
செம்மலை- நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் எங்களுடைய உரித்தை நிலைநாட்டும் வகையில் 6ம் திகதி பெருமெடுப்பில் பொங்கல் விழாவை நடத்தபோவதாக வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் கூறியுள்ளாா்.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.
இதன்போது மேலும் அவா் கூறுகையில்,
செம்மலை- நீராவியடி ஏற்ற பிள்ளையாா் கோவில் மிக நீண்டகாலமாக தமிழ் மக்களால் வழிபடப்பட்ட ஆலயம். பின்னா் போா் காரணமாக மக்கள் இடம்பெயா்ந்த நிலையில் அந்த பிள்ளையாா் ஆலயத்தில் இராணுவத்தினா் முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், அங்கு சிறிய புத்தா் சிலையையும் வைத்தனா். பின்னா் இராணுவத்தினா் உதவியுடன் அங்கு பௌத்த பிக்கு ஒருவரும் வந்து தங்கிய நிலையில், சிறிது சிறிதாக பிள்ளையாா் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை கட்டப்பட ஆரம்பித்தது. இதனையடுத்து பிள்ளையாா் ஆலய நிா்வாகம் நீதிமன்றில் வழக்கு தொடா்ந்த நிலையில் இரு தரப்பினரும் ஒற்றுமையாக தமது வழிபாடுகளை நடத்தலாம் என நீதிமன்றம் கட்டளை வழங்கியது. ஆனாலும் அங்குள்ள பௌத்த பிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள மக்களை அழைத்துவந்து தமிழ் மக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும், அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொள்வதுமாக பல பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில், எங்களுடைய பூா்வீகமான மண்ணில், எங்களுடைய வழிபாட்டு தலத்தில் எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக எதிா்வரும் மாதம் 6ம் திகதி பாரிய பொங்கல் விழா ஒன்றை பிள்ளையாா் ஆலய நிா்வாகத்தில் உள்ள இளைஞா்களும், பொதுமக்களும் இணைந்து ஒழுங்கமைத்திருக்கின்றாா்கள்.
இந்த பொங்கல் விழாவுக்காக சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, சில அடிவருடிகளால் சிங்கள மக்களுக்கு தரைவாா்த்து கொடுக்கப்பட்ட தமிழா்களின் பூா்வீக கிராமமான கோட்டைகேணி பிள்ளையாா் ஆலயத்திலிருந்து மடப்பண்டங்கள் எடுத்துவரப்பட்டு பூசை வழிபாடுகளும், பொங்கல் விழாவும் இடம்பெறும் என்றாா்.
