
எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று இந்த உறுதியை அளித்துள்ளது.
மரண தண்டனையை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்காக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடயவியலாளர் மலிந்த செனவிரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மரணதண்டனைக்கு இடைக்கால தடைவழங்கி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதனூடாக பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார்.
இதன்காரணமாக மரண தண்டனையை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்காக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக விளக்கமளிக்கயிலேயே, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் மரணதண்டனை நிறைவேறாது என்ற உறுதிமொழியை வழங்கினார்.
