வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கும் இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கும் முனைப்புடன் உள்ள இலங்கை அணி இன்று தென்னாபிரிக்காவுடன் மோதுகிறது.

செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 35வது லீக் ஆட்டம் இது.

2 வெற்றி, 2 தோல்வி, 2 முடிவில்லை என்று 6 புள்ளிகள் பெற்றுள்ள இலங்கை அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியும். ஒன்றில் தோற்றாலும் சிக்கல் தான்.

அடிக்கடி கப்டன்கள் மாற்றம், போதிய அனுபவம் கிடையாது, சொல்லிக்கொள்ளும்படியான அதிரடி சூரர்களும் இல்லை. இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இலங்கை அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்தை தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுவும் 232 ரன்கள் மட்டுமே எடுத்து அதை கொண்டு இங்கிலாந்தை 212 ரன்களில் சுருட்டி அசத்தியது. ‘யோர்க்கர் மன்னன்’ மலிங்க 4 விக்கெட்டுகள் வீழ்த்தி விசுவரூபம் எடுத்தார். அந்த வெற்றி இலங்கையின் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) வெற்றி கண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. தென்னாபிரிக்க அணியில் துடுப்பாட்டம் மோசமாக உள்ளது. குயின்டன் டி கொக் எடுத்த 68 ரன்களே தனிநபர் அதிகபட்சமாக உள்ளது. இதே போல் பந்து வீச்சும் பெரிய அளவில் இல்லை. இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். இது அந்த அணிக்கு சம்பிரதாய மோதல் என்றாலும் முடிந்த வரை உயரிய நிலையுடன் தாயகம் திரும்ப விரும்புவார்கள்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்ற போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் தோற்றது. அந்த தோல்விக்கு இலங்கை வீரர்கள் பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்னாபிரிக்கா: அம்லா, குயின்டன் டி கொக், பொப் டு பிளிஸ்சிஸ் (கப்டன்), மார்க்ராம் அல்லது டுமினி, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா அல்லது பீரன் ஹென்ரிக்ஸ், நிகிடி, இம்ரான் தாஹிர்.

இலங்கை: கருணாரத்ன (கப்டன்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், மத்யூஸ், ஜீவன் மென்டிஸ், தனஞ்ஜெய டி சில்வா, திசர பெரேரா, உதனா, மலிங்க, லக்மல்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here