தி.மு.கவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இணைந்தார்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிய பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன், தங்க தமிழ்ச்செல்வனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்ட நிலையில், தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டேன், எனவே அவரை பற்றி பேச ஒன்றும் இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணையக்கூடும் என்று சமூக வலைதளங்களில் பரவலாக கருத்துக்கள் பரவின.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். விரைவில் பெரிய அளவில் விழா ஒன்றை நடத்தி, தனது ஆதரவாளர்களையும் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் இணைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here