‘ஒக்ரோபர் குழப்பத்தின்போது கூட்டமைப்பிற்கு கிடைத்த வரப்பிரசாதங்களை மக்கள் நலன்சார்ந்து செயற்படுத்தவில்லை’: ஜனநாயக போராளிகள் கடும் குற்றச்சாட்டு!


“ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தின் போது கிடைத்த வரப்பிரசாதங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்ததாக பாவித்ததா என்பதில் எங்களிற்கு நிறைய கேள்விகளும், அதிருப்தியும் உள்ளது.“

இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்தபோது, இவ்வாறு குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை முறைமைக்கும், விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் விசாரிக்கப்பட்ட முறைமைக்குமிடையில் இருக்கும் வித்தியாசம் எம்மை ஆழ்ந்த வருத்தம் கொள்ள வைக்கிறது. இந்த விடயம் உள்ளிட்ட பல விடயங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை எம்மை மிகுந்த அதிருப்தியடைய வைக்கிறது.“ என்றும் தெரிவித்தார்.

“வேலியிலுள்ள மரத்தை வெட்டியதற்காக ஒருவர் 16 வருடங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தார். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான விசாரணைகளில், நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையை பாருங்கள். போராளிகளை விசாரித்ததை போல இந்த விசாரணையும் நடக்க வேண்டுமென சொல்லவில்லை. இவ்வளவு வெளிப்படைத்தன்மையான விசாரணையை போராளிகள் விடயத்திலும் கடைப்பிடித்திருக்கலாம் என்ற வருத்தம் எங்களிடம் உள்ளது.

ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவான மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சரியாக செயற்படவில்லையென்ற அதிருப்தி எம்மிடம் உள்ளது. ஒக்ரோபர் குழப்பத்தின் போது கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு கிடைத்த வரப்பிசாதங்களை மக்கள் நலன் சார்ந்ததாக மாற்றினார்களா என்பதில் எமக்கு அதிருப்தியுள்ளது. இந்த விடயங்களில் எமது கட்சியிலுள்ள போராளிகளும் எம்மை கேள்வி கேட்கிறார்கள்.“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here