
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாமில் இருந்து இரண்டாவது நாளாகவும் மரணதண்டனை விதிக்க பயன்படுத்தப்படும் பெருமளவு வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய தௌபீக் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தளபதியாக கருதப்படும் மொஹமட் மில்ஹான் அண்மையில் சவுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையில் அவர் கக்கிய தகவலின் அடிப்படையில் ஒல்லிக்குளம் பகுதியில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாமில் நேற்று முன்தினம் தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது பெருமளவான வெடி பொருட்கள், மரணதண்டனை விதிக்க பயன்படுத்தும் சீனத்தயாரிப்பு வாள்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் மில்ஹான் மற்றும் சஹ்ரானின் வாகன சாரதியான கபூர் மாமா எனப்படும் மொஹமட் சரீப் ஆதம்லெப்பை ஆகியோர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஒல்லிக்குளம் அழைத்துவரப்பட்டு இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 300 ஜெலிக்நைட் குச்சிகள்,1000 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்று நேற்று காலையும் பயங்கவாதிகள் இருவரும் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சீன தயாரிப்பு வாள்கள் 49 மற்றும் நாட்டு வாள்கள் 05 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விசேட அதிரடிப்படையின் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ள.
ஒல்லிக்குளத்தில் இருந்த ஐ.எஸ் முகாம் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. சஹ்ரான் குழுவின் பிரதான முகாமாக இதுவே செயற்பட்டுள்ளது. அவர்களின் வெடிபொருள் பயிற்சி, குண்டு தயாரிப்பு பணிகள் இங்கேயே நடந்துள்ளன.
வவுணதீவு பொலிஸார் இருவரின் கொலையும் இந்த இரண்டு பயங்கரவாதிகளின் தலைமையில் நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
