
காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளின் போது காங்கிரஸுக்கு கிடைத்த படுதோல்வியால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதை அக்கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்து அவரையே அப்பதவியில் தொடர வலியுறுத்தினர்.
இதற்கு செவிசாய்க்காத ராகுல் தனது ராஜினாமா நிலையில் உறுதியாக உள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அகமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட சிலரை தவிர அவர் யாரையும் சந்தித்து பேசவில்லை. இதனால், வேறுவழியின்றி ராகுலுக்கு மாற்றாக தலைவர் பதவிக்கு புதியவரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி ராஜினாமா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தி தொடர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். என்னை பொறுத்தவரையில் இது அவரது உறுதியான முடிவு. எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க விரும்பவில்லை.
அடுத்த தலைவர் யார் என்பதை காங்கிரஸ் காரிய கமிட்டியே முடிவு செய்யும். யார் அடுத்த தலைவர் என வெளியாகும் தகவல் அனைத்தும் புரளியே. இதில் உண்மை ஏதுமில்லை. ராகுல் காந்தி ராஜினாமா விஷயத்தில் காரிய கமிட்டி இறுதி முடிவெடுத்தால் மட்டுமே அடுத்த தலைவர் குறித்த பரிசீலினை தொடரும்’’ எனக் கூறினார்.
