இன்று தி.மு.கவில் இணைகிறார் தங்க தமிழ்செல்வன்!

அ.ம.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் இணைய இருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.கவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுள் இவரும் ஒருவர். அ.தி.மு.கவை விட்டு வெளியேறிய பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார்.

இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நடவடிக்கைகளை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசத் தொடங்கினார். டி.டி.வி.தினகரனை பற்றி அவர் பேசிய பரபரப்பு ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அ.ம.மு.க நிர்வாகி ஒருவருடன் போனில் பேசும் தங்க தமிழ்ச்செல்வன், “நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் எல்லாம் அழிந்து போவீர்கள்” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இந்த ஆடியோ வெளியான மறுநாளே தங்க தமிழ்ச்செல்வனின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் சென்னை வந்து டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் “தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு சரியில்லாமல் இருந்தால் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது இருக்கும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், அதன் பிறகும் தங்க தமிழ்ச்செல்வன், “டி.டி.வி.தினகரனிடம் தலைமைப் பண்பு இல்லை. தீவிரவாத அமைப்பின் தலைவர் போல அவர் பேசுகிறார்” என்று பதிலடி கொடுத்திருந்தார். இவ்வாறு டி.டி.வி.தினகரன் – தங்க தமிழ்ச்செல்வன் இடையே இருந்த மோதல் மேலும் அதிகரித்தது.

இந்தநிலையில், நேற்று பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், “தங்க தமிழ்ச்செல்வனை நீக்குவதாக அறிவித்துள்ளேன். எனவே அவரை பற்றி மேலும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டார்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அவர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 11 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைய இருக்கிறார். அவருடன் தேனி மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.செல்வேந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரும் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கின்றனர்.

விரைவில் பெரிய அளவில் விழா ஒன்றை நடத்தி, தனது ஆதரவாளர்களையும் தி.மு.கவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைக்க இருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here