ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கலங்க வைத்த அவுஸ்திரேலிய அகதி!

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை பிரதி ஆணையரிடமிருந்து மார்டின் என்னால்ஸ் விருதை பெற்ற அஸீஸ்

அவுஸ்திரேலிய அரசு பின்பற்றிவரும் இறுக்கமான அகதிக் கொள்கைகளால் மனுஸ், நவுறு தீவுகளிலுள்ள அகதிகள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள், முதன்முறையாக நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்னாள் அகதியொருவரால் வெளிப்படுத்தப்பட்டது.

தற்போது சுவிற்சர்லாந்தினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள, மனுஸ்தீவின் முன்னாள் அகதி அப்துல் அஸீஸ் முஹமட் நேற்று (27) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 41வது கூட்டத் தொடரில் அகதிகள் விவகாரத்தை பேசி, உலகின் மனச்சாட்சியை உலுப்பினார்.

‘மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள அகதிகள் அவுஸ்திரேலிய அரசின் அகதிக்கொள்கையால் சீரழிக்கப்படுகிறார்கள். நீண்ட காலத்தனிமைப்படுத்தலினால் அங்கு அந்த அகதிகள் அனுபவித்துவருவது மிகப்பெரியதொரு மனிதப்பேரழிவு’ என்று அவர் குறிப்பிட்டார்.

“மனுஸ் தீவிலிருந்து நான் விடுதலையாகி வந்திருப்பினும் அங்கு மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கொடிய துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பெரும் வதைகளை அனுபவித்துவருகிறார்கள். கடந்த மே மாதம் முதல் நூறு அகதிகள் மனுஸ் தீவில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றால் அங்குள்ள நிலமையை எண்ணிப் பாருங்கள்“ என்றார்.

அவரது பேச்சு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பலரையும் கலங்க வைத்ததாக ஏஜென்ஸி செய்திகள் குறிப்பிடுகின்றன.

2013 ம் ஆண்டு சூடானிலிருந்து வெளியேறி கடல்வழியாக கிறிஸ்மஸ் தீவிற்கு வந்த அப்துல் அஸீஸ் முஹமட், மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து தொடர்ந்தும் அகதிகளுக்காக குரல் கொடுத்துவந்தார்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக மனுஸ் – நவுறு அகதிகள் பிரச்சனைகளை அவர் வெளியிட்டு வந்தார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் அவர் வெளியிட்ட தகவல்களை ஆவணமாக்கின.

உலகளவில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களிற்காக சுவிற்சர்லாந்து அரசு வழங்கும் உயரிய விருதான மார்டின் என்னால்ஸ் 2019 விருதுக்காக அப்துல் அஸீஸ் முஹமட் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் மனுஸ் தீவில் அகதி முகாமில் இருந்தார்.

சுவிற்சர்லாந்து அரசின் விசேட விசாவில் சுவிற்சர்லாந்திற்கு அழைக்கப்பட்டு, விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். விருதை பெற்றுக்கொண்டு உணர்ச்சிமிகு உரையொன்றையும் நிகழ்த்தினார். அத்துடன் விருதை அகதிகளிற்கு சமர்ப்பித்தார்.

அப்போது அவருக்கு சுவிற்சர்லாந்தில் புகலிடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here