கோயிலுக்கு நிதி மட்டுமே கேட்ட மக்கள் இன்று குடியிருக்க தனி வீடே கேட்கின்றனர்: திலகர் எம்பி பெருமிதம்!


ஒரு காலத்தில் மலையக அரசியல் என்பது கடவுள் சிலை, பஜனை கம்பம், சங்கு செகண்டி என கோயிலைச் சுற்றியே வட்டமிட்டது. அரசியல்வாதிகள் அவற்றைப் பெற்றுக் கொடுத்தே அரசியல் செய்தனர். மக்களும் தமது கோயில் கட்டுமானத்திற்கு நிதி பெற்றுக் கொடுப்பவரே சிறந்த அரசியல்வாதி என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று மக்களிடத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கோயிலுக்கு நிதி கேட்கின்றபோதும் கூட தாம் குடியிருக்க சொந்த காணியில் தனவீடு வேண்டும் எனும்கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கின்றனர். இது மலையக அரசியல் செல்நெறியில் ஏற்பட்ட பாரிய மாற்றம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழநி திகாம்பரத்தின் வழிகாட்டலில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம நான்காம் பிரிவு தோட்ட மக்களுக்கு 30 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்க உப தலைவருமான வி.சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர் சுதாகரன், உபதலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பல அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே திலகர் எம்பி மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக அரசியல் நீண்டகாலமாக மக்களுக்கு அந்நியப்பட்டே இருந்தது. அரசியல்வாதிகளை மக்கள் நெருங்க முடியாத அளவுக்கு விலகியிருந்தார்கள். அந்த கலாசாரத்தை நாங்கள் மாற்றியிருக்கிறோம். நாங்கள் மக்களுடன் மிக அண்மித்து இருப்பதுடன் எந்த தூரப் பிரதேசமாயினும் அங்கு சென்று அவர்களது குறை துறைகளை கேட்டறிந்து தீர்வை பெற்றுக் கொடுக்கிறோம். முன்பெல்லாம் அரசியல்வாதிகளை நாடி செல்லும் மக்களும் தமது ஆலயத்துக்கு நிதியையே கோரி நின்றனர்.

அரசியல்வாதிகளும் அதனைப் பெற்றுக் கொடுப்பது பாரிய அரசியல் பணியாக காட்டினார்கள். ஹட்டன் நகரில் பஜனை கம்பங்களை கையில் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள் பஸ்ஸுக்கு காத்திருந்த பரிதாபமான காட்சிகள் என கண்களில் நிழலாடுகின்றன. ஆனால் , இன்று நிலைமை மாறி இருக்கிறது. இன்று எம்மை நாடுவரும் மக்கள் தமக்கு சொந்தக் காணியும் தனிவீடும் வேண்டும் எனும் கோரிக்கையையே பிரதானமாக முன்வைக்கின்றனர். நாமும் அதனைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறோம். இனி எந்த ஆட்சி வந்தாலும் எவர் அமைச்சுப் பதவி வகித்தாலும் மக்களின் நாகரிகமான வாழ்க்கைக்கு வித்திடும் ‘எங்கள் நிலத்தில் எங்கள் வீடு’ வேலைத்திட்டத்தினை புறக்கணித்து செய்றபடமுடியாது. அந்த அரசியல் செல்நெறியை தொழிலாளர் தேசிய சங்கம் தோற்றுவித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here