, புலிகளின் தலைநகரத்தையே நாம் கைப்பற்றி விட்டோம். இன்னும் நான்கு மாதம் பொறுங்கள். கடைசி புலியையும் வேட்டையாடி விடுகிறோம்’ என இலங்கை முரண்டுபிடிக்கலாம்.

இந்த இழுபறி காலமாக புலிகள் கணித்தது ஒரு மாதம். ஆக மொத்தம் 2009 யூன் மாதம் வரை ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள் புலிகள்.

ஒரு இடைத்தரகர் மூலமாக செப்ரெம்பர் மாதமே காங்கிரசின் ப.சிதம்பரத்திற்கு புலிகளின் சமரச நிலைப்பாடு அறிவிக்கப்பட்டதென்று சொன்னேன் அல்லவா, அது யாரால் அறிவிக்கப்பட்டது? புலிகள் அனுப்பிய தகவல் என்ன? அதற்கு பதிலாக சிதம்பரம் அனுப்பிய புரபோஷல் என்ன? இடைத்தரகராக இருந்தது யார் போன்ற விசயங்களை அடுத்தவாரம் குறிப்பிடுகிறேன்.

(தொடரும்)

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here