மற்ற ஆண்களுடன் பழகுவதை எனது கணவர் தடுப்பதற்கு என்ன காரணம்?: மனமே நலமா?

உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்

பதிலளிக்கிறார்
கு.நக்கீரன்
உளவள ஆலோசகர்

பெயர் குறிப்பிடவில்லை
கொக்குவில்

நான் 30 வயதுப் பெண். ஆசிரியையாகப் பணி புரிகின்றேன். எனக்குத் திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றான். கணவர் 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது என்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியர் ஒருவர் (என் நிலைமை தெரிந்தும்) என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகின்றார். எனக்கும் அவரைப் பிடித்திருக்கின்றது. ஆனால் இதை எப்படி என் குடும்பத்திற்கும், மகனுக்கும் புரிய வைப்பது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்?

பதில்- சகோதரி! எங்கள் சமுதாயத்தில் உங்களுக்கு மட்டுமல்லாது அநேகப் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை உள்ளது உண்மை. இன்று எமது சமூகத்தில் ஏராளமான கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் 28 வயதில் இருந்து 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களுக்கான மறுவாழ்வு மிக மிக அவசியமானதும், அவசரமானதும் ஆகும். ஏனெனில் இன்று எமது சமூகத்தில் வெளிப்பட்டுள்ள பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும், ஆரோக்கியம் சார் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் இதுவே.
(நான் கூறும் தகவல்களை இட்டு நீங்கள் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நான் இப்போது கூறப்போகும் விடயங்கள் பொதுவாகவே உள்ள சமூகப் பிரச்சினைகள் என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளுங்கள்.)

முக்கியமாக கொலைகள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழில், மற்றும் பாலியல் தொற்று நோய்கள் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் இந்த வாழ்க்கைத் துணை அற்ற பெண்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். எனவே இளம் விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வு பற்றி கட்டாயம் சமூகத்தின் தலைமைகள், குடும்பத் தலைமைகள் சிந்திக்க வேண்டியுள்ளது. சரி இப்போது உங்களின் பிரச்சினைக்கு வருவோம்.

உங்களுக்கான புதுவாழ்வு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அது மிகவும் அவசியமான ஒன்று. எனினும் அப் புது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும்போது மிகவும் கவனமாகவும், அறிவுபூர்வமாகவும், பொறுப்புடனும், உணர்வுபூர்வமாகவும் சிந்தித்துச் செயற்பட வேண்டியது முக்கியமானதாகும்.

உங்களை விரும்புபவர் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய உடலியல், உளவியல், சமூகவியல் வாழ்க்கைத் தேர்ச்சிகளைக் கொண்டவராயின் மிக நன்று.

மற்றபடி உங்கள் குடும்பத்தாருடன் இது விடயமாக ஆறுதலாகவும், தெளிவாகவும் உங்கள் நிலைப்பாட்டை விவரியுங்கள். ஏன் மகனுடன் கூட இது தொடர்பாகக் கதையுங்கள். அவரின் மனநிலையை உங்களுக்குச் சாதகமான முறையில் மாற்ற முயலுங்கள். குறிப்பாக புதிய வாழ்க்கைத் துணை பற்றிய மகனின் மனப்பாங்கை நேர்முகப்படுத்துங்கள். இவற்றை கஸ்டமான காரியங்களாக நீங்கள் உணர்வீர்களாயின் ஒரு உளவள ஆலோசகரின் நேரடி உதவியை நாடுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது.

வத்சலா (25)
சுன்னாகம்

ஒரு வருடத்திற்கு முன் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். கல்யாணத்தின் பின் பிற ஆண்களிடமோ, பிற வீட்டாரிடமோ அவர் என்னைப் பேச அனுமதிப்பதில்லை. அப்படி அவர் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னால் தனியாக தினமும் வீட்டில் அடைந்து கிடக்கவும் முடியவில்லை. அவர் என்மேல் சந்தேகப்படுகின்றாரோ என்று வருத்தமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள்?

பதில்- அன்புச் சகோதரி! உங்கள் பிரச்சினை கூட ஒரு பொதுவான பிரச்சினைதான். குறைந்தளவான சதவீதமான ஆண்கள் இவ்வாறு நடந்து கொள்வதுண்டு. இது ஒரு விதமான உள வியாதி என்றுகூடக் கூறலாம். ‘முறையற்ற ஆளுமைப் பண்பு’ என்று இதைக் கூறுவர். உண்மையில் உங்கள் கணவன் உங்கள் மீதான அதீத கவர்ச்சி, பாசம், காதல் போன்றவற்றின் காரணமாகக் கூட இப்படி நடந்து கொள்ளலாம். சில வேளைகளில் உங்களின் சில வாழ்க்கை முறைகள் கூட அவருக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியிருக்கலாம்.

உதாரணமாக வேகமாக வண்டி ஓட்டும் ஒருவருக்கு விபத்து ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு அதிகமாக இருக்கும் என்பது யதார்த்தம். அதேபோல சில சில வாழ்க்கை முறைகள் சிலசில வேளைகளில் அவர்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ சில பிரச்சினைகளைத் தேடித்தரும். உதாரணமாக மிகவும் அன்னியோன்யமாக பழகும் இயல்பு சிலரிடம் இருக்கும். இவர்களின் இந்த இயல்பை சிலர் தவறாகக் கையாள முயல்வர். அப்படியான வேளைகளில் தேவையற்ற பிரச்சினைகள் வெளிக் கிளம்புவதும் உண்டு. இதைக் கருத்திற் கொண்டு இவ் விடயத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல் உங்கள் கணவர் போன்ற சிலர் தவறாகக் கையாள்வதால் சிலரின் வாழ்வு தற்கொலையில் கூட முடிவதுண்டு.

இதைவிட சிலவேளைகளில் உங்களின் அழகு கூட உங்கள் கணவரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். தனக்கு மட்டுமே சொந்தமான அழகை யாரும் பறித்துவிடக் கூடாதே என்று பயப்படுகின்றார் போலும். மொத்தத்தில் உங்கள் கணவர் உங்கள் நிலையைத் தவறாகப் புரிந்து கொள்கின்றார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால் போதுமானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் கணவரிடம் பக்குவமாக இதனை எடுத்துச் சொல்லி அல்லது ஒரு உளவள ஆலோசகரின் உதவியின் மூலம் புரிய வைப்பதுதான்.


சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் உள்ளதா? உடனே எமக்கு எழுதி அனுப்புங்கள். மனநல நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை தர தயாராக இருக்கிறார்கள்.

pagetamilmedia@gmail.com 
அல்லது
0766722218

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here